Advertisment

ஆர்.கே.நகரில் மதுசூதனுக்கு ஆதரவாக பிரச்சாரம் : நடிகர் கவுண்டமணி மறுப்பு

‘என்னைக் கேட்காமல் அவதூறாக செய்தி வெளியிட்டால், அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என கவுண்டமணி தெரிவித்துள்ளார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆர்.கே.நகரில் மதுசூதனுக்கு ஆதரவாக பிரச்சாரம் : நடிகர் கவுண்டமணி மறுப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளர் மதுசூதனுக்கு ஆதரவாக தான் பிரச்சாரம் செய்வதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என நடிகர் கவுண்டமணி மறுத்துள்ளார்.

Advertisment

ஆர்.கே.நகர் நகர் தொகுதி காலியாக உள்ளதை முன்னிட்டு, வருகிற 21ஆம் தேதி இடைத்தேர்தலை நடத்துகிறது இந்திய தேர்தல் ஆணையம். இந்த தேர்தலில் அஇஅதிமுக சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷும், நாம் தமிழர் சார்பில் கலைக்கோட்டுதயமும் போட்டியிடுகின்றனர். மேலும், சுயேட்சையாகப் போட்டியிடுகிறார் டிடிவி தினகரன்.

தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், அஇஅதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக நடிகர் கவுண்டமணி தேர்தல் பிரச்சாரம் செய்ய இருப்பதாக ஒரு காலை நாளிதழில் செய்தி வெளியானது.

‘நடிகர் கவுண்டமணி, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த அவர், இதுவரையில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ததில்லை. முதன்முறையாக, கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த பழனிச்சாமி முதல்வராகி உள்ளார். எனவே, அவரது கரத்தை வலுப்படுத்தும் வகையில், மதுசூதனனுக்கு ஆதரவாக டிசம்பர் 14ஆம் தேதி கவுண்டமணி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த நடிகர் செந்தில், அதே சமுதாயத்தைச் சேர்ந்த டிடிவி தினகரனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய உள்ளார். கவுண்டமணியும், செந்திலும் திரையுலகில் ஒன்றாக இணைந்து நகைச்சுவை காட்சிகளில் நடித்தவர்கள். தற்போது அரசியல் உலகில் இருவரும் எதிரும் புதிருமாக பிரச்சாரம் செய்வது, தேர்தல் களத்தை கலகலப்பாக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன’ என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்தச் செய்தியை நடிகர் கவுண்டமணி மறுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்று ஒரு காலை நாளிதழில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்யப்போவதாக செய்தி வந்துள்ளது. அந்த செய்தி உண்மையல்ல. நான் எந்தக் கட்சியையும் சாராதவன். அரசியலிலும் இல்லாதவன்.

நான் எந்தக் கட்சியை ஆதரித்தும் பிரச்சாரம் செய்யவில்லை. என்னைக் கேட்காமல் அவதூறாக செய்தி வெளியிட்டால், அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறப்பட்டுள்ளது.

E Madhusudhanan Rk Nagar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment