Advertisment

“நான் இந்து விரோதி அல்ல” - கமல்ஹாசன்

‘நான் இந்து விரோதி அல்ல. இதேபோல்தான் முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களையும் பார்க்கிறேன்’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
kamal haasan

‘நான் இந்து விரோதி அல்ல. இதேபோல்தான் முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களையும் பார்க்கிறேன்’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஆனந்த விகடன் இதழில் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற தொடரை எழுதி வருகிறார் கமல்ஹாசன். அந்த தொடரில், “நற்பணி மன்றத்தாருடன் கடந்த 37 ஆண்டுகளாகத் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறேன். அவர்களின் ஆற்றலை நானறிவேன். ஆனால், சமீப காலங்களாக மாணவர்கள் என்னுடன் செய்யும் விவாதம் வியக்கவைக்கிறது. இது, அவர்கள் அறிந்ததை நானும் நானறிந்ததை அவர்களும் இரு தரப்பும் அறிந்ததை இந்தச் சமூகத்துக்கும் கடத்தும் ஆகச்சிறந்த கற்றல். இந்தக் கலந்துரையாடலில் பின்பற்றும் ஒரு முறையைத்தான் என் புதுப்பயணத்திலும் பின்பற்றவிருக்கிறேன்.

‘`அந்தக் கற்றல் கலந்துரையாடலை விகடனில் சொல்லப்போகிறேன்’’ என்றதும், `‘ஒன்று, மற்ற கட்சியினர் பின்பற்றுவார்கள். அடுத்து, அந்தக் கூட்டங்களில் குழப்பங்களை விளைவிப்பார்கள். அதனால் சொல்லாதீர்கள்’’ என்கிறார்கள் நண்பர்கள்.  நல்லனவற்றை, நற்பணிகளை எடுத்தாள்வதில் தவறும் இல்லை, குற்றமும் இல்லை. அப்படி எங்கள் மன்றத்தாரின் நற்பணிகளைப் பார்த்துத் தங்கள் பாதையை வடித்துக்கொண்ட, அதையே வாழ்க்கையாக்கிக்கொண்ட பலரை  நானறிவேன். அவையெல்லாம் பெருமையல்ல, என் கடமை. 35 வயதில் ‘தேவர் மகன்’ படத்தில் நானெழுதிய ‘விதை நான் போட்டது’ என்ற வசனத்தையே இந்த 63வது வயதில் துணைக்கு அழைக்கிறேன்.

ஆம், தலைவர்கள் பேச, அதைத் தொண்டர்கள் கேட்க... என்றுள்ள வழக்கமான இன்றைய அரசியல் கட்சிகளின் கூட்டங்களிலிருந்து விலகி, எங்கள் பொதுக்கூட்ட மேடைகளைக் கலந்துரையாடல்  களங்களாக  மாற்றப்போகிறோம். கூட்டம், கூடுதல் என்பது இருதரப்புக்கும் பயனுள்ள இருவழிப் பாதையாக இருக்க வேண்டும். இப்போதுள்ள ஒருவழிப்பாதை ஒழிந்துபோகட்டும் என்று சொல்லவில்லை. எனக்கும் தனியாக நின்று பேசவும் கலந்துரையாடவும் பிடிக்கும். ஆனால், தான் ஒருவன் மட்டுமே பேசி மற்றவர்கள் அனைவரையும் கேட்கவைக்கும் அளவுக்கான விஷய ஞானம் எனக்கு இன்னும் வாய்க்கப்பெறவில்லை என்பது என் கருத்து. பிப்ரவரி 21-ல் இருந்து தொடங்கவுள்ள கூட்டங்களை அப்படித்தான் வகுத்துள்ளோம்.

அதற்காக... கேட்க, பதிலளிக்க ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான மக்களை மேடையேற்றிவிட முடியாது. கேள்விகேட்க முன்பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி முன்பதிவு செய்துள்ளவர்கள் கேள்விகளைக் கேட்பார்கள். நான் பதிலளிப்பேன். என்னிடம் பதிலில்லாதபட்சத்தில், பதிலறிந்தவர்கள்  சொல்வார்கள். என் ஐயங்களை, கேள்விகளை நானும் கேட்பேன். எதிர்க்கட்சியினரையும் எதிரியாக நினைப்போரையும் சாடுவது மட்டுமே பொதுக்கூட்ட மேடை என்றும், அதுதான் இன்றைய தொலைக்காட்சி விவாதங்களின் கருப்பொருள் என்றும் ஆகிவிட்ட இந்தச் சூழலில், அந்தப் பொதுக்கூட்டங்களுக்கான மாண்பை மீட்க வேண்டும். அது நம் கடமை என்பது என் எண்ணம். இதன்மூலம் மக்களும் அவர்களின் பிரதிநிகளும் பயனுற வேண்டும் என்பது என் அவா. இது ஏதோ நான் புதிதாகக் கண்டுபிடித்ததுபோல் இதற்குக் காப்புரிமை கோர விரும்பவில்லை. இது பெரியார் போன்ற நம் முன்னோர் அளித்த கொடைமுறை.

ஏற்கெனவே நம் கால்களை நனைத்த நீர், கால் எடுத்து மீண்டும் வைப்பதற்குள் கால் மைல் தூரம் கடந்திருக்கும். இதைத்தான் ஒரே ஆற்றில் இருமுறை கால் நனைக்க முடியாது என்பார்கள். எவ்வளவு உண்மையான வார்த்தைகள். இதை நாம் நேரம், காலத்துக்கும் சொல்லலாம். விவேகமுள்ளதும் அற்றதுமான இந்த வேகச் சூழலில் யாராவது தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவோம் என்று எண்ணிப் பார்த்திருப்போமா? கிரைண்டர்களும் மிக்ஸிகளும் இலவசமாக வீட்டுக்கு வரும் என்று நினைத்திருப்போமா? அந்த வரிசையில் மதுவையும் அத்தியாவசியப் பட்டியலில் சேர்த்து டோர் டெலிவரி என்ற பெயரில் வீட்டுக் கதவைத் தட்டும் என உணர்ந்திருப்போமா? பாம்பு சட்டையை உரிப்பதுபோல் இவற்றைக் கண்டும் காணாமல் நாமும் கடக்கப் பழகிவிட்டோம்.

இனப்படுகொலை என்பது அதிகார துஷ்பிரயோகத்தால் துப்பாக்கியால் சுட்டுத்தான் நிகழ்த்தப்படவேண்டும் என்பதில்லை. உதாசீனத்தால்கூட அது நிகழ்த்தப்படலாம். அதுதான் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. விவசாயி தற்கொலைகளை மறந்தோம். அந்தச் சாவு உங்கள் வீட்டுக்கு வரும்போதுதான் வலி புரியும் என்று பாதிக்கப்பட்டவர்கள் சாபம் தந்த பிறகும் சவமாகச் சரிந்து கிடந்து கடக்கும் வித்தை பழகினோம். கல்வித்தரம் குறைகிறது, அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர் எண்ணிக்கையும் குறைகிறது, ஓராசிரியர் பள்ளி என்பதுபோல் ஒரு மாணவர் பள்ளி என்று வரும் சூழல் வெகுநெருக்கத்தில் இருக்கிறது என்ற உண்மை உணர்ந்தும் வழக்கமாகவே இருக்கப் பழகினோம். மணலைத் தோண்டி எடுத்து விற்று, ஆற்றுப் படுகைகளை எல்லாம் படுபயங்கரப் பள்ளத்தாக்குகளாக மாற்றும்போதும் யாருக்கோ நடப்பதுபோல் பாராமுகம் காட்டினோம். ஆனாலும் அரசு பரிபாலனம் சரிவர நடக்கவில்லை, இதற்கு அவர்கள் மட்டுமே காரணம் என்கிறோம்.

1957 வரை பத்து ஆண்டுகள் சுதந்திரப் போராட்ட மனநிலையில் அதே ஒழுங்கோடு இயங்கி வந்த அரசு அடுத்த அரைநூற்றாண்டுக் காலம் தடம் மாற யார் காரணம்? நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. நாம் நம் கடமையை மறந்தோம் என்பதற்கான நினைவூட்டல். வாக்களிப்பதை   ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் சடங்கு என மனம் மாறியதால் வந்த வேதனை இது. இவற்றைத் தான் மாணவர்களுடனான கலந்துரையாடலில் உணர்த்தி வருகிறேன்.

நீ என்ன பெரியாரா, கலந்துரையாடல் நடத்த என்று கேட்கலாம். மனித குலம் தன்மானத்தோடு வாழ, தான் முன்னத்தி ஏராக இருப்போம் என்று தன் சிறு பிராயத்தில் பெரியார் நினைத்திருப்பாரா? காஞ்சியில் இருக்கும்போது அண்ணாதான் அறிந்திருப்பாரா? நாடகம் நடத்திக்கொண்டு இருக்கும்போது எம்.ஜி.ஆர்தான் எண்ணியிருப்பாரா? திருவாரூரில் முரசொலிக்கு எழுதிக்கொண்டு இருக்கும்போது தான் கலைஞராவோம் என்பது அவருக்குத் தெரியுமா? இப்படி ஒருவருக்கொருவரை வழித்தடமாகக் கொண்டு வந்ததைப்போல் நம் இளைஞர்களிலிருந்து தலைவர்கள் உருவாக வேண்டும் என்பதே என் பேரவா. ஆம், அவர்கள்தாம் என் தலைவர்கள், நான் அவர்களை ஒருங்கிணைக்கும் பிரதிநிதி மட்டுமே.

நான் சிலருக்கு வேண்டப்பட்டவன், சிலருக்கு வேண்டப்படாதவன் என்கிற தோற்றத்தை உண்டாக்க, சிலர் முயற்சி செய்கிறார்கள். இந்து விரோதி என்கிறார்கள் சிலர். வீட்டிலேயே பக்தர் சந்திரஹாசனை வைத்துக்கொண்டு நான் எப்படி இந்து விரோதியாக இருந்திருக்க முடியும். என்னிடம் வேலை செய்த டிஎன்எஸ் என்கிற பெரியவர் பூஜை புனஸ்காரங்கள் என்று அலுவலகத்தையே ஆலயமாக்கி பக்தியில் திளைப்பவர், மிகப்பெரிய திறமையாளர். அவரை எப்படி நான் விரோதியாகப் பார்க்க முடியும். அவ்வளவு ஏன், சுயமாக சிந்திக்கும் வயது வரும்வரை என் பேச்சைக் கேள். அதன்பிறகு உன்னை நான் கட்டாயப்படுத்த மாட்டேன் என்றேன், மகள் ஸ்ருதியிடம். ஆனால் இன்று அவள் தீவிர பக்தை. அதற்காக அவளை நான் வெறுக்க முடியுமா? அது அவரவர் ஏற்றுக்கொண்ட வழிமுறை. நான் இந்து விரோதி அல்ல. இதேபோல்தான் முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களையும் பார்க்கிறேன். நான் யாரின் விரோதியும் அல்ல. என் நற்பணி மன்றத்தாரிடமும் இதையேதான் பின்பற்றுகிறேன்.

காந்தி, அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களையும் சமமாக பாவித்து என் ஆசானாக ஏற்று வழிநடக்கிறேன். இதற்கு என் வாழ்க்கையில் இருந்தும் என் சினிமாக்களில் இருந்தும் தொடர்ந்து உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே  இருப்பதில்  விருப்பமில்லை. இப்படிச் சொல்வதால் வாக்கரசியலுக்காகக் கமல் மாற்றிப் பேசுகிறார் என்று சிலர் விதண்டாவாதம் பேசலாம். இது வாக்கரசியல் அல்ல, பகுத்தறிவுப் புலம்பல்.

இந்திய அரசியலமைப்பின் உத்தேச வரைவை காந்தியார் அவர்களின் முன் வைத்தபோது, படித்துப் பார்க்கிறேன் என்று சொல்வதற்கு முன், சாமானியன்கூட இதன்மூலம் நியாயம் பெற முடியும்தானே என்று கேட்டாராம். ஆம், நம் அரசியலமைப்பு அப்படித்தான் இருக்கிறது. அப்படியான ஒரு கொள்கையைத்தான் எங்களின் கட்சிக்குக் கட்டமைக்கவேண்டும் என்கிற முனைப்போடு கூட்டங்கள் நடத்தி, கொள்கை விளக்கங்கள், விவாதங்கள் செய்துவருகிறோம்.

அது சில விஷயங்களில் இறுகியும் சில விஷயங்களில் இளகும் தன்மையுடனும் இருக்கவேண்டும் என நினைக்கிறோம். ஏனெனில், இசங்கள் என்பது அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்றாற்போல், மக்களின் தேவையுணர்ந்து மாறிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது என் கருத்து.

அன்றைய தினம் நன்றாக நினைவிருக்கிறது, ராஜேஸ்வரி திருமண மண்டபம். பக்கத்து இருக்கையில் எம்ஜிஆர். அன்று அவர் உச்சநட்சத்திரம். நான் வளரும் கலைஞன். ஆனால், நம்பிக்கையளிக்கும் நாயகன் என்று பேரெடுத்துவிட்டேன். ``நீயெல்லாம் வரணும், தாண்டிப்போகணும்’’ என்றார்.  ``உங்களவுக்குப் பெரிய படங்கள் பண்ணுவது சிரமம்’’ என்றேன். ``என்னையெல்லாம் படியா நினைச்சு படிப்படியா ஏறி, தாண்டிப்போகணும்’’ என்றார். அது ஓர் உரையாடல்தான். ஆனாலும் தன்னைப் படியாகக்கொண்டு தாண்டிப்போவதை அவர் ரசிக்கிறார் என்பதே எனக்கு ஆச்சர்யம்.

அவரை நான் தாண்டிப்போகவில்லை, வேண்டுமானால் சினிமாவில் நான் முதல் மாணவனாக இருக்கலாம். அரசியலில் கடைக்குட்டியாகக்கூட இருக்கலாம். ஆனால் மாணவன். மக்களிடமிருந்து கற்று அவர்களுக்கே திரும்பச் செய்யவேண்டும் என்று நினைக்கும் மாணவப் பிரதிநிதி. உங்களின் பிரதிநிதியாக பிப்ரவரி 21-ம் தேதி நேரில் சந்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment