Advertisment

'நான் யார் தெரியுமா?' - உலகிற்கு உரக்கச் சொன்ன ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்!

ஒருவேளை RTM என்றால் 'Rashid Time' என்று அரத்தமோ என்னமோ!.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
'நான் யார் தெரியுமா?' - உலகிற்கு உரக்கச் சொன்ன ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்!

ரஷித் கான் அர்மான்… வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் அணியில் மிக வேகமாக வளர்ந்து வரும் வீரர். வெறும் 19 வயதே ஆன லெக் பிரேக் கூக்ளி ஸ்பின்னரான ரஷித், சத்தமே போடாமல் உலக பேட்ஸ்மேன்களை திணறடித்துக் கொண்டிருக்கிறார். ஐபிஎல்-லில் ஹைதராபாத் அணிக்காக ஆடி வரும்  ரஷித், இந்திய ரசிகர்களுக்கு ஓரளவு அறிமுகம் என்றிருந்தாலும், இவர் தற்போது சர்வதேச அரங்கில் செய்து கொண்டிருக்கும் கபளீகரத்தை யாரும் அறிந்திருக்க அதிக வாய்ப்பில்லை.

Advertisment

நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்றுத் தொடரில், ஆப்கானிஸ்தான் அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதில் ரஷித் கான் மொத்தம் 17 விக்கெட்டுகளை அறுவடை செய்துள்ளார்.

பந்துவீச வந்தாலே, எதிரணி பேட்ஸ்மேன்கள் ‘அய்யயோ’ மோடுக்கு செல்லும் அளவிற்கு படாதபாடு படுத்திவிட்டார் மனுஷன். 17 விக்கெட்டுகள் மட்டுமல்ல, 44 ஒருநாள் போட்டியில் விளையாடி 100 விக்கெட்டுகளை வீழ்த்தி, உலகிலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். வேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்தியது கூட பெரிய விஷயமல்ல…

இவரது பவுலிங் ஆவரேஜ் எவ்வளவு தெரியுமா? வெறும் 14.40.

எகானமி எவ்வளவு தெரியுமா? 3.96.

இப்போது புரிகிறதா பேட்ஸ்மேன்கள் ஏன் இவர் பந்துவீச வந்தால் பதறினார்கள் என்று!?.

இதற்கு முன்னதாக, 52 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் முதலிடத்தில் இருந்தார். அவரது பவுலிங் ஆவரேஜ் 20.95, எகானமி 4.93. தற்போது இந்தச் சாதனையை ரஷித் கான் முறியடித்துள்ளார்.

விக்கெட் எடுப்பது மட்டுமின்றி, ரன்கள் அடிக்கவிடாமல் தடுப்பதே இவரது மிகப்பெரிய பிளஸ் பாயின்ட். அதேபோல், எந்த விக்கெட்டாக இருந்தாலும் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். கிரிக்கெட்டில் ‘தகவமைத்துக் கொள்ளுதல்’ என்பது மிக முக்கியமான ஒன்று. ஒருவர் பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி, பவுலராக இருந்தாலும் சரி… தகவமைத்துக் கொள்ளும் திறமை இருந்தால் மட்டுமே வெற்றிகளை குவிக்க முடியும். இதை நவீன கிரிக்கெட்டில் சிறப்பாக செய்துக் கொண்டிருப்பவர் டி வில்லியர்ஸ் எனலாம். இந்திய கேப்டன் விராட் கோலியையும் அந்த லிஸ்டில் சேர்க்கலாம்.

ஆனால், 19 வயதே ஆன ரஷித் கான் இதனை அற்புதமாக செய்வது தான் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு மட்டுமல்ல.. அடிலைட் ஸ்டிரைகர்ஸ், கொமில்லா விக்டோரியன்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், காபுல் ஈகிள்ஸ், சைன்ரைஸ்ர்ஸ் ஹைதராபாத் என்று உலகம் சுற்றும் வாலிபனாக மிக பிசியாக, அதே சமயம் வெற்றிகரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார் ரஷித். செல்லும் அனைத்து இடங்களிலும் தனது விக்கெட் பசியை தீர்த்துக் கொள்கிறார். ஒருநாள் பவுலர்கள் தரவரிசையில் இரண்டாம் இடம் என்ற சிம்மாசனம் இவருக்கு தான்.

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏலத்தின் போது, பஞ்சாப் அணி இவரை 9 கோடி வரை ஏலத்தில் கேட்டது. ஆனால், ஹைதராபாத் அணியோ... 'கேட்பீங்க டா... கேட்பீங்க' என்கிற தொனியில் RTM பயன்படுத்தி ரஷித்தை தக்க வைத்துக் கொண்டது. ஒருவேளை RTM என்றால் 'Rashid Time' என்று அரத்தமோ என்னமோ!.

இதெல்லாம், வெறும் தொடக்கம் தான். உலக அரங்கில் சிறிய அணியாக விளங்கும் ஆப்கானிஸ்தான் விளையாடும் சர்வதேச போட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இருப்பினும், குறைவான வாய்ப்பு கிடைக்கும் போதும் தனது அணிக்காக அபாரமாக பங்காற்றி வரும் ரஷித் கான், மேலும் பல சாதனைகளை படைக்கப் போவது உறுதி!.

கடந்த மாதம், நமது ஐஇதமிழ்-ல், ரஷித் கான், இன்னும் நான்கைந்து ஆட்டங்களில் 100வது விக்கெட்டை வீழ்த்துவார் என்று குறிப்பிட்டு இருந்தோம். நாம் இதைச் சொன்ன போது, அவர் 37 ஆட்டங்களில் 86 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். சரியாக, ஒரே மாதத்தில் 7 போட்டிகளில் மட்டும் ஆடிய ரஷித், மேற்கொண்டு 14 விக்கெட்டுகளை கைப்பற்றி சதம் அடித்துள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற மெகா அணிகளுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை ரஷித் பெறும் போது மட்டுமே, இவரது பவுலிங் திறமை குறித்து உலகளவில் போற்றப்படும். அதற்கான நேரமும் ஏற்கனவே கனிந்துவிட்டது எனலாம்.

ஆம்! டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, வரும் ஜூன் மாதம் தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

வாழ்த்துகள் ரஷித்!

Icc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment