Advertisment

கடைசிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா : ஆஸ்திரேலியா அபார வெற்றி : இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கொல்கத்தாவில் தொடங்கும் 2-வது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதியது.

author-image
WebDesk
New Update
 South Africa vs Australia Live Score updates World Cup 2023 Semi Final Kolkata in tamil

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை

worldcup 2023 | South Africa vs Australia: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று மும்பையில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Advertisment

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை)  கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய 2-வது அரையிறுதிப் போட்டியில் புள்ளிகள் ட்டியலில் 2 மற்றும் 3-ம் இடங்களை பிடித்த தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: South Africa vs Australia Live Score, World Cup 2023 Semi-Final 

டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங்... ஆஸி., பவுலிங் 

இந்தப் போட்டியில் டாஸ் தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் - கேப்டன் டெம்பா பவுமா களமிறங்கினர். ஸ்டார்க் பந்துவீச்சை எதிர்கொள்ள திணறிய கேப்டன் பவுமா முதல் ஓவரின் கடைசி பந்தில் பூஜ்ஜிய ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதேபோல் நல்ல தொடக்கம் கிடைக்கமால் போராடிய தொடக்க வீரர் குயின்டன் டி காக் 3 ரன்னுக்கு அவுட் ஆனார். 

அடுத்து வந்த ரஸ்ஸி வான் டெர் டுசென் 6 ரன்னுக்கும், 2 பவுண்டரியை விரட்டிய ஐடன் மார்க்ரம் 10 ரன்னுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். போட்டியின் போது தூறல் மழை குறுக்கிட்ட நிலையில், போட்டி சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. இந்த தருணத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்து இருந்தது.

போட்டி மீண்டும் 3:55 மணிக்கு தொடங்கிய நிலையில், களத்தில் இருந்த ஹென்ரிச் கிளாசென் - டேவிட் மில்லர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த கிளாசென் 47 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த மார்கோ ஜான்சன் டக்-அவுட் ஆகி வெளியேறினார். 

மில்லருக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து வந்த கோட்ஸி 39 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேசவ் மகராஜ் 4 ரன்களில் வீழ்ந்த நிலையில், நிதானமாக விளையாடிய மில்லர் சதம் கடந்து அசத்தினார். இறுதியில் 116 பந்துகளில் 8 பவுண்டரி 5 சிக்சருடன் 101 ரன்கள் எடுத்து 9-வது விக்கெட்டாக மில்லர் வெளியேறினார். 

இறுதிக்கட்டத்தில் ஒரு சிக்சர் அடித்த ரபாடா கடைசி ஓவரில் சிக்சர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். இதனால் தென்ஆப்பிரிக்க அணி 49.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் கம்மின்ஸ் ஸ்டார்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட், ஹெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 213 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில், டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர். இதில் அதிரடியாக விளையாடிய வார்னர் 18 பந்துகளில் ஒரு பவுண்டரி 4 சிக்சருடன் 29 ரன்கள் எடுத்து மார்க்ரம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மிச்செல் மார்ஷ் 6 பந்துகளை சந்தித்து ரன் கணக்கை தொடங்காமலே ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய மார்கஸ் லபுசேசன் ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி அவ்வப்போது பவுண்டரி அடித்த நிலையில், 31 பந்துகளை சந்தித்த லபுசேசன் 2 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்து சம்ஷி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் 1 ரன்னிலும், நிதானமாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 62 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

174 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணிக்கு 7-வது விக்கெட்டுக்கு இணைந்த இங்லிஸ் – ஸ்டார்க் ஜோடி சரிவை கட்டுப்படுத்தியது. சிறப்பாக விளையாடிய இங்லிஸ் 49 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 28 ரன்கள் குவித்து கோட்ஸி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் பேட் கம்மின்ஸ் மீச்செல் ஸ்டார்க்டன் இணைந்து ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். இறுதியில் 47.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் கோட்ஸி, சம்ஷி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ரபாடா, மார்க்ரம், மகராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து வரும் 19-ந் தேதி நடைபெற உள்ள உலககோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் ஆஸ்திரேலியா அணி மோத உள்ளது.

இரு அணிகளின் பிளேயிங் லெவன்

ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ஜெரால்ட் கோட்ஸி, ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி

சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 50 ஓவர் உலகக் கோப்பை நாக் அவுட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் கடைசியாக 1999 மற்றும் 2007ல் சந்தித்தன. இரண்டு முறையும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றது. 

தற்போது முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பை வெல்லும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா களமாடும். அதற்கு முட்டுக்கட்டை போட்டு 6-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேற ஆஸ்திரேலியா அணியினர் கடுமையமாக முயல்வார்கள். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Worldcup South Africa vs Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment