ஏன் வேண்டும் கெயில்?

கோவை, சேலம் பகுதிகளில் கடும் எதிர்ப்புக்குள்ளான கெயில் திட்டம் குறித்தும், அதன் அவசியம் என்ன என்பது குறித்தும் விவரிக்கிறார், நாராயணன்.

நாராயணன் திருப்பதி

தமிழகத்தில் கெயில் திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் வெடிக்கும் என்று கூறியிருக்கிறார், திமுக செயல்தலைவர் ஸ்டாலின்.  ஆனால் இதை எதிர்ப்பதற்கான வலுவான காரணத்தை கூற மறந்திருக்கிறார். அதோடு கூட, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு திமுகவும் ஒரு காரணம் என்பதையும் மறைத்திருக்கிறார்.

திரவமாக்கப்பட்ட எரிவாயு மறு வளிமயமாக்கல் முனையம் 2013ம் ஆண்டு கொச்சியில் 4200 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து, வருடத்திற்கு 14.4 லட்சம் டன் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய 2009ம் ஆண்டு அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் அடிப்படையில் இந்த முனையம் அமைந்தது.

பல்வேறு நிறுவனங்களுக்கு எரிவாயுவை அளிக்கும் இந்த நிறுவனம், தென் மாநிலங்களுக்கு எரிவாயுவை, குறைந்த விலையில் மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கும், உர நிறுவனங்களுக்கும், வாகனங்களுக்கான தூய்மையான எரிவாயுவை அளிப்பதற்கும், குழாய் மூலம் சமையல் எரிவாயுவை இல்லங்களுக்கு கொண்டு செல்வதற்கும், இந்த முனையத்தின் மூலமாக கேரளா, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 884 கிலோமீட்டர் தூரம் குழாய் மூலம் எரிவாயுவை கொண்டு செல்லும் திட்டத்தை மூன்று மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. கொச்சி – கூட்டநாடு – பெங்களூரு – மங்களூரு திட்டம் என்பதே இதன் பெயர்.

அதன்படி ஒவ்வொரு நாளும் 16 மில்லியன் மெட்ரிக் நிலையான கன மீட்டர் (million metric standard cubic meter) எரிவாயுவை இந்த மூன்று மாநிலங்களுக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த திட்டத்தை வடிவமைத்தது. இதன் படி, தமிழகத்தில் 310 கிலோமீட்டர் தூரத்திற்கு 7 மாவட்டங்களுக்கு மட்டும் 9 மில்லியன் மெட்ரிக் நிலையான கன மீட்டர் எரிவாயு சென்றடையும். இந்த திட்டம் துவங்கிய போது இதன் மொத்த நிதி சுமை 2915 கோடி.  இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்படும் தாமதத்தால் ஒவ்வொரு வருடமும் 400 கோடி ரூபாய்க்கும் மேலாக இழப்பு ஏற்படுகிறது.

கடந்த 2008ம் ஆண்டு, தி மு க ஆட்சி இருந்த போது, கெயில் நிறுவனம் மற்றும் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் இணைந்து ஒரு புரிந்துணர்வு  ஒப்பந்தத்தை ஏற்படுத்தி கொண்டதன் அடிப்படையிலும், அதே போன்றதொரு ஒப்பந்தத்தை கெயில் நிறுவனம் கர்நாடக அரசுடனும் ஏற்படுத்தி கொண்டதன் அடிப்படையிலும், கேரளாவிலிருந்து குழாய் மூலம் தென் இந்திய மாநிலங்களுக்கு எரிவாயு வழங்கும் மிக பெரிய திட்டத்தை முன்னெடுத்தது. மே 11, 2012ம் ஆண்டு, அதிமுக அரசு இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, சட்டசபையில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா  அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

பிரச்சினைகள் என்ன?

இந்த திட்டத்தின் படி, குழாய்கள் போகும் பாதைகள் வகுக்கப்பட்டு மாநில அரசின் தெளிவான ஒப்புதலோடு தான் தமிழகத்தில் பணிகள் துவங்கின. 22/08/2012ன் மாநில அரசின் ஆணைப்படியே இந்த பணி நடைபெறும் நிலங்களின் உரிமையாளர்களுக்கு அரசின் வழிகாட்டு மதிப்பில் 10 விழுக்காடும், 30 விழுக்காடு இழப்பீட்டு தொகையும் கொடுப்பதாக அறிவித்தது. மாநில அரசுக்கே நிலங்களின் மீதான உரிமை இருப்பதால் கெயில் நிறுவனத்திற்கும் இந்த இழப்பீட்டை நிர்ணயம் செய்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் பல மாவட்டங்களில் பெருமளவு நில உரிமையாளர்களுக்கு இந்த தொகையினை செலுத்தியது மாநில அரசு. மேலும், உச்சநீதிமன்றம் இந்த தொகையினை 01/01/2016ன் சந்தை விலையில் 10 விழுக்காடாக கொடுக்க சொல்லி உத்தரவிட்டதோடு, 30 விழுக்காடு இழப்பீடு அந்த தொகையின் அடிப்படையிலேயே கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பணிகள் துவங்கிய பின் விவசாய நிலங்களின் வழியே இந்த குழாய்கள் செல்ல கூடாது என்றும் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும் என்று எதிர்ப்பு குரல் கிளம்பியது. ஆனால், தொழில் நுட்ப பிரச்சினைகளின் காரணமாகவும், தேசிய நெடுஞ்சாலை துறைக்கு போதிய இடம் இல்லாத காரணத்தினாலும், தேசிய நெடுஞ்சாலை வழியாக எடுத்து செல்ல முடியாத நிலையில், மாநில அரசு ஏப்ரல் 2ம் தேதி, 2013ம் ஆண்டு, இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறும், ஏற்கனவே பதித்த குழாய்களை நீக்குமாறும், தேசிய நெடுசாலை வழியாக இந்த திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளுமாறும் கூறி கெயில் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கெயில் நிறுவனம் உயர் நீதிமன்றத்திற்கு சென்றது. மாநில அரசின் உத்தரவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது உயர்நீதிமன்றம். மேலும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்ற போது, உயர்நீதிமன்ற தீர்ப்பே சரியானது என்று உறுதிப்படுத்தியது.

தமிழக அரசு, 1,20,000 பழம் தரும் மரங்கள் இந்த திட்டத்தின் படி விவசாய நிலங்களிலிருந்து அகற்ற பட வேண்டியிருக்கும் என்று தெரிவித்தாலும், தமிழக அரசு 4285 பழம் தரும் மரங்களும், 5523 பழம் காய்க்காத மரங்களும் இருப்பதாக மட்டுமே ஆவணப்படுத்தியுள்ளது. பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு குறிப்பிட்டாலும், இந்த நிலங்களில் சுமார் 10 விழுக்காடு நிலங்களில் மட்டுமே விவசாயம் நடைபெறுகிறது என்று கெயில் நிறுவனம் குறிப்பிடுகிறது.

இந்த திட்டத்தின் படி, நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட மாட்டாது என்பதும், குழாய்களை புதைத்த பின், அவை சமன் செய்யப்பட்டு நில உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்படும். மரங்கள் அகற்றப்பட்டால், அவைகளால் அந்த மரங்கள் வாழ்நாளில் தரும் பழங்களின் பயன்கள் கணிக்கப்பட்டு விவசாய, தோட்டக்கலை துறைகளின் பரிந்துரைப்படியும், பழங்கள் அல்லாத மரங்களின் மூலம் பெரும் பயன்கள் மதிப்பு, வனத்துறையினரால் கணிக்கப்பட்டு இழப்பீடாக கொடுக்கப்படும். மேலும், இந்த குழாய்கள் பதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் மரங்களை நடுவதோ, கட்டுமானங்களை உருவாக்குவது கூடாது. ஆனால், மற்ற விவசாய நடவடிக்கைகளை அந்த இடத்தில் மேற்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை. மேலும், அந்த நிலங்களில் உள்ள குழாய்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நில உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்ற சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் 11,000 கிலோ மீட்டருக்கும் மேலாக குழாய்கள் மூலம் எரிவாயு எடுத்து செல்லப்படுகிறது என்பதும், கொச்சி-கூட்டநாடு -பெங்களூரு-மங்களூரு பாதையின் மூலம் தமிழகத்திற்கு மிக பெரிய நன்மைகள் ஏற்படும் என்பதை உணர்ந்தே திமுக மற்றும் அதிமுக அரசுகள் ஏற்றுக்கொண்டன. ஆனால், சில அரசியல் நிர்பந்தங்கள் மற்றும் சூழ்நிலையின் காரணமாக மாநில நலன் சார்ந்த இந்த திட்டத்தை தற்போது எதிர்ப்பது முறையற்ற செயலே. இந்த திட்டத்தில் உள்ள குறைகளை பொது மக்களிடத்தில் விளக்கி சொல்லி இந்த திட்டத்தின் பயன் மக்களுக்கு சென்றடைய செய்வது அரசியல் கட்சிகள் மற்றும் மாநில அரசின் கடமை. இந்த திட்டத்தை எதிர்க்கின்ற அதே நேரத்தில், தமிழகத்தில் எண்ணூரில் திரவமாக்கப்பட்ட எரிவாயு மறு வளிமயமாக்கல் முனைய கட்டுமானம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இந்த திட்டம் உருப்பெற்று வரும் வேளையில், இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக எண்ணூர் – தூத்துக்குடிக்கு 1170 கிலோமீட்டர் குழாய் அமைக்கும், 2800 கோடி ரூபாய் முதலீட்டு திட்டம் எப்படி செயல்படுத்தப்படும்? இந்த திட்டத்தையும் மாநில அரசும், எதிர்க்கட்சிகளும், மாநிலத்தின் நலன் கருதி, தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படுவது தற்போதைய அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட.

கட்டுரையாளர் நாராயணன் திருப்பதி பாரதிய ஜனதா கட்சியில் செய்தி தொடர்பாளர். தொழிலதிபர்.

×Close
×Close