Advertisment

மண்ணின் மரங்கள்

சில பத்தாண்டுகளுக்கு முன்பாக சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் பெரும்பாலான இடங்களில் இயற்கையான காடுகளும், மண்ணிற்கே உரித்தான மரங்களும் வளர்ந்திருந்தன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tree

முனைவர். மு. உதயகுமார்

Advertisment

சில ஆண்டுகளாக இயற்கை சார்ந்த விவசாயம், இயற்கை சார்ந்த உணவுமுறை, இயற்கையான வாழ்க்கைமுறை என இயற்கையின் மீதான ஆர்வம் மனிதர்களிடையே பெருகிவருவது குறிப்பிடத்தக்கது. எனினும் மனிதர்களின் இயற்கை மீதான ஆர்வத்தை அறியாமை, இயலாமை மற்றும் பேராசை உள்ளிட்ட சில காரணிகள் ஓர் மெல்லிய போர்வை கொண்டு மறைத்து வைத்துள்ளது.

இன்று நாம் காணும் நகரங்கள் தோன்றுவதற்க்கு முன்பாக பெரும்பாலான நிலப்பரப்புகள் இயற்கை எழிலுடனே காணப்பட்டன. நாளடைவில் மனிதனின் பேராசைகளும், இயற்கைக்கு முரண்பட்ட எண்ணிலடங்கா செயல்களும் இணைந்து அந்நகரங்களை முற்றிலும் ஓர் செயற்கை அமைப்பாக மாற்றிவிட்டன. இந்நாளில் எவ்வாறு அந்நிய பொருட்கள் நம் உள்ளூர் சந்தையில் நீங்கா இடம் பிடித்துள்ளனவோ அவ்வாறே நம் மண்ணிற்கும், இயற்கை சூழலுக்கும் பொருந்தாத பல மரங்கள் நம்முடைய மண்ணை ஆக்கிரமித்துள்ளன. எப்படி மேலைநாட்டு பழக்க வழக்கங்களும், உணவுப்பொருட்களும், உடைப்பழக்கங்களும் நம்முடைய உடலை சீரழிக்கின்றனவோ அதைப்போலவே மண்ணிற்கு ஒவ்வாத அந்நிய நட்டு மரங்களும், செடிகளும், கொடிகளும் நம் மண்ணில் வளத்தை சீரழிப்பதோடு மட்டுமல்லாமல், உள்நாட்டு தாவரங்களின் வாழ்க்கையையும் கெடுக்கின்றன.

சில பத்தாண்டுகளுக்கு முன்பாக சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் பெரும்பாலான இடங்களில் இயற்கையான காடுகளும், அவற்றில் மண்ணிற்கே உரித்தான மரங்களும் செழித்து வளர்ந்திருந்தன. வேளாண்மையும் நன்றாக இருந்தது. மழைப்பொழிவு சீராக இருந்ததன் விளைவாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி காணப்பட்டன. ஆனால், இன்று மண்ணிற்க்கு உரித்தான மரங்களும் இல்லை, இயற்கை சூழ்நிலையும் இல்லை.

நாம் நம்முடைய சொந்த மண்ணில் இருக்கும்போது எவ்வாறு உணர்கிறோம் என்பதையும், வெளியூரில் மற்றும் வெளிநாட்டில் இருக்கும்போது எவ்வாறு உணர்கிறோம் என்பதையும் சிந்தித்துப்பாருங்கள். நாம் வெளியூரிலும், வெளிநாட்டிலும் நிச்சயமாக ஓர் சுதந்திரமற்ற நிலையை உணர்வோம். நம் சொந்த மண்ணின் சுதந்திரத்தை வேறு ஒரு இடத்தில் நம்மால் கட்டாயமாக அனுபவிக்க முடியாது.

அதைப்போலவே, ஒவ்வொரு நிலப்பரப்பில் அங்கே நிலவும் காலநிலை, மழைப்பொழிவு, மண்ணின் தன்மை மற்றும் வெப்பநிலை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இயற்கையானது அங்கே எந்தெந்த தாவரங்களும், விலங்குகளும் வாழ வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து வைத்துள்ளது. அவ்வாறு இயற்கையால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயிரினங்கள் அந்த குறிப்பிட்ட சூழ்நிலையில் செழிப்புடன் வளர்வதோடு மட்டுமல்லாமல், அவை தங்களுடைய முழுமையான திறன்களையும் வெளிப்படுத்தி மண்ணிற்கு வளம் சேர்க்கின்றன.

இயற்கையால் நிர்ணயிக்கப்பட்டவைகளைத் தவிர மற்றவை (அதாவது, மனிதர்களால் செயற்கையாக வெளிநாடுகளிலிருந்து அறிமுகம் செய்யப்பட்டவை) முழுமையாக வாழ்ந்து மண்ணிற்கு வளம் சேர்க்க இயலாது, பெயரளவில் மட்டுமே அவை இங்கே வாழலாம். இயற்கை சீற்றங்களை நம் மண்ணின் மரங்கள் தாங்கும் அளவிற்கு, செயற்கையாக மனிதர்களால் அறிமுகம் செய்யப்பட மரங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. இது உலகம் முழுவதும் பல்வேறு அறிவியல் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்நாளில் நம் நகரங்களில் நாம் காணும் மரங்களில் பெரும்பாலானவை வெளிநாட்டு மரங்களே. எடுத்துக்காட்டாக, சென்னை மாநகரம் தோன்றுவதற்கு முன்பாக அந்நிலப்பரப்பு முழுவதும் இயற்கையான காடுகளும், நீர்நிலைகளும் இருந்தன. ஆனால், இன்று இயற்கை அமைப்புகள் முற்றிலும் அழிந்து கான்கிரீட் காடாக சென்னை மாநகரம் தோற்றமளிக்கின்றது. மேலும், நூற்றுக்கு எழுபது மரங்கள் வெளிநாட்டு மரங்களே.

புதிதாக மரங்களை நாம் நடும்போது கீழ்கண்டவற்றை மனதில் கொள்ள வேண்டும்:

1. மண்ணிற்கு சொந்தமான, இயற்கையால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் மரங்களை நட வேண்டும்.

2. மண்ணிற்கு சொந்தமான மரங்களை தேர்ந்தெடுப்பதில் தாவரவியல் அறிஞர்களின் உதவியை நாடலாம்.

3. மரங்களை நடுவதற்கு முன்பாக அந்த மரத்தின் வேர்ப்பகுதி முழுமையாக வளர்வதற்கு தேவையான மணற்பரப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

4. மரங்களை நடுவதோடு விட்டுவிடாமல் அவற்றை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

5. கடினமான கட்டைகளை கொண்ட மரங்களையே நட வேண்டும். மண்ணிற்கு உரித்தான மரங்கள் அதிகளவு கடினத்தன்மை உடையவை. ஆனால், அறிமுகம் செய்யப்பட்ட பெரும்பாலான மரங்கள் மென்மையான கட்டையை கொண்டவை. எனவே, அவை எளிதில் முறிந்துவிடுகின்றன.

மண்ணிற்க்கு உரித்தான மரங்களை நட்டு வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளுள் சில:

1. முழுமையாக வளர்ந்து, வாழ்ந்து பயன்தரும்.

2. மண்ணின் வளத்தையும், அவை வாழும் சூழ்நிலையையும் வளப்படுத்தும்.

3. உள்நாட்டு விலங்கினங்கள் செழித்து வாழ பேருதவியாக இருக்கும்.

4. மகரந்தச்சேர்க்கை நடைபெற காரணமாக உள்ள பூச்சியினங்கள் உண்டாகவும், செழித்து வாழவும் வகைசெய்யும்.

5. மண்ணில் விழும் நீரானது நிலத்தடி நீராக மாற்றம்பெற துணைபுரியும்.

6. பறவைகள் மற்றும் ஏனைய விலங்கினங்கள் வாழ்வதற்கு இடமாக மண்ணின் மரங்கள் இருக்கும்.

7. இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் உள்ளூர் மரங்களுக்கு இயற்கையாகவே அதிகம்.

8. உள்நாட்டு தாவர இனங்கள் அழிந்து விடாமல் பாதுகாக்க முடியும்.

9. மண்ணின் மரங்களை அதிகரிக்கச் செய்வதன் மூலம் உள்நாட்டு விலங்கினங்களின் எண்ணிக்கையும் உயர்த்தலாம்.

இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை நோக்கி மனித சமுதாயம் செல்ல வேண்டிய நேரம் எப்போதே வந்துவிட்டது. அதை இப்போதாவது உணர்ந்து நாம் செயல்பட வேண்டும். இல்லையேல் இயற்கைப்பேரழிவுகளிலிருந்து நம்மால் தப்பிக்கவே இயலாது என்பது நிதர்சனமான உண்மை.

(கட்டுரையாளர், முனைவர். மு. உதயகுமார், துணைப்பேராசிரியர், தாவரவியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி)

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment