Advertisment

ஒற்றுமையை வளர்க்கும் மத்திய அரசின் லட்சணம் இதுதான்

இந்தியா பன்முகதன்மை கொண்ட நாடு. பல மொழி, இனம் கொண்ட நாடு. இதன் ஒற்றுமையைப் பேணிக்காக்க வேண்டும். தமிழ் மொழியை புறக்கணிக்கக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today Live Updates

Tamil Nadu News Today Live Updates

இரா.குமார்

Advertisment

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. பல மொழி, பல இனம், பல மதம், பல பண்பாடு கொண்ட மக்கள் வாழும் நாடுதான் இந்தியா. வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் சிறப்பு. வெள்ளையர்கள் நம்மை ஆண்டிருக்காவிட்டால், இந்தியா என்ற ஒரே நாடாக நாம் இணைந்திருப்போமா என்பதே சந்தேகம்தான். வெள்ளையனிடம் இருந்து விடுதலை பெற, எல்லா மொழி, எல்லா இன மக்களும் சேர்ந்து போராடினோம். சுதந்திரத்துக்குப் பிறகு ஏக இந்தியா என்பதை ஏற்றுக்கொண்டோம். இந்தியன் என்பதில் பெருமை கொண்டோம். கொள்கிறோம். அதே நேரம், ஒவ்வொரு இன மக்களும், ஒவ்வொரு மொழி பேசும் மக்களும் தங்களின் தனித்துவத்துவத்துடன் தங்களின் அடையாளத்துடன் வாழவே விரும்புகின்றனர். தங்கள் மொழி, பண்பாடு, அடையாளங்களை இழக்க இந்தியாவின் எந்த இன மக்களும், எந்த மொழி பேசும் மக்களும் விரும்பவில்லை.

அதிலும் குறிப்பாக தமிழர்களாகிய நாம் நமது மொழி, பண்பாட்டின் மீது தீவிர பற்றுகொண்டிருக்கிறோம். எதற்காகவும் நமது ஆடையாளங்களை இழக்க நாம் தயாராக இல்லை.

இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தன் மொழியையும் பண்பாட்டையும் காத்துக்கொள்ள இந்திய அரசியல் சாசனம் உரிமை கொடுத்துள்ளது. நம் மொழியை, பண்பாட்டை, அடையாளங்களை இழந்துவிட்டு இந்தியனாக இருக்க வேண்டும் என்று அரசியல் சாசனம் கூறவில்லை. ஒவ்வொரு இனமும், அந்த மக்களின் பண்பாடும், மொழியும் மதிக்கப்பட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒரே இந்தியா என்பதும், வேற்றுமையில் ஒற்றுமை என்பதும் அர்த்தமுள்ளதாகும்.

இந்தியாவின் எல்லா இன மக்களையும், எல்லா மொழியையும் சம மரியாதையுடன் நடத்தி, நாட்டின் ஒற்றுமையைக் காக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. இதை உணர்ந்து மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். அதை விடுத்து, ஒரே இந்தியா ஒரே மொழி என்று கோஷம் எழுப்பி, இந்தியை திணிக்க முயன்றாலோ, இந்து நாடு, இந்துஸ்தான் என்று சொன்னாலோ நாட்டின் அமைதி கெடும். இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் கேடாக விளையும்.

மொழி, பண்பாடு, மதம் ஆகியவை மக்களின் உணர்வோடு கலந்தவை. அதில் கை வைத்தால் யாரும் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். இதற்கு உதாரணம்தான் 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும் சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டமும்.

தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் அரசு, தேசியம் என்ற பெயரில் இந்தியைத் திணிக்க முயன்றபோது, பெரும் போராட்டம் வெடித்தது. இந்திக்கு எதிராக மக்கள் கொதித்து எழுந்தனர். 1967 சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் அரசை தூக்கி வீசினர். அதே போலத்தான் ஜல்லிக்கட்டுப் போராட்டமும். ஜல்லிக்கட்டு, தமிழர் பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்று. அதற்கு தடை விதித்தபோது தமிழ் மக்கள் வெகுண்டெழுந்தனர். மக்களின் மொழி, பண்பாட்டில் கை வைக்கக் கூடாது. கை வைத்தால் ஆபத்து என்ற பாடத்தை மத்திய அரசுக்கு சொல்பவைதான் இத்தகைய போராட்டங்கள்.

இந்தியாவின் ஒவ்வொரு இன மக்களும் அவரவர்களுக்குரிய மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். ஆனால், இதைச் செய்ய மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் அவ்வப்போது மறந்துவிடுகின்றனர். அதிலும் இந்தி பேசாத மக்களை, குறிப்பாக தமிழ் மக்களை அவ்வப்போது சீண்டிப் பார்ப்பது மத்தியில் உள்ள ஆட்சியாளர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. இப்போதும் அப்படி ஒரு வேலையைப் பார்த்துள்ளது மத்திய அரசு.

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை, “ஏக் பாரத், சிரஷ்டா பாரத்” (ஒரே இந்தியா. சிறந்த இந்தியா) என்ற இணைய தளத்தை உருவாக்கியுள்ளது. இதன் நோக்கம் நாட்டு மக்களிடம் ஒற்றுமையை வளர்ப்பதாம். இந்த இணைய தளத்தில், ஆங்கிலத்திலும் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளிலும் ‘ஏக் பாரத், சிரஷ்டா பாரத்’ என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் மொழியில் எழுதப்படவில்லை. தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளில் கூட தமிழ் இடம்பெற்றுள்ளது. ஆனால் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை இணையதளத்தில் தமிழுக்கு இடம் இல்லை. வளம் மிக்க ஒரு மொழியைப் புற்க்கணிக்கும் இந்த இணைய தளத்தின் நோக்கம், மக்களிடம் ஒற்றுமையை வளர்ப்பதாம். ஒரு மொழியைப் புறக்கணித்து, அந்த மொழி பேசும் மக்களை அவமதிப்பதுதான், ஒற்றுமையை வளர்க்கும் இவர்களின் லட்சணம். படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் என்று சொல்வது போல உள்ளது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயல்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து நமது பண்பாட்டில் கை வைப்பது, டில்லியில் போராடிக்கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளை பார்க்கக் கூட பிரதமர் மறுப்பது, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அரசியல் லாபம் கருதி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பது, இணைய தளத்தில் தமிழ் மொழியைப் புறக்கணிப்பது என தொடர்ச்சியாக நம்மை அவமதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, “தனி நாடு கோரிக்கையை நாங்கள் கைவிட்டாலும், அதற்கான காரணங்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கின்றன” என்று 50 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா சொன்னது எவ்வளவு உண்மை என்பது நிரூபணம் ஆகிறது.

Ra Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment