Advertisment

விசாரணை கமிஷனும் ஆட்சி கனவும்

ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக அரசு நியமித்துள்ள ஒரு நபர் விசாரணை கமிஷன், அதிமுக ஆட்சியின் ஸ்திர தன்மையை பாதுகாக்குமா என்பதை அலசுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விசாரணை கமிஷனும் ஆட்சி கனவும்

ச.கோசல்ராம்

Advertisment

அரசன் கோபம் கொள்ளும் அளவுக்கு அமைச்சர் தவறு செய்துவிட்டார். அமைச்சரை சிங்கத்துக்கு உணவாக போடுங்கள் என்று உத்தரவிட்டார், அரசர். என்ன இருந்தாலும் பல ஆண்டுகள் அமைச்சராக இருந்த நல்ல ஆலோசனை சொன்னவர் என்பதால், தண்டனையை எப்போது நிறைவேற்றலாம் என அமைச்சரிடமே கேட்டார், அரசர்.

எனக்கும் குடும்பம் இருக்கிறது. சில கடமைகள் இருக்கிறது. பத்து நாட்கள் டைம் கொடுங்கள் அரசே என்று கேட்டார், அமைச்சர்.

அரசரும் சம்மதித்தார். அமைச்சர் நேராக சிங்கம் வளர்ப்பவனிடம் சென்றார். ‘பத்து நாட்கள் உன் சிங்கத்தை நான் பராமரிக்கிறேன். உனக்கு என்ன வேண்டுமோ அதை வாங்கிக் கொள்’ என்றார். அரசனின் ஆணை தெரியாத அவனும், அதற்கு சம்மதித்தான். பத்து நாட்களும் சிங்கங்களை நன்றாக கவனித்துக் கொண்டார், அமைச்சர்.

தண்டனை நிறைவேற்றும் நாள் வந்தது. அரசரும், நாட்டு மக்களும் கூடியிருந்தார்கள். அமைச்சரை தூக்கி சிங்கங்கள் இருக்கும் கூண்டுக்குள் போட்டார்கள். அமைச்சரைப் பார்த்ததும் சிங்கங்கள் அவரை அன்போடு நாக்கால் வருடி கொடுத்தன. ‘சிங்கங்கள் ஒன்றும் செய்யவில்லை என்பதால் அரசர் நம்மை மன்னித்து விடுவித்துவிடுவார்’ என்று அமைச்சர் நினைத்தார்.

அரசர் தளபதையை பார்த்து, ‘ஒரு தப்பு நடந்துவிட்டது. அமைச்சரைத் தூக்கி முதலைகள் வாயில் போடுங்கள்’ என்றார். அரசர் முடிவு செய்துவிட்டால் யாராலும் மாற்ற முடியாது.

அப்படித்தான், விசாரணை கமிஷன்களும். தமிழகத்தில் மட்டுமல்ல... இந்தியா முழுவதும் இதுவரை அமைக்கப்பட்டுள்ள கமிஷன்கள் பெரும்பாலும் இதேநிலைதான். வலியால் அழும் குழந்தைகளுக்கு இப்போதைக்கு வலியை போக்க ஊசிப்போட்டு தூங்க வைக்கும் தந்திரம் போன்றதுதான், விசாரணை கமிஷன்கள்.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் அதிமுகவில் இருந்து வெளியேறி ஜெ. சமாதியில் மவுன விரதம் இருந்தார். கட்சி இரண்டாக உடைந்தது. ஆனால் சசிகலா உதவியுடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் ரிசார்ட்சில் தங்க வைக்கப்பட்டனர்.

அடுத்தடுத்த எதிர்பாராத நிகழ்வுகளால், எடப்பாடி பழனிச்சாமி நாற்காலியை ஸ்டாங்காக்கிக் கொண்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டதும், எடப்பாடியை டிடிவி.தினகரன் ராஜினமா செய்ய சொல்ல, தன் சமூகத்தைச் சார்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன் முறியடித்தார். அடுத்த சில நாட்களில் தினகரன் சிறைக்குச் செல்ல, கொஞ்சம் நிம்மதியானார், எடப்பாடி.

ஆனால் அவரது மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை. தினகரன் சிறையில் இருந்து வந்ததும், குடைச்சலை ஆரம்பித்தார். தன்னிச்சையாக கட்சி நிர்வாகிகளை நியமித்தார். உடன் எடப்பாடி தலைமையில் தலைமை கழகத்தில் நிர்வாகிகள் கூடி, தினகரன் துணைப் பொது செயலாளராக நியமித்தது செல்லாது என்று அறிவித்தார். கடந்த 14ம் தேதி மதுரை மேலூரில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்தியதோடு, அந்த மேடையில் 20 எம்.எல்.ஏ.க்கள் 7 எம்.பிக்களை உட்கார வைத்தார். இதுதான் எடப்பாடியை கிலி அடையச் செய்தது.

அதிமுகவின் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும், தொகுதிக்கு முதல்வர் போல செயல்படும் சூழலில் தினகரனை நோக்கி 20 எம்.எல்.ஏ.கள் போனது அதிர்ச்சிதான். 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதாரத்துடன் ஆட்சியை தக்க வைத்திருந்த எடப்பாடி பழனிச்சாமி அரசு இப்போது பெரும்பான்மையை இழந்துவிட்டது. அதை தக்க வைக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.

சண்டைக்காரனான டிடிவி தினகரனோடு சமரசமாவதைவிட, பங்காளியான ஓபிஎஸ்வுடன் சமரசம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். ஓபிஎஸ் வசம் 11 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களைச் சேர்த்துக் கொண்டால் 113 எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள். பெரும்பான்மைக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் தேவை. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொன்னது போல, பாதாளம் வரை பாயும் பணதை வைத்து சரி செய்துவிடலாம் என்று நினைக்கிறார்.

இந்த 11 எம்.எல்.ஏ.க்களை பெற வேண்டுமானால் ஓபிஎஸின் இரண்டு கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும். சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்தாகிவிட்டது. இப்போது விசாரணை கமிஷன் போட்டதால், இணைப்புக்கு வழி கிடைக்கும் என்று நம்புகிறார். ஓபிஎஸை திருப்திப்படுத்த இன்னும் எந்த லெவலுக்கும் அவர் இறங்கிப் போக தயங்க மாட்டார்.

தமிழகத்தில் சர்காரியா கமிஷன், பால் கமிஷன், திருச்செந்தூர் கோயிலில் வேல் திருடு போனதை விசாரிக்க போட்டப்பட்ட சுப்பிரமணியன் கமிஷன் உள்பட அனைத்து விசாரணை கமிஷனிலும் இது வரையில் எந்த கான்கிரிட்டான முடிவும் கிடைக்கவில்லை. பெரும்பாலான விசாரணை கமிஷன் அரசியல் காரணங்களுக்காக போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கூட இறந்த ஒரு தலைவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக விசாரணை கமிஷன் அமைக்கப்படவில்லை. நேதாஜி காணாமல் போன விவகாரம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. உலக அளவில் எடுத்துக் கொண்டாலும் கென்னடி கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

தினகரனின் தாக்குதலை சமாளிக்கத்தான் இந்த விசாரணை கமிஷன் என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். இது சசிகலா குடும்பத்தினரை வேகமாக ஒருங்கிணைக்க உதவக்கூடும். இன்னும் வேகமாக ஆட்சி கவிழ்ப்பு வேலைகளில் சசிகலா குடும்பத்தினர் ஈடுபடக் கூடும். அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறார்கள் என்று அனுதாபத்தைத் தேடலாம். ஆனால் ஆட்சி என்பது நித்திய கண்டம் பூர்ண ஆயுசுதான்.

விசாரணை கமிஷன் அமைத்ததன் மூலம், தன்னை முதல் அமைச்சராக்கிய சசிகலாவுக்கு எடப்பாடி கொடுத்திருக்கும் மிகச் சரியான பிறந்த நாள் பரிசுதான்.

தங்களுக்கு மீண்டும் இப்படியொரு வாய்ப்பு வராது. எனவே ஆட்சி கவிழக்கூடாது என எம்.எல்.ஏ.க்கள் நினைக்கும் வரையில் எடப்பாடி அரசு நீடிக்கும்.

Ops Eps Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment