Advertisment

பிணம் தின்னும் சாத்திரங்கள் 3 : கோயில் கொள்ளைகள்

தவறான வழியில் சென்று சாமி கும்பிடும்போது உறுத்தாதா? என்னோட சேர்த்து எட்டு பேரோட வீடுகள்ல நீங்க குடுத்த பணத்துல வாழ்க்கை ஓடுது. உண்டியல்ல போடுற காணிக்கையவிட இது அதிக புண்ணியம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kathir - palani temple

திருத்தணி முருகன் கோயில்

கதிர்

Advertisment

திருமணம், வரவேற்பு என்று சில நிகழ்ச்சிகளுக்காக அடிவாரம் வரை சென்றுவிட்டு கூட்ட மிகுதியால் பழனி மலை மீது ஏறாமல் திரும்பியிருக்கிறேன். இந்த டூரில் பல கோயில்களுக்கு சென்றுவந்த பின்னணியில் ஆண்டியை சந்திக்காமல் திரும்ப மனமில்லை.

வெயில் ஏறத் தொடங்கிய நேரத்தில் இழுவை ரயில் நிலையத்தை அடைந்தோம். காத்திருக்கும் வரிசை வளைந்து வளைந்து சென்றது. எப்படியும் 250 பேர் இருப்பார்கள். ரயிலுக்கு 20 பேராக 3 தடங்களிலும் வண்டிகள் கிளம்பும் நேர்த்தியை பார்த்தால் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க தேவையிருக்காது என்று தோன்றியது. அரை மணி நேரம் கடந்தும் வரிசை அசையவே இல்லை. ரயில்கள் மட்டும் போய் வந்து கொண்டிருந்தன.

முகம் காட்டிக் கொடுத்திருக்கலாம். முதலில் சந்தித்த நபர் அருகில் வந்து கிசுகிசுத்த குரலில் சொன்னார். நாலு மணி நேரத்தில் நீங்கள் ரயில் ஏற முடிந்தால் அதிர்ஷ்டம் என்று அவர் சொன்னதன் அர்த்தம் புரிந்தது. எழுந்து வரிசைக்கு வெளியே வந்தோம்.

“ரயிலுக்கு போக வர 200, ஸ்பெஷல் தரிசனம் 500. மூணு பேருக்குமாக 2,100. என் சர்வீஸ் சார்ஜ் 200. மொத்தம் 2,300. கூடவே ஆள் வரும். தரிசனம் திருப்தியாக முடிந்து கீழே வந்தபிறகு கொடுத்தால் போதும். ஒரு பைசா வேறு யாருக்கும் கொடுக்க தேவையில்லை. ஒரு மணி நேரம் தாண்டிவிட்டால் சர்வீஸ் சார்ஜ் தரவேண்டாம்” என்று அவர் சொன்ன டீல் பிடித்திருந்தது. அரை நாள் தாமதத்தை தவிர்க்க வேறு வழியும் தெரியவில்லை.

சரி என்றதும் மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்தது. நமக்கென நியமிக்கப்பட்ட ஆள் பின்னாலேயே நடந்தோம். எல்லாமே வெளிவரும் வழிகள். காவலர், ஊழியர், கண்காணிப்பாளர் எல்லாரும் அலுத்துக் கொண்டோ முறைத்துக் கொண்டோ வழி விட்டார்கள். ராஜ அலங்காரத்தில் நின்ற முருகன் சந்நிதியில் யாரும் போ போ என்று விரட்டவில்லை. கை நிறைய பிரசாதம் கொடுத்து அனுப்பினார் பூசாரி.

Kathir - Thiruchendur திருச்செந்தூர் முருகன் கோயில்

சொன்னபடி ஒரு மணி நேரத்தில் கீழே வந்து சேர்ந்ததும் பணத்தை பெற்றுக் கொண்டவர், அக்கறையாக விசாரித்தார். “திருப்தியா சாமி கும்பிட்டீங்களா..?” என்று.

“எப்படிப்பா முடியும்? தவறான வழியில் சென்று சாமி கும்பிடும்போது உறுத்தாதா?” என்று கேட்டபோது மெலிதாக சிரித்தார் அந்த ஆசாமி.

“உறுத்த தேவையில்லைங்க. நானும் தப்பு செய்யல. நீங்களும் தவறு செய்யல. சீக்கிரமா ஊருக்கு போக வேண்டிய நிலைமையில இருந்த உங்களுக்கு நான் உதவி செஞ்சேன். என்னோட சேர்த்து எட்டு பேரோட வீடுகள்ல நீங்க குடுத்த பணத்துல வாழ்க்கை ஓடுது. உண்டியல்ல போடுற காணிக்கையவிட இது அதிக புண்ணியம், சார்” என்று அவர் சொன்னபோது மறுக்க வார்த்தை கிடைக்கவில்லை.

நமக்கு சீக்கிரம் வேலை நடக்கணும். அதுக்காக கொஞ்சம் செலவு ஆனாலும் பரவாயில்லை என்று நினைப்பது லஞ்சம் கொடுப்பவன் மூளை. நாம் என்ன வலியச் சென்றா பிடுங்கினோம். கேட்டார், செய்து கொடுத்தேன், அதற்கு கட்டணம் கொடுத்தார் என்று நம்புவது லஞ்சம் வாங்குபவன் மூளை. ஒரு கை தட்டினால் ஓசை வராது. ஊழல் உருவாக இரண்டு பேர் வேண்டும்.

இங்கே பிரச்னை என்ன என்றால், இப்படி அவசரமாக போக வேண்டியவர்களுக்காகத்தான் ஒவ்வொரு கோயிலிலும் சிறப்பு வழி என்று கம்பித் தடுப்புகள் போட்டு தனியாக கட்டணம் வசூலிக்கிறார்கள். நடந்து மலையேற முடியாதவர்கள் சென்று வரத்தான் இழுவை ரயில் விட்டிருக்கிறது அறநிலையத் துறை. அதில் காத்திருந்து வாங்கும் டிக்கெட் 25 ரூபாய்தான். மேலே சிறப்பு தரிசனத்துக்கு 200, 300 என்று டிக்கெட் விற்கிறார்கள். அந்த வசதிகளை பயன்படுத்த முன்வரும் பக்தர்களைத்தான் புரோக்கர்கள் இப்படி வலையில் வீழ்த்துகிறார்கள்.

ஒவ்வொரு ரயிலிலும் பாதிக்கு மேல் இதுபோன்ற பக்தர்கள் செல்வதால், முறையாக வரிசையில் நிற்கும் கூட்டம் நத்தை வேகத்தில்தான் நகர்கிறது. எவருமே உள்ளூர் கிடையாது. எங்கெங்கோ இருந்து வருடம் பூராவும் உண்டியல் வைத்து சேமித்த பணத்தை எடுத்துக் கொண்டு முருகனை தரிசனம் செய்து பாவங்களையும் கவலைகளையும் இறக்கி வைத்துவிட்டு போக இங்கு வருகிறார்கள். புண்ணியத்தையா அவர்கள் மூட்டி கட்டி வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள்?

Kathir - Srirangam - Temple ஸ்ரீரங்கம் கோயில்

தமிழகத்தின் பெரும்பாலான கோயில்களில் இதுதான் நிலவரம்.

புராதனமான, பிரமாண்டமான கோயில்கள் நிறைந்திருக்கும் மாநிலம் தமிழ்நாடு. வரலாற்று சின்னங்களாகவும் கலாசார அடையாளங்களாகவும் கம்பீரமாக எழுந்து நிற்கும் தமிழக கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்பது இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான குடும்பங்களின் லட்சியமாக இருப்பது இங்கே பலருக்கு தெரியாது. தமிழர்கள் கூட்டம் கூட்டமாக திருப்பதிக்கும் சபரிமலைக்கும் காசிக்கும் சென்று அங்குள்ள உண்டியல்களை நிரப்புகிறார்கள் என விமர்சனம் செய்பவர்களுக்கு மதுரை, ராமேஸ்வரம், பழநி, மருதமலை, சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, ஸ்ரீரங்கம், கும்பகோணம், திருநள்ளார், திருநெல்வேலி, திருச்செந்தூர், கன்னியாகுமரி என்று ஊர் ஊராக சாரை சாரையாக வந்து செல்லும் வட மாநில பக்தர்களை எண்ணிப் பார்க்க நேரம் இருக்காது. அவ்வாறு வருபவர்களில் அநேகர் ஏழைகள், நடுத்தர வர்க்க குடும்பங்கள்.

மிசோரம் மாநிலத்தில் இருந்து தமிழக கோயில்களில் தரிசனம் செய்ய வந்திருந்த ஒரு பள்ளி ஆசிரியை குடும்பத்திடம் பேச்சு கொடுத்தபோது, ”தமிழ்நாட்டு மக்கள்தான் எவ்வளவு பாக்யசாலிகள். எல்லா ஊர்களும் பெரிய பெரிய கோயில்கள். பல நூறு ஆண்டுகளாக எண்ணற்ற மக்கள் மனமுருக பிரார்த்திக்கும் அந்த மண்டபங்களில் அடியெடுத்து வைத்ததுமே மனம் நிறைந்து அமைதி உண்டாகிறது” என்று சிலாகித்தார் அவர். புரோக்கர்களின் தொல்லை குறித்து கேட்டதற்கு, வடக்கிலும் மேற்கிலும் பார்த்ததைவிட நமது கோயில்களின் நிர்வாகம் அத்தனை மோசமில்லை என்று சமாளித்தார். இன்னும் சுத்தமாக வைத்திருக்கலாம் என்பது மட்டுமே அவரிடம் வலிந்து பெற முடிந்த ஒரே ஆலோசனை.

சுவாச் பாரத் என்ற பெயரில் மோடி அறிமுகம் செய்த இந்தியாவை சுத்தப்படுத்தும் இயக்கம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத மாநிலம் தமிழ்நாடாகத்தான் இருக்க முடியும். பொது இடங்களில் குப்பை கொட்டுவது, துப்புவது, அசிங்கப்படுத்துவது எல்லாம் நமது பிறப்புரிமை என்ற அளவில்தான் மக்கள் நடமாடுகிறார்கள். புனித்த் தலம் என்று பெயர் சூட்டப்படும் கோயில் நகரங்களும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. கோயிலை சுற்றிலும் குப்பை மயம். உள்ளேயும் பெரிய வித்யாசம் இல்லை.

இங்கு ஒரு விஷயம் சொல்லியாக வேண்டும். சிவாலயங்கள், அம்மன் கோயில்களோடு ஒப்பிடும்போது பெருமாள் கோயில்களில் நிலைமை தலைகீழாக உள்ளது. அப்போதுதான் கழுவித் துடைத்தது போல் வைணவ ஆலயங்கள் பளிச்சென சுத்தமாக இருக்கின்றன என்பதோடு, காசு பிடுங்கும் அர்ச்சகர்கள், ஊழியர்களும் பார்வையில் படவில்லை. பொதுவாக கூட்டம் குறைவு என்றாலும், திருவிழா நாட்களில் போனாலும் அக்கோயில்களில் கவனத்தை திருப்பும் தவறுகள் தென்படுவது இல்லை.

கோடி கோடியாக பக்தர்களின் சொத்துகளை குவித்து வைத்திருக்கும் கோயில்கள், குத்தகைக்கு விட்ட நிலங்களுக்கும் மனைகளுக்கும் தொகை வசூலிக்க துப்பில்லாமல் மண்டபத்தின் உள்ளே கடை போட்டு பலகாரம் செய்து விற்கவும், நெய் விளக்கு, எள் விளக்கு விற்கவும் ஏலம் விட்டு ஒப்பந்தம் போடுகின்றன. ஏலம் எடுத்தவர்கள் வேலைக்கு ஆள் போட்டு சந்தையில் நடப்பதுபோல் கூவி விற்கச் சொல்கிறார்கள். எங்கு பார்த்தாலும் எண்ணெய் பிசுக்கு. பிரசாத சிதறல். நுழைவுச் சீட்டு கொடுக்காமலே சிறப்பு வழிக்கு கட்டணம் மட்டும் வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்ட ஊழியர்களையும் பார்க்க முடிந்தது. வயலில் பாதி கிணறு என்பார்களே, அப்படி அறநிலையத்துறைக்கு வரவேண்டிய வருமானத்தில் பாதி இப்படித்தான் போகிறது.

Kathir - Thiruppathy temple திருப்பதி கோயில்

ஒரு சில ஊழியர்களால் மட்டும் இப்படி ஊழல் நடக்க வாய்ப்பில்லை. நேர்மையான ஊழியர்கள் இதை சகித்துக் கொண்டு போக வேண்டியிருக்கிறது. “சிவன் சொத்து குல நாசம், கோயில் சொத்து ஆண்டவன் சொத்து என்றெல்லாம் நம்மாட்கள் பேசுவார்களே தவிர, சான்ஸ் கிடைத்தால் விடுவதே இல்லை, நானே புகார் செய்திருக்கிறேன். சார். கம்ப்யூட்டம் மயமானதும் எல்லாம் சரியாகிவிடும் என்று பழைய நிர்வாக அலுவலர் சொன்னார். ஆனால் எதுவும் மாறவில்லை” என்று குமுறினார் ஒரு இளம் ஊழியர். அர்ச்சகர்கள் அட்டகாசத்தை அடக்க முயன்ற நிர்வாக அலுவலரும் அறங்காவலர்களும் கூண்டோடு மாற்றப்பட்ட சம்பவத்தை அவர் திரைக்கதை போல விவரித்தார்.

கோயில் அருகில் தங்கியிருந்து தரிசனம் செய்ய நினைத்து தங்கும் அறை அல்லது குடில் வாடகைக்கு எடுப்பவர்கள் அதிகமாகி விட்டார்கள். இரவு ஏகாந்த தரிசனம் அல்லது அதிகாலை அபிஷேகம் பார்க்க விரும்பினால் ரூம் போடுவது தவிர்க்க முடியாதது. இப்போது கம்ப்யூட்டரில் முன்பதிவு செய்யலாம். ஆனால் பராமரிபு இல்லாத அறைகளை தவிர்க்க தனி கவனிப்பு அவசியம். இதில் முக்கியமான ஒரு தந்திரம் என்ன என்றால், கோயில் தங்குமிடங்களில் செக் அவுட் நேரம் காலை 8 மணியாம். முந்தைய தினம் எப்போது செக் இன் செய்திருந்தாலும், காலை 8 மணிக்குள் வெளியேறி சாவியை ஒப்படைத்துவிட வேண்டும். இல்லையென்றால் கூடுதலாக ஒருநாள் வாடகை வசூலிக்கப்படும். இரவு தங்கும் திட்டத்தோடு வரும் எவராலும் 8 மணிக்குள் காலி செய்வது சாத்தியம் இல்லை. தனியார் ஓட்டல்களில் இருப்பதுபோல் செக் அவுட் நேரம் பகல் 12 மணி என்று வைக்காமல் இப்படி நூதனமாக சிந்தித்த அதிகாரியை பாராட்டலாம். ஒரு ஓட்டையை அடைக்கிறேன் என்ற பெயரில் பல துவாரங்களை புதிதாக போடுவது புதுமையான சிந்தனைதானே. முன்கூட்டியே கவனித்துவிட்டால் நீங்கள் 8 மணிக்கே போய்விட்டதாக கம்ப்யூட்டர் பதிவு செய்துகொள்ளும்.

கடவுள் பெயரால் நடக்கும் துறையின் நிர்வாகத்திலேயே இத்தனை முறைகேடுகள் என்றால் ஏனைய துறைகளின் லட்சணம் எப்படி இருக்கும்?

”இதனால்தான் நிம்மதி தேடி கோயிலுக்கு போகாமல் டாஸ்மாக் பாருக்கு போகிறேன்” என்று நண்பர் சொன்னார். அதற்கும் வழி இல்லாமல் செய்து விட்டதே சுப்ரீம் கோர்ட் என்று சிரித்தபோது அவர் குறுக்கிட்டார்.

“தண்ணீருக்குதான் தமிழ்நாட்டில் தட்டுப்பாடு. தண்ணிக்கு என்னிக்குமே கிடையாது. என்னோடு வாருங்கள், காட்டுகிறேன்” என்று அழைத்தார்.

நாளை பார்ப்போம்

Tamil Nadu Kathir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment