Advertisment

கேரள புரட்சிக்கு வித்திட்டது தமிழகம்

கேரளாவில் அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகாராகலாம் என்ற சட்டத்தின் படி 6 தலித்துக்கள் அர்ச்சர்களாகியுள்ளனர். இதன் முன்னோடி தமிழகம்தான் என்கிறார், ஆசிரியர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilnadu trained archakar's. Kerala, prist,

தமிழகத்தில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள்

இரா.குமார்

Advertisment

தமிழனின் வரலாறு காலம் காலமாக மறைக்கப்பட்டே வந்திருக்க்கிறது. சுதந்திரப் போராட்ட வரலாற்றில்கூட, தமிழர்களின் பங்கு முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. இதனால்தான், “இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு, கங்கைக் கரையில் ஆரம்பிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. ஆனால், காவிரிக்கரையில் இருந்து எழுத ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று ஒரு வரலாற்று ஆசிரியர் சொன்னார்.

வட இந்தியாவில் 1857ல் நடந்த சிப்பாய் புரட்சியை முதல் சுதந்திரப் போர் என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதுகின்றனர். ஆனால்,1803 ஆம் ஆண்டிலேயே வேலூரில், வெள்ளையர்களுக்கு எதிராக சிப்பாய்க் புரட்சி நடந்துள்ளது. உண்மையில் 1803ல் வேலூரில் நடந்த சிப்பாய் புரட்சிதான் முதல் சுதந்திரப்போர். ஆனால், சுதந்திரப் போரட்ட வரலாற்றில் வேலூரில் நடந்த சிப்பாய் புரட்சி மறைக்கப்பட்டு, வட இந்தியாவில் நடந்த சிப்பாய் புரட்சியை முதல் சுதந்திரப் போர் என்று பதிவு செய்துள்ளனர்.

அதே போலத்தான், அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் சட்டத்தை முதலில் கொண்டு வந்தது தமிழகம்தான் என்பது மறைக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் இப்போது எழுந்துள்ளது. சரியாகச் சொன்னால், இதை நாமே மறந்துவிட்டோம்.

அனைத்து ஜாதியினரையும் பெரிய பெரிய கோயில்களில் அர்ச்சகராக்கும் சட்டத்தை கேரள அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. கேரள மாநில அரசின் ஆளுகையில் உள்ள பெரிய பெரிய கோயில்களில் பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்ற நிலையை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் மாற்றியுள்ளார். திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமான கோயில்களில் காலியாக உள்ள 62 அர்ச்சகர் இடங்களுக்கு அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக கேரள அரசு நியமித்துள்ளது. இதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 6 பேர் இடம் பெற்றுள்ளனர்.

பழங்குடி இனத்தவர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் என மொத்தம் 36 பேர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளனர். திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உட்பட்ட அனைத்துக் கோவில்களிலும் இனி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தகுதி உள்ள அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடரும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் உள்ள மற்ற கோவில்களிலும் இந்த நடைமுறையைப் பின்பற்ற, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் பினராயி விஜயனின் தலைமையிலான அரசு மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை பலரின் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

வரலாற்றுப் புரட்சி செய்துள்ளதாக கேரள அரசுக்கு பாராட்டு குவிகிறது. ஆனால், இந்த வரலாற்றுப் புரட்சியை முதன் முதலில் முன்னெடுத்தது தமிழகம்தான்.

கடந்த 2006 ஆம் ஆண்டில் 5வது முறையாகத் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பினை ஏற்ற கருணாநிதி, முதல் நடவடிக்கையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கானத் தனிச் சட்டத்தை (Act 15 of 2006) நிறைவேற்றினார். அதன் தொடர்ச்சியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, மதுரை, பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ கோவில்களுக்கான பயிற்சி நிலையங்களையும் சென்னை, திருச்சியில் வைணவக் கோவில்களுக்கான பயிற்சி நிலையங்களையும் தமிழக அரசு தொடங்கியது. இதற்கென ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். இங்கு படித்து முடித்து பட்டயம் பெற்ற 206 பேருக்கு மடாதிபதிகளை வைத்து தீட்சைகளும் வழங்கப்பட்டன.

வரலாற்றுப் புரட்சியாக நடந்த இந்த மாற்றங்களை ஏற்க இயலாமல், தி.மு.க. அரசு கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆதி சிவாச்சாரியார் சங்கம் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கில் 2015ஆம் ஆண்டு டிசம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், தமிழக கோவில்களில் ஆகமவிதிகளின்படி மட்டுமே கோவிலின் அர்ச்சகர்களை நியமிக்கும் முறை/மரபு, எங்கெல்லாம் நடைமுறையில் இருக்கிறதோ அங்கே அந்த நடைமுறையும் மரபும் அப்படியே தொடரலாம் என்று கூறப்பட்டது. அப்படியான நியமனங்கள் இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற அடிப்படைத் தத்துவத்துக்கு முரணானது அல்ல என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதேசமயம் இப்படி ஆகம விதிகளின் கீழ் அல்லாத அர்ச்சகர் நியமனங்களால் பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகும்போது அப்படியான அர்ச்சகர் நியமனம் ஒவ்வொன்றும் தனித்தனி வழக்காகக் கருதப்பட்டு அந்தந்த கோவிலின் அர்ச்சகர் நியமனம் என்பது ஆகமவிதிகளின் கீழ்தான் செய்யப்பட வேண்டுமா அல்லது தமிழக அரசின் சட்டம் கூறும் பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமிக்கப்படலாமா என்பதை நீதிமன்றம் ஒவ்வொரு வழக்கிலும் தனித்தனியாக முடிவு செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிமன்ற தீர்ப்பு, இந்த விவகாரத்தில் எந்தத் தெளிவையும் ஏற்படுத்தாத நிலையில், பயிற்சி பெற்ற மாணவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பதில் தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

"2015 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த பிறகு, தமிழக அரசு உடனடியாக இந்த மாணவர்களைப் பணி நியமனம் செய்திருக்க வேண்டும். அப்போது யாராவது வழக்குத் தொடர்ந்திருந்தால், அதனை எதிர்கொண்டு சரியான முறையில் வாதாடியிருக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதா தலைமையிலான, தமிழக அரசு இது எதையுமே செய்யவில்லை. இதனால், வரலாற்றுப் புரட்சி மிக்க சட்டத்தைக் கொண்டுவந்தும் பயனில்லாமல் போய்விட்டது. என்றாலும், கேரளாவில் இப்போது செயல்படுத்தப்பட்டுள்ள புரட்சிக்கு வித்திட்டது தமிழகம்தான். அதுவும் கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான் என்பது, வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், நமது துரதிர்ஷம், இதை யாருமே உரக்கச் சொல்லவில்லை. இதனால், ஒரு வரலாற்றுப் புரட்சிக்குத் தமிழகம்தான் வித்திட்டது என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் தலித் அர்ச்சகர் செய்தியைப் படிக்க...

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment