Advertisment

இலங்கை புதிய அரசியலமைப்பு சட்ட வரைவு ஈழத் தமிழர்களை வஞ்சிக்கின்றது

மைத்ரி சிறிசேனா தலைமையில் இயங்கும், இலங்கை அரசில் வகுக்கும் 3வது அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sri-lanka-flag

வழக்கறிஞர். கே. எஸ். இராதாகிருஷ்ணன்.

Advertisment

இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா புதிதாக ஏற்கப்படும் அரசியலமைப்புச் சட்டத்தில் சமஷ்டி அமைப்புக்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு இலங்கையில் ஆட்சிப் பொறுப்பேற்ற மைத்ரிபால சிறிசேனா – ரணில் விக்கிரமசிங்கே கூட்டணி அரசானது, நாடாளுமன்ற தீர்மானத்தின் மூலம் 09/03/2017 அன்று அமைத்த அரசியல் நிர்ணய சபை, ஏப்ரல் 5ம் தேதி கூடிய முதல் அமர்வில், ஒரு வழிநடத்தும் குழுவை (Steering Committee) அமைத்தது.

அந்தக் குழு, அரசியல் சட்டம் வரையறுக்க வேண்டியவற்றை 12 முதன்மைக் கூறுகளைக் கண்டறிந்து துணைக்குழுக்களுக்கு ஒதுக்கீடு செய்தது. அந்த வழிநடத்தும் குழு, ஏப்ரல் 2016 முதல் செப்டம்பர் 2017 வரையிலான காலகட்டத்தில் 73 முறை கூடி நெறிமுறைகளை வகுத்தது.

இந்த வழிநடத்தல் குழுவிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான 21 பேர் கொண்ட குழுவில் இரா. சம்பந்தன், சுமந்திரன், மனோ கணேசன், இலங்கை அரசின் ஏஜென்ட்டான டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த துணைக் குழுக்களும் தங்கள் அறிக்கையை கடந்தாண்டு நவம்பர் மாதம் அதன் தலைவரான ரணிலிடம் கொடுத்தது. தனது இடைக்கால அறிக்கையை அந்த குழு 21/09/2017 அன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தது. இந்த இடைக்கால அரசியல் அமைப்பு அறிக்கைகள் கடந்த 60 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள், கண்ணியத்தோடும், மானத்தோடும் வாழ்வதற்காக, எந்த உரிமைகளுக்காக போராடுகிறார்களோ அதன் அடித்தளத்தையே தகர்த்தெறியக் கூடிய விதத்தில், இலங்கை என்பது ஒர் ஒற்றை ஆட்சி என்று கூறாமல் ஐக்கிய ராஜ்ஜிய அரசு என்று நாட்டின் எந்தவொரு பகுதியையும் பிரிக்க இயலாதவாறு கட்டமைக்கப்படும்.

தமிழர்களக்கு எந்த நீதியும் தீர்வுமில்லாத இந்த புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் இந்த இடைக்கால அறிக்கையைக்கூட சிங்களர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசியலமைப்பை மாற்றக்கூடாது என்று போராட்டம் நடத்துகிறார்கள்.

கடந்த 2009ல் இன அழிப்பு நடத்திய குற்றவாளிகளுள் ஒருவனான மேஜர் ஜெனரல் கமல் குணரத்தினே, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருபவர்களை கொல்ல வேண்டும் என்று பகிரங்கமாகவே கூறியுள்ளார்.

இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னணித் தலைவரும், மகிந்த இராஜபக்சே அரசின் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச இந்த அரசு அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் நாடாளுமன்றத்தின் மீது குண்டுவீசி அழிக்கவேண்டுமென பேசியுள்ளார்.

சுதந்திர இலங்கையின் அரசியல் சட்டத்தை 1947ம் ஆண்டு எழுதிய சோல்பரி ஆணைக்குழுவின் தலைவரும், சுதந்திர இலங்கையின் முதலாவது ஆளுநருமான சோல்பரி பிரபு, 1963ம் ஆண்டு பி.எச். பார்பர் எழுதிய “Ceylon: A Divided Nation” என்ற நூலுக்கு எழுதிய அணிந்துரையில் தனது தவறை குறிப்பிட்டார். அதில் தமிழர்களுக்கான உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகிறது.

1833 இல் கோல்புருக் ஒரு அரசியல் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

1931 இல் டொனமூர், ஓர் அரசியல் சட்டத்தை உருவாக்கினார்.

1947 இல் சோல்பரி குழு, ஒரு அரசியல் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

1972 இல் சிறிமாவோ பண்டரநாய்க புதிய அரசியல் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

மேற்கண்ட எதுவுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சபை அல்ல. ஆனால் இவ்வளவு அரசியலமைப்பு அவைகள் அமைத்தும் அந்த மாற்றங்களினால் உறுதி அளித்தவாறு தமிழர்களின் உரிமைகளை சிங்களர்கள் சட்டபூர்வமாக வழங்காமல் ஏமாற்றியது தான் உண்மை. தமிழர்கள் நம்பி ஏமாந்தனர்,

இந்நிலையில் வேறு வழியில்லாமல் இந்திய தேசிய காங்கிரஸ் பாணியில், தமிழரான அருணாசலம், இலங்கை தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பை 1919இல் தொடங்கினார்.

1920களில், யாழ்ப்பான பால்கலைக்கழக மாணவர்கள், யாழ்ப்பாண மாணவர் காங்கிரசை தொடங்கி அது பின்னர் வாலிபர் காங்கிரசாக மாறியது. 1925,1926 ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசின் முன்னணித் தலைவர்களான சரோஜினி நாயுடு, சத்தியமூர்த்தி, கமலா தேவி போன்றவர்கள் யாழ்ப்பாண வாலிபர் மாநாடுகளில் கலந்து கொண்டனர். 1927ல் மகாத்மா காந்தியை அழைத்து யாழ்ப்பாணத்தில் ஒரு பெரிய கூட்டத்தை நடத்தினார். பண்டித நேருவும் கழிமுகத்திடலில் தமிழர்களுக்காதரவாக இலங்கையில் பேசியதெல்லாம் வரலாற்று செய்திகள். கம்யூணிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலனும் தமிழர்கள் பிரச்சனைகளை கவனிக்க வேண்டுமென இலங்கையில் நடந்த மே தின விழாவில் பேசினார்.

கடந்த ஆண்டில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் மைத்ரி பால சிறிசேனா இவ்வாறு கூறியிருப்பதை அறிந்து தமிழர்கள் வேதனைப்படுகின்றனர். புதிய அரசியலமைப்பு மன்றம் அதாவது அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையில் செயல்படுகிறது.  ஸ்ரீலங்கா அரசியலமைப்புச் சட்டம் முதல் முதலாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காலத்தில் 1948ல் சோல்பரி வடிவமைத்தார்.

அவர் அப்போது சிலோன் அரசின் கவர்னர் ஜெனரலாக இருந்தார். இந்த அரசியல் சட்டத்தின்படி பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையும், இரு அவைகளான செனட், மக்களவை கொண்ட அமைப்பாக இருந்தது.  இந்த செனட்டை 1971ல் எப்படி எம்.ஜி.ஆர். தமிழக மேலவையை ஒழித்தாரோ, அது மாதிரியே ஸ்ரீமாவோ பண்டாரநாயகா சிலோன் நாடாளுமன்றத்தின் மேலவையை ஒழித்தார்.  அதன்பின், பண்டாரநாயகா காலத்தில் முதல் குடியரசு அரசியல் சட்டம் வகுக்கப்பட்டு சிலோன் என்பதை ஸ்ரீலங்கா என்று நாட்டுக்கு பெயரிடப்பட்டது.

22.5.1972 அன்று பிரகடனப்படுத்தப்பட்ட இந்த அரசியல் அமைப்புச் சட்டம் கூட்டாட்சி மற்றும் சமஷ்டி அமைப்பு இல்லாமல் ஒற்றையாட்சி முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.  இதில் தமிழர்களுடைய உரிமைகள் காவு வாங்கப்பட்டன.  சிங்கள மொழியே ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.  புத்த மதம் நாட்டின் மதமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது.  ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவுக்குப் பின் 1979ல் ஜெயவர்த்தனே காலத்தில் இரண்டாவது அரசியலமைப்புச் சட்டத்தை பிரான்ஸ் நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டது.  எல்லா அதிகாரங்களும் அதிபருக்கு உண்டு என்று அனைத்து அதிகாரங்களையும் ஜெயவர்த்தனே கபளீகரம் செய்துகொண்டார். சர்வாதிகாரி போன்று தமிழினத்தை அழித்தார்.  லூயி 14 போன்று நான்தான் அனைத்தும் என்ற போக்கில் ஜெயவர்த்தனே நர்த்தனமாடினார். நீதித்துறை அதிகாரங்களிலும் கைவைக்கப்பட்டது.  ஜெயவர்த்தனே வகுத்த இரண்டாவது குடியரசு அரசியல் சட்டம் 1989லிருந்து இன்றுவரை நடைமுறையில் உள்ளது.  இப்படியான நிலையில் இலங்கை அரசியலமைப்புச் சட்டம் தொடர்ந்து ஸ்ரீமாவோ பண்டாரநாயகா, ஜெயவர்த்தனே, ராஜபக்சே போன்ற அதிபர்களுக்கு தமிழர்களை ஒழிக்கப் பயன்பட்டது. இதில் என்ன வேடிக்கையென்றால் ஜெயவர்த்தனே தன்னுடைய ஆரம்ப கட்ட பொதுவாழ்வில் மார்க்சிய சிந்தனையோடு பொதுவுடைமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்.

இந்நிலையில் புதிய மைத்ரி சிறிசேனா தலைமையில் இயங்கும் இன்றைய இலங்கை அரசில் வகுக்கப்படும் மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழர்களுக்கு சம உரிமையோடு சக வாழ்வோடு வாழ வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று அனைவரும் விரும்பினர். ஆனால் மைத்ரி சிறிசேனா சமஷ்டி அமைப்புக்கே வழி இல்லை என்று சொன்னது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் ஆகும்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு மாநிலங்களில் பீதியை உண்டாக்கும் ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும். தமிழர்களிடம் அபகரித்த நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மாகாண கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்கள் குறிப்பாக காவல்துறையை நிர்வகிக்கும் உள்ளக நிர்வாக அதிகாரம், நில நிர்வாக அதிகாரம், மீன்பிடித் தொழில் போன்ற அதிகாரங்கள் பிரித்து வழங்க வேண்டும்.  காணாமல் போன தமிழர்களை கண்டறிய வேண்டும். 2009 போர்க்காலத்தில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். வடக்குக் கிழக்கு தமிழர்வாழ் பகுதிகளில் சகஜமான நிலைமை திரும்ப வேண்டும்.

இதையெல்லாம் வழிவகுக்கக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் இலங்கையில் வந்தால்தான் தமிழினம் உரிமைபெற்ற பிரஜையாக திகழ முடியும். ஆனால் இன்றைக்கும் நிச்சயமாக சிங்கள அரசாங்கம் தமிழர்களை ஒழித்தே தீரும் என்ற எண்ணம்தான் பெருவாரியான தமிழ் சகோதரர்களிடம் இருக்கின்றது. இந்த அச்சத்தைப் போக்கக் கூடிய வகையில் தமிழர்கள் மத்தியில் அரசியல் தீர்வுக்கு சர்வதேச கண்காணிப்போடு பொதுவாக்கெடுப்பும், போர்க் குற்றங்களை விசாரிக்க சர்வதேச சுதந்திரமான, நம்பகமான விசாரணையும் வேண்டுமென்று தமிழர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இம்மாதிரியான தமிழர்களின் கோரிக்கைகள் ஈடேறி, புதிதாக ஏற்றுக்கொள்ளப்படும் அரசியலமைப்புச் சட்டத்திலும் தமிழர்களும் சம உரிமையோடும் சுயமரியாதையோடும் வாழ வகை செய்தால்தான் புதிதாக வரும் அரசியல் சட்டம் அங்குள்ள தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.  நசுக்கப்பட்ட இனத்திற்கு புதிய அரசியலமைப்புச் சட்டம் வெறும் களிம்பு போடாமல் தீவிர சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் இருந்தால்தான் பிரச்சினைகளில் தீர்வு காண முடியும். இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா புதிதாக ஏற்கப்படும் அரசியலமைப்புச் சட்டத்தில் சமஷ்டி அமைப்புக்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஈழத்தமிழர்களுடைய பாடு கேள்விக்குறியாகிவிட்டது.

(கட்டுரையாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர். திமுக செய்தி தொடர்பாளர், கதைசொல்லி இதழின் இணை ஆசிரியர். தொடர்புக்கு : rkkurunji@gmail.com)

Srilanka K S Radhakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment