Advertisment

ரஜினி : போட்டி யாருடன்?

அ.தி.மு.கவுக்கு மாற்றாக தன்னை முன்னுறுத்திக் கொண்டுள்ள தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ரஜினி கடும் போட்டியாளராக இருப்பார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rajini new year wishes

அரவிந்தன்

Advertisment

ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றி, ‘தலைவர்’ அவதாரம் எடுக்கிறார், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். அரசியல் கட்சியைத் தொடங்குவது பற்றிய அவரது அறிவிப்பு, பல கட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருப்பதிலோ, எரிச்சலை ஏறபடுத்தியிருப்பதிலோ வியப்பில்லை.

சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு கட்சி தொடங்குவதான அவரது அறிவிப்பு, ‘இனி நல்ல தீனிதான்’ என்ற எண்ணத்தை மீடியாவுக்கு ஏற்படுத்த முடியாதபடி, ‘கட்சி தொடங்கும் வரை எது பற்றியும் பேசப் போவதில்லை’ என்ற அவரது கருத்து ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. இது காட்சி ஊடகங்களில் ஒரு விவாதப் பொருளாகவும் உருப்பெற்றுவிட்டது. தமிழகத்தின் ‘முக்கியப் பிரச்சினைகள் பற்றி அவரது கருத்து என்ன?’ என்ற கேள்வியை எழுப்பவும் இது இடமளித்திருக்கிறது. ஆனால் இத்தகைய விமர்சனங்களை தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்பவர்களும், வலைத் தளங்களில் உள்ள சில ‘மீம்ஸ்’ க்ரூப்களைச் சார்ந்தவர்களும்தான் முன் வைக்கிறார்கள். பெருவாரியானவர்கள் ரஜினியின் முடிவு காலதாமதமாகவேனும் வெளிவந்ததை வரவேற்கவே செய்கிறார்கள்.

அடுத்த நகர்வாக பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றங்களைச் சார்ந்தவர்களின் முழு விவரங்களைச் சேகரிக்க தகவல் தொழில் நுட்ப ரீதியான ஏற்பாட்டையும் ரஜினி மேற்கொண்டிருக்கிறார். இதுதவிர, தமிழகத்தில் ஒரு நல்ல மாற்றத்தை விரும்புவோரும் தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து கொண்டு தனது அமைப்பில் இணையலாம் என்ற அவரது அழைப்பு பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஆர்வத்தோடு ரஜினி மன்றத்தின் இந்த ‘APP’ மூலம் அடுத்தடுத்த நாட்களில் ஆயிரக்கணக்கானோர் ஆதரவு தந்து இணைந்து இருப்பதாகச் சொன்னார், ரஜினியின் நெருங்கிய நண்பர் ஒருவர்.

‘தமிழக சட்டசபைத் தேர்தல் குறித்த காலத்தில் நடைபெறுவதானால் 2021-ல்தான் நடைபெற வேண்டும். அதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கும் நிலையில், அதுவரை ரஜினி எவ்விதச் செயல்பாடும் இன்றி, இப்போதைய கவனத்தை, எதிர்பார்ப்பைத் தக்க வைத்திருக்க முடியுமா?’ என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக,

‘2019-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற வேண்டும். அத்தேர்தலில் அவரது நிலை என்னவாக இருக்கும்?’ என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

தமிழக அரசியலில் நிலவும் ஒரு குழப்ப நிலை, மாநில ஆட்சியின் ஸ்திரத்தன்மை குறித்த சந்தேகத்திற்கும் இடமளிப்பதாக அமைந்திருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து சட்டசபைக்கும் முன்கூட்டியே தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புகள் உருவாவதை மறுப்பதற்கில்லை. சசிகலாவையும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சசிகலா குடும்ப உறுப்பினர் டி.டி.வி. தினகரனையும் ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்து தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் பிறப்பித்த உத்தரவு செல்லுமா? என்ற வழக்கு தற்போது சென்னை ஹைகோர்ட் முன்பு பரிசீலனையில் உள்ளது. இதன் தீர்ப்பு, தமிழகத்தில் நடைபெறும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் ஆயுளைத் தீர்மானிப்பதாக அமையும்.

இந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வந்தால், அதுவும் சபாநாயகர் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானதாக அமைந்தால், எடப்பாடி ஆட்சி மெஜாரிட்டி பலத்தை இழந்து சட்டமன்றப் பொதுத் தேர்தல் வரும். அத்தகைய நிலை (அ.தி.மு.க. பலவீனமாக உள்ள இன்றைய நிலையில்) தங்களுக்கு சாதகமாக அமையும் என்று தி.மு.க. கணக்குப் போட்டது. ஆனால் தற்போது ரஜினியின் அரசியல் பிரவேசம், தி.மு.க.வின் அபிலாஷையை ஆட்டம் காண வைத்திருக்கிறது.

நடிகர் விஜயகாந்த் தனிக்கட்சி தொடங்கியபோது, ம.தி.மு.க., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகளின் வாக்கு வங்கியில் சேதாரத்தை ஏற்படுத்தினார். அப்போது அ.தி.மு.க.வுக்கு தலைமைப் பொறுப்பில் ஜெயலலிதா எனும் ஆளுமை இருந்தார். அதனால் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி பாதிக்கப்படவில்லை. தற்போது ரஜினியின் வருகை, சில்லறைக் கட்சிகளைப் பாதிப்பதுபோல, வலுவான தலைமை இல்லாத அ.தி.மு.க.வையும் பாதிக்கவே செய்யும் என்பதே அரசியல் விமர்சனர்களின் பொதுக் கருத்தாக உள்ளது.

அதனால், அ.தி.மு.கவுக்கு மாற்றாக தன்னை முன்னுறுத்திக் கொண்டுள்ள தி.மு.க., குறிப்பாக அதன் முதலமைச்சர் வேட்பாளர் - தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ரஜினி கடும் போட்டியாளராக இருப்பார் என்பதை, அண்மையில் சில காட்சி ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளும் உறுதிப்படுத்துகின்றன. உதட்டளவில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை மு.க. ஸ்டாலின் வரவேற்றாலும், நிச்சயம் ரஜினி ஒரு சவாலாக இருப்பார் என்பதை தனிப்பட்ட முறையில் பேசும்போது, தி.மு.க.வின் முக்கியஸ்தர்கள் ஒப்புக் கொள்ளவே செய்கிறார்கள்.

ஆளும் கட்சி என்ற கோதாவுடன் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலைச் சந்தித்து, ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்தும், சுயேச்சையாகப் போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் (ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல், தேர்தலுக்குப் பிறகு பணம் கொடுப்பதாக உறுதி மொழி அளித்து) வெற்றி பெற்றது மட்டுமின்றி, தி.மு.க.வை டெபாசிட்டும் இழக்கச் செய்திருக்கிறார். அந்த வகையில் அ.தி.மு.க.வின் புதிய தலைமையாக டி.டி.வி. தினகரன் உருவெடுக்கிறாரா? அவர் அந்தக் கட்சி சிதையாமல் பார்த்துக் கொண்டு விடுவாரா? என்று தி.மு.க. கவலைப்படும் நேரத்தில், ரஜினியின் வருகை, கூடுதல் கலக்கத்தை அக்கட்சியிடம் தோற்றுவித்துள்ளது.

எனினும், சட்டசபைத் தேர்தல் வரை நேரடியாக ரஜினியின் செயல்பாடு எதுவும் இருக்காது என்பது அவர் மீதான விமர்சனங்களை கூர்மைப்படுத்தும். அது அவரைப் பலவீனப்படுத்தும் என்று இரு பிரிவு அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கணக்கு போடுகின்றன. அவர்களின் இந்த நம்பிக்கை, யதார்த்த நிலைக்குப் பொருந்தியதா என்ற கேள்விக்கு வரும் நாட்கள்தான் விடையளிக்கும்.

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment