Advertisment

தேர்தல் யானைக்கு முந்தைய மணி ஓசை!

திமுகவைப் பொறுத்தவரையில், ஜெயலலிதா இல்லாத பலவீனமான அதிமுக அரசு தொடரக் கூடாது என நினைக்கிறது. அதிமுக ஆட்சி கவிழ்ந்தால்தான் திமுக ஆட்சிக்கு வர முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
modi met karunanidhi

ச.கோசல்ராம்

Advertisment

சென்னை வந்த பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததுதான், தமிழக அரசியலில் ஹாட். பாஜக, திமுக உள்பட அனைவரும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று வேக வேகமாக சொல்லும் போதே, இதன் பின்னணியில் ஏதோ ஒளிந்திருக்கிறது என்பது புரிகிறது.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்கள் எப்போதும் தெளிவாக திட்டமிட்டே உருவாக்கப்படும். பிரதமர் சென்னை வருவது உறுதியான நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே, கருணாநிதியை அவர் சந்திக்கலாம் என்ற பேச்சு வந்தது. மாநில தலைவர் தமிழிசை, தேசிய தலைவர் அமீத் ஷாவுடன் இது பற்றி பேசியிருக்கிறார். இதன் சாதக பாதகங்களை கேட்டுள்ளார், அமித் ஷா.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் யாருடனாவது கூட்டணி அமைத்து போட்டியிட்டால்தான் ஜெயிக்க முடியும். அதிமுகவின் இரண்டு அணிகளும் நம்மோடு கூட்டணிக்கு வர தயாராக இருக்கிறார்கள். அதிமுகவின் இரு அணிகளும், மண்குதிரைக்குச் சமமானவர்கள். அவர்களை நம்பி பயணம் செய்ய முடியாது என்று தெளிவுப்படுத்தியுள்ளார். அதோடு, அதிமுக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. இதனால், பாஜகவுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த கெட்ட பெயரை மாற்ற வேண்டுமானால், மோடி கருணாநிதியை சந்திக்க வேண்டும் என்றும் எடுத்து சொன்னதாக தெரிகிறது.

தொலைநோக்குப் பார்வையுடன் திட்டமிடும் அமீத் ஷாவுக்கு இந்த பாயிண்ட் பிடித்துப் போகவே, மோடியிடம் இது பற்றி பேசியிருக்கிறார். அவரும் சம்மதிக்கவே, சூரியனை நோக்கி நகர ஆரம்பித்தது, தாமரை.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் பதினைந்து மாதங்களுக்கு மேல் இருக்கிறது. ஆனால் பிஜேபி இப்போதே அதற்கான காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டது. எதிர்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பாக்கப்பட்ட நிதிஷ் குமாரை தன் வசப்படுத்தியது. அதே போன்ற நடவடிக்கைதான் இது என்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் கடுமையாக விமர்சனம் செய்தவர், நிதிஷ் குமார். அப்போதே பிஜேபி கூட்டணியில் இருந்து விலகினார். காங்கிரஸ் முயற்சியால் முலாயம்சிங்குடன் சேர்ந்து மெகா கூட்டணி அமைத்து பிஜேபியை தோற்கடித்து மீண்டும் முதல்வரானார். இந்த கூட்டணி அப்படியே தொடர்ந்தால், பீகாரில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்பதாலேயே தங்கள் பக்கம் மீண்டும் இழுத்துக் கொண்டது, பாஜக.

செக்குலரிசம் பேசும் திமுக, காங்கிரசுடன் வலுவான கூட்டணியில் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுகதான் இன்றைய சூழலில் பெரிய கட்சி. அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில், அங்கு வலுவான தலைமை இல்லாததால், இப்போது தேர்தல் நடந்தால், திமுகவுக்கு சாதகமாகவே இருக்கும். ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி அமைந்தால், காங்கிரசுக்குத்தான் லாபம்.

வட மாநிலங்களில் பல மாநிலங்களில் பா.ஜ.க. 100 சதவிகித வெற்றியைப் பெற்றுள்ளது. என்னதான் நல்லது செய்தாலும் அப்படியே அந்த வெற்றியை தக்க வைக்க முடியாது. அங்கு ஏற்படும் சரிவை, தென்மாநிலங்களில்தான் சரி செய்ய வேண்டும். ஆந்திரா, தெலுங்கானாவில் வலுவான கூட்டணி இருக்கிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு இணையாக பாஜகவும் வலுவாக இருக்கிறது. தமிழகம், கேரளாவில்தான் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்தால், எளிதாக 39 தொகுதிகளை பெற முடியும். அதோடு திமுகவுடன் கூட்டணி அமைத்தால், பாஜகவுக்கு பலம் என்பதோடு, காங்கிரஸ் கூட்டணி பலவீனப்படும் என்பதையும் கவனிக்க வேண்டும். திமுக, பாஜக கூட்டணி அமைந்துவிட்டால் தென் மாநிலங்களில் கர்நாடகா, கேரளா தவிர வேறு மாநிலங்களில் வெற்றியை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

திமுகவைப் பொறுத்தவரையில், ஜெயலலிதா இல்லாத பலவீனமான அதிமுக அரசு தொடரக் கூடாது என நினைக்கிறது. ஜெயலலிதா இல்லாத பலவீனமாக இருக்கும் போதே தேர்தலை சந்தித்தால், மகத்தான வெற்றியை பெற முடியும் என நினைக்கிறது. ஆனால், மத்திய அரசு ஆதரவுடன் கடந்த ஓராண்டாக ஆட்சி தொடர்கிறது. அதிமுக ஆட்சி கவிழ்ந்தால்தான் திமுக ஆட்சிக்கு வர முடியும். அதிமுக தலைவர்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்ட பாஜகவே நெருங்கி வரும் போது, நாம் ஏன் ஒதுங்கிப் போக வேண்டும் என நினைக்கிறது.

பாஜகவைப் பொறுத்தவரையில், திமுக மீதான 2ஜி வழக்குதான், நெருடலாக இருந்தது. அந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. ஒருவேளை அந்த வழக்கில் இருந்து விடுதலை கிடைத்தால், திமுகவுடன் கூட்டணி வைப்பதில் அவர்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது. அதற்கான ஆரம்ப புள்ளியாகதான் இந்த சந்திப்பு என்கிறார்கள்.

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததால், காங்கிரஸ், அதிமுக போன்ற கட்சிகளால் விமர்சனங்கள் செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் ஆளும் கட்சியினருக்கு, எங்களுக்கு வேறு சாய்ஸ் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார், மோடி.

இனி அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைக்கும் படலம் ஆரம்பிக்கலாம். கூடவே விரைவில் தமிழகத்துக்கு தேர்தல் வருவதற்கான வாய்ப்பும் இந்த சந்திப்பின் மூலம் சாத்தியப்பட வாய்ப்பு உள்ளது. பின்னே வரவிருக்கிற தேர்தல் யானைக்கு, முன்னே வந்த மணி ஓசையாக இந்த சந்திப்பை கருத இடம் இருக்கிறது.

Bjp Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment