Advertisment

ஜெயலலிதா நினைவு நாள் : “அம்மா”என்ற முத்திரையை தக்கவைத்துக் கொள்ள காத்திருக்கும் சவால்கள்

ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, ’அம்மா என்ற முத்திரையை தக்க வைத்துக் கொள்ள காத்திருக்கும் சவால்கள்’ என்ற தலைப்பில் பால்ராஜா எழுதிய கட்டுரை இது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amma Canteen

அம்மா கேண்டின்

பால் ராஜா

Advertisment

Paul raja பால்ராஜா

“அம்மா” என்ற ஒற்றை வார்த்தையில் உலகமே உற்றுநோக்கிய பெண்மணி தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. சினிமாவில் தொடங்கி அரசியல் வரை அசைக்க முடியாத இடத்தை வரலாற்றுச்சுவட்டில் பதித்தவர். சமகால சகவாசியாக ஒரு இரும்புப்பெண்மணியின் ஆட்சிக் காலத்திற்குள் வாழ்ந்ததற்கான பிரமிப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்திச் சென்றவர்.

இந்த கட்டுரையின் நோக்கம் அரசியல் விமர்சனத்தையோ, அவர் சார்ந்த கட்சியின் செயல்பாடுகளையோ சுட்டிக்காட்டுவதாய் உங்களை இட்டுச் செல்லாது. மாறாக அவரது வியாபார மற்றும் பொருளாதார சிந்தனையை அடிகோலிடுகிறது. அடித்தட்டு வியாபாரத்தில் தொடங்கி பெருநிறுவன சித்தாந்தங்கள் வரை இவர் எளிதில் கையாண்ட விதம் மிகவும் எதார்த்தமானது. இது ஒரு பெரிய அர்த்தங்களை பொதிந்த ரகசியம் இல்லை என்றாலும் எல்லா அரசியல் கட்சிகளும் உற்றுநோக்கும் விஷயமாக மாறியிருக்கிறது.

சாமானிய மக்களை கவர்ந்து அவருக்கு அரசியல் ரீதியாக வெற்றிகளை ஈட்டித்தந்தது. கட்சி நிர்வாகத்திலும் அவரை கைதேர்ந்தவராக காட்டியது. கட்சியிலும் ஆட்சியிலும் இவரை அசைக்க முடியாதவராக மாற்றியது. கோடான கோடி தொண்டர்களை இரட்டை விரலுக்குள் ராணுவக்கட்டுப்பாட்டோடு இருக்கச் செய்தது. இதற்காக அவர் விளம்பரத்திற்காகவோ, நிதிகளை கொட்டியோ எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. தேசபக்தி, வாழ்க்கைத்தியாகம் செய்த எத்தனையோ தலைவர்களை வரலாறு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்றோ கட்சிகளின் நிலைமை பெப்சி, கோக்க கோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களைப் போல செயல்பட வேண்டிய நிர்ப்பந்த நிலைமைக்கு சென்றுவிட்டன.

Amma School Bags அம்மா ஸ்கூல் பேக்

தலைவர்கள் என்ற நிலையை கடந்து கட்சிகளை விளம்பரப்படுத்த வேண்டிய கட்டாயம் பாகுபாடின்றி அனைத்து கட்சிகளுக்கும் வந்துவிட்டது. ஒரு வணிகத்திட்டத்தை செயல்படுத்தும் போது அந்த குறிப்பிட்ட தயாரிப்பு பொருளின் (பிராண்ட்) பெயர், நிறுவனத்தின் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு தயாரிப்பு (பிராண்ட்) எத்தகையது என்பதையும் குறிப்பிடுவது மிகவும் முக்கியமானது. சாமானியர்களின் வாயில் கூட எளிதில் உச்சரிக்க ஏதுவான பெயரை கொண்டிருக்க வேண்டியது ஆளுமையும், அடையாளமும் கொண்ட வியாபாரத்திற்கு சூத்திரமாகும். அதிமுகவை பொறுத்தவரை இந்த சூத்திரம் ராஜதந்திர அடிப்படையில் கையாளப்பட்டுள்ளதை கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. “அம்மா” என்ற ஒற்றை வார்த்தையில் மக்கள் மத்தியில் பொருள்படும் படியாக அந்த கட்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதிமுக என்றாலே “அம்மா” என்ற அளவிற்கு பெயர் ஆளுமை உச்சம் பெற்றுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவர் கையாண்ட சூத்திரம் மற்ற கட்சிகளுக்கு இலைமறை காய்மறையாக ஒரு பெரிய உண்மையை உணர்த்தியுள்ளது.

மற்றொரு சூட்சுமத்தையும் இதில் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். “அம்மா” என்ற வார்த்தை வெறும் தமிழ்நாட்டிற்கு மட்டுமே உரிய தாய்மைப் பண்பை வெளிப்படுத்தும் பெயர் மட்டுமல்ல. நாடு கடந்து உலகையே ஆளும் மந்திரச் சொல். அன்பையும் மரியாதையும் ஆழ்மனதில் இருந்து ஈர்க்கும் அற்புதநாமம். அப்படியானால் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய கருத்து என்பது அஇஅதிமுகவை பெருநிறுவனமாக கருதினால் அதை விளம்பரப்படுத்த பயன்படுத்திய சரியான யுக்தி “அம்மா” என்ற ஒற்றைச் சொல்தான்.

Amma Pharmacy அம்மா மருந்தகம்

வியாபார நோக்கில் சமயோஜிதமாக பார்த்தால் தயாரிப்பு பொருளை மையமாக வைத்து ஒரு ஆளுமை ஒன்றையும் உருவாக்க வேண்டியது கட்டாயமாகிறது. அப்படி உருவாக்கப்பட்டதுதான் அஇஅதிமுகவின் மறைபொருள். அம்மா என்றால் அன்பு, உறுதி, அறிவு, தைரியம் என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு ஏன்? சில வடஇந்திய ஊடகங்கள் ஜெயலலிதாவை இரும்பு பெண்மணி என்று வர்ணிக்கவும் “அம்மா” என்ற வார்த்தை வகை செய்துள்ளது.

சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்) பற்றி தெரிந்த வல்லுநர்களை கேட்டுப்பாருங்கள், “எந்தவொரு நிறுவனத்தின் பெயரும் உரிமையாளரை மையமாக கொண்டிருக்காது. அது ஆபத்து நிறைந்ததும், புத்திசாலித்தனம் இல்லாததுமாக இருக்கக் கூடும். அந்த உரிமையாளருக்கு பிறகு அந்த நிறுவன சாம்ராஜ்யம் சரிந்துவிடக்கூடும். கோடிக்கணக்கில் பயன்பாட்டில் இருக்கும் கம்ப்யூட்டரை உபயோகிக்கும் நபர்களுக்கும் எல்லோருக்கும் உலகப்பணக்காரராக நம்மை வியக்க வைத்த பில்கேட்ஸ் முகம் மனதில் பதிந்துள்ளதா? எனக்கேட்டால் இல்லை. மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் அமுல் பால், வெண்ணெய், நெய் நிறுவனத்தின் உரிமையாளர் யார் எனக் கேட்டால் எத்தனை பேர் சொல்லி விடுவார்கள் அவர் டாக்டர்.வர்கீஸ் குரியன் என்று...?

ஏதேனும் சந்தர்ப்பத்தில் உரிமையாளர் மரிக்க நேரிடுனும் வியாபார சாம்ராஜ்யம் நிலைநிற்க வேண்டும் என்பதே தலைசிறந்த வியாபாரியின் நோக்கமாக இருக்கும். சொத்துக்குவிப்பு வழக்கு என எத்தனையோ சோதனைகளை சந்தித்தாலும் “அம்மா” என்ற ஒற்றைச்சொல்லுக்கு எந்தவித பங்கமும் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டதை நினைவு கூறலாம். துரதிருஷ்டவசமாக பிராண்ட் என்பதற்கு கீழ் அடுத்தடுத்து பல்வேறு தயாரிப்புகள் வந்தது சற்றே சரிவாகத்தான் பார்க்க முடிந்தது.

Amma Water அம்மா குடிநீர்

அம்மா கேண்டீன், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா விதைகள், அம்மா சிமெண்ட், அம்மா தியேட்டர்கள், அம்மா குழந்தைகள் பாதுகாப்பு கருவி, அம்மா நடமாடும் சேவை திட்டம், அம்மா உடல் முழு பரிசோதனை திட்டம், அம்மா பெண்கள் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம், அம்மா ஊறுகாய், அம்மா பிரசவ சஞ்சீவி திட்டம் என அடுக்கடுக்காக செயல்படுத்தப்பட்டது கேலிக்குரியதாக மாறியது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒரு கூட்டத்தில் பேசுகையில், “இப்படியே போனால் அம்மா கத்தரிக்காய், அம்மா வெண்டைக்காய்” என்றெல்லாம் கொண்டு வந்துவிடுவார்கள் என பகிரங்கமாக பேசினார். இலவச திட்டங்கள் என்ற பெயரில் அடுக்கடுக்காக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்துமே புதிய வாடிக்கையாளர்களை (வாக்காளர்கள்) கொண்டுவரவில்லை என்பதுதான் நிதர்சனம். அதே சமயம் ஒரு காலக்கட்டத்தில் அரசால் வழங்கப்பட்ட இலவசம் அனைத்தும் மக்கள் மனதில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியதே தவிர வேறொன்றும் இல்லை. இறுதியில் இலவசங்கள் அனைத்தும் குப்பைக்கே சென்றன. ஒரு கடையில் பொருள் வாங்கச் சென்றால் அந்த தயாரிப்புடன் இணைக்கப்பட்ட இலவசம் என்பது சில மணித்துளிகளில் குப்பைக்கு செல்லும் தகுதியோடுதான் இருக்கும் என்பது வாடிக்கையாளர்கள் உணர்ந்து கொள்ளும் விஷயம்தான். இலவசங்களை இணைக்கும் போதே அந்த தயாரிப்பின் தகுதியையும் மதிப்பிட முடியும் என்பதும் மறுக்க முடியாதது.

இந்தியாவை பொறுத்தவரை மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டால் அது எங்கிருந்து யாரால் வாங்கப்படுகிறது? மாநிலத்தின் நிலை என்ன? அரசு எதற்காக இந்த திட்டத்தை மேற்கொள்கிறது என்பதையெல்லாம் உளவியல் ரீதியாக புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. இவையெல்லாம் வெறுமனே வாக்கு சேகரிப்பு யுக்திதான். வாடிக்கையாளர்களை (வாக்காளர்களை) விலைகொடுத்து வாங்குவதை போன்றதே. மேற்குறிப்பிட்ட திட்டங்களில் இரண்டோ மூன்றோ தவிர அனைத்து திட்டங்களையும் உற்றுநோக்கினால் ஏழை மக்களை (வாக்காளர்களை) மையமாக வைத்தே உருவாக்கப்பட்டது புலப்படும். தேவை சார்ந்த மக்களை தேவைகளை நிறைவேற்றும் திட்டங்களோடு சந்திப்பதே நோக்கம்.

Amma Tea அம்மா டீத்துள்

பா.ம.க. போன்ற கட்சி விடுக்கும் அறைகூவல், சவால் என்னவெனில் இலவசங்கள் இல்லாத ஆட்சி அமைய வேண்டும். இலவசமாக கொடுக்க வேண்டுமென்றால் கல்வி, மருத்துவத்தையும் கொடுத்து ஆரோக்கியமாக சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே. இந்த சவாலை ஏற்றுக் கொள்ள எந்த கட்சியும் தயாராக இல்லை. மாறாக இலவசத்தை ஆர்வத்துடன் அளிப்பதை அஇஅதிமுகவை பின்பற்றி வழங்குவதிலேயே குறியாக இருக்கின்றனர். இதனை ஆரோக்கிய முன்வடிவாக எடுத்துக் கொள்ள முடியாது.

அடுத்ததாக வர்த்தகத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் “பிராண்ட் அசோசியேஷன்”. இதற்கு வர்த்தக நெறிமுறைகளுடன் கூடிய சிறந்த தயாரிப்பு மற்றும் தொழில்முறை நிர்வாகக்குழு கட்டமைக்கப்பட வேண்டியது அவசியம். நான் ஒருவனே என்ற அணுகுமுறையை தவிர்த்து வாடிக்கையாளர் நட்புடன் கூடிய அணுகுமுறையே சிறந்ததாக அமையும். அதிமுகவை பொறுத்தவரை அதன் தலைவர் “தான் ஒருவர்” என்பதையே நிலைப்படுத்தினார். அதையே கட்சி நிர்வாகிகளும், அடிமட்ட தொண்டர்களும் அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். அவருக்கு பிறகு என்ன என்பதை தெளிவுபடுத்தவில்லை.

ஆனால் சிறந்த வர்த்தக செயல்பாட்டில் “பிராண்ட் அசோசியேஷன்” கூட்டமைப்பின் முடிவு என்பது இன்றியமையாதது. இதைத்தான் லக்ஸ் என்ற திரைப்படம் விளக்கியது. பிராண்டிங் செயல்முறை மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. வாடிக்கையாளர் உறவு முகமைத்துவத்தை (சிஆர்எம்) முன்னிறுத்தியது. வாடிக்கையாளர் நலன்களை கருத்தில் கொள்ளாத பிராண்ட் உத்திகள் அனைத்துமே தோல்வியை தழுவுவதும், “விநியோக நெட்வொர்க்” செயலற்று போவதும் வர்த்தக செயல்முறைகளில் கண்டுகொள்ளப்படாமல் போவதையும் புரிய வைத்தது.

உதாரணத்திற்கு கடந்த 2016 டிசம்பரை நினைவில் கொள்ளுங்கள். சென்னையில் வெள்ளம் என்பது மக்களின் சிரிப்பை, வாழ்வாதாரத்தை சூறையாடியது. மனிதப்பிழைகள், இயற்கையின் உக்கிரம் ஆகியவற்றால் அதன் பாதிப்பு மக்களை உலுக்கியது. முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு இழப்பீடுகளை சந்தித்தது. ஆனால் வெற்றிகரமாக நடத்தப்படும் நிறுவனங்களால் கையாளப்பட்ட “நெருக்கடி மேலாண்மை” அந்த நிறுவனங்களை இதுபோன்ற இழப்பீடுகளில் இருந்து காப்பாற்றியது. இயற்கை பேரழிவு, உலகலாவிய நிதியியல் நெருக்கடி, சந்தை சரிவு ஆகியவற்றில் இருந்து காப்பாற்றப்பட்டது. காரணம் இதுபோன்ற இயற்கை சீரழிவு பாதிப்புகளை எதிர்கொள்ள நிர்வாகக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின் முடிவைப் பொறுத்தே நிறுவனங்களை பாதிப்புகளில் இருந்து மீட்டெடுத்தன. ஆனால் இந்த முயற்சியில் தமிழக அரசு தோல்வியையே சந்தித்தது. முன்னேற்பாடு, திட்டமிடல் ஆகியவற்றில் கோட்டை விட்டதன் விளைவாக தமிழக ஆட்சி கோட்டை ஸ்தம்பித்தது.

Amma Salt அம்மா உப்பு

முகம் தெரியாத இளைஞர்களும், அரசியல் அறியாத ஆன்மாக்களும், அரசு சாரா நிறுவனங்களும் இல்லையென்றால் அன்றையை சென்னையை நினைத்துப்பார்க்க முடியாது. அரசாங்க பங்களிப்பு என்பது கேமராக்களுக்கு “போஸ்” கொடுப்பதும், நிவாரணப்பொருட்களை கொண்டு வரும் லாரிகளில் தங்களது கட்சி தலைவரின் படங்களை ஒட்டச் சொல்லி வழிமறிப்பதுமாகத்தான் இருந்தது. வர்த்தக மொழியில் பார்த்தால் “ஆக்கிரமிப்பு முத்திரை” என்ற அணுகுமுறையை திணித்தது. மக்கள் மத்தியில் இந்த அணுகுமுறை எதிர்மறை சமிக்ஞையை அனுப்பியது.

சூழ்நிலைகளை மேற்கொள்ளத் தெரியாமல் திடுதிப்பென்று கண்மூடித்தனமாக செயல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் சரிவைத்தான் சந்திக்கும் என்பதை உணர்த்தியது. உலகப்புகழ் பெற்ற நெஸ்லே நிறுவனத்தின் “மேகி நூடுல்ஸ்” தயாரிப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரே நாள் இரவில் இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டது. தயாரிப்புகளை திரும்பப் பெற்றுக் கொள்ளும நிலைவந்தது. கார் வர்த்தகத்தில் ஜாம்பவானான “வோக்ஸ்வேகன்” நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்த 3.28 லட்சம் கார்களை திரும்பப் பெற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதையும் அறிகிறோம். காரணம் சரியான நெருக்கடி மேலாண்மை நிர்வாகத்தை கையாளவில்லை என்பதே.

ஆனால் இந்த சரிவு விஷயத்தில் அரசியல் தலைவர்களுக்கு மக்கள் மத்தியில் வழங்கப்படும் மரியாதைக்கும், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மரியாதையையும் வேறுபடுத்திப் பார்க்க முடியும். மற்றொரு விஷயம் வர்த்தகமாக இருந்தாலும், நிர்வாகமாக இருந்தாலும் “ஸ்டிக்கர் கலாச்சாரம்” எந்தகாலத்திலும் சீரான நன்மையை தராது என்பதையும் உணர்த்துகிறது. அது சில சமயங்களில் பத்திரிக்கைகளில் கேலிக்குரியதாகி விடுகிறது. அம்மா ஸ்டிக்கரை தலையில் கட்டுவது, கையில் கட்டுவது, இலவச திருமணத்தில் தம்பதிகளுக்கு அம்மா ஸ்டிக்கர் ஒட்டுவது, பள்ளிக் குழந்தைகளின் கைகளில் ஸ்டிக்கர் கட்டுவது, உச்சக்கட்ட வேதனையாக சியாச்சின் சண்டையில் உயிரிழந்த ராணுவ வீரரின் இறுதி மரியாதையில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டிய மலர் வளையம் வைத்தது என மக்கள் மத்தியில் எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தியது. மலிவான விளம்பரம் வர்த்தகத்தை சீர்குலைத்து விடும் என்பதற்கு இதைவிட சான்று தேவையில்லை.

நல்ல முன்னேற்றத்துக்கான அடித்தளத்தோடு தொடங்கப்பட்ட “அம்மா” என்ற பிராண்ட் நாட்களின் நகர்த்துதலில் மற்ற கட்சிகளோடு போட்டி போடுவதற்காக உபயோகப்படுத்தப்படும் மோசமான அடையாளமாக மாறிப்போனது. ஜெயலலிதாக உயிரோடு இருந்த போது “அம்மா” என்ற பிராண்ட்-க்கு அளித்த முக்கியத்துவத்தை அஇஅதிமுக என்ற முத்திரையை முன்னிலைப்படுத்துவதில் அளிக்கவில்லை. அம்மா என்ற முத்திரை மக்கள் மனதில் பதிந்த அளவிற்கு அஇஅதிமுக என்ற முத்திரை அவரது ஆட்சிக்காலத்தில் யார் மனதையும் ஊடுருவவில்லை.

அதேசமயம் தனக்கு பிறகு யார் அஇஅதிமுகவை வழிநடத்த வேண்டும் என்ற நோக்கோடு இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் குறித்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. இதனால்தான் அவரது மறைவிற்கு பிறகு மக்கள் உச்சக்கட்ட குழப்பத்தை அடைந்தனர். கட்சிக்குள்ளும் சலசலப்புகளும், சச்சரவுகளும் அதிகமாகி அஇஅதிமுக என்ற முத்திரையை கைப்பற்றுவதில் அணி அணியாக பிரிந்து கடுமையாக போட்டியிட்டனர். ஜெயலலிதா என்றால் அம்மா, அம்மா என்றால் ஜெயலலிதா என்றாகி விட்ட பிறகு தற்போது அம்மா என்ற பிராண்ட்-ஐ வைத்தே அதிமுகவையும், ஆட்சியையும் நிர்வகிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர் நிர்வாகிகள்.

அஇஅதிமுக என்று மட்டுமல்ல திமுகவிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. திமுக என்றால் கருணாநிதி என்ற கருத்துதான் அனைவரின் மனதிலும் பதிந்துள்ளது. இதனால் கட்சியை நடத்தக்கூடிய தகுதிகளை பெற்றிருந்தாலும் மு.க.ஸ்டாலினால் தலைவருக்கு உரிய அந்தஸ்தை பெற கடும் பிரயத்தனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் திமுகவை பிராண்ட்-ஆக முன்னிலைப்படுத்தாமல் கருணாநிதி என்பது தனி அடையாளமாகிப் போனதன் விளைவே இது. பா.ம.க.வின் நிலைமையும் இதுவே. அடுத்தடுத்து வைகோ, கேப்டன் என தனிநபர் அடையாளமே பிராண்ட்-ஆக முன்னிறுத்தப்படுகிறதே தவிர கட்சியின் பெயரை பிராண்ட்-ஆக மக்கள் மத்தியில் சேர்க்க முயற்சிகளை ஏற்படுத்த தவறிவிடுகிறார்கள்.

இன்போசிஸ் நிறுவனத்தின் உயிர்நாடியான என்.ஆர்.நாராயணமூர்த்தி ஒரு கட்டத்தில் அந்த நிறுவனத்தை விட்டு ஒதுங்கிக்கொண்டு 5 சதவீத லாபத்தில் தனது லாப இலக்கை நிறுத்திக் கொண்டு நிறுவனத்தை முன்னிறுத்தியதால் நிறுவன வளர்ச்சி என்பது தடையில்லாமல் சென்று கொண்டே இருக்கிறது. இதே வர்த்தக நடைமுறையைத்தான் கட்சிகளும் பின்பற்றியிருக்க வேண்டும்.

தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்டு கட்சிகளின் பிரசார பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இங்கு என்ன நடக்கப்போகிறது? யார் வெற்றி பெறப்போகிறார்கள்? என்ற ஆவல் அனைவரையும் தொற்றிக் கொண்டுள்ளது. ஆனால் அஇஅதிமுக சின்னத்தை கைப்பற்றிய ஆளும்கட்சி தரப்பினரும், தினகரன் தரப்பினரும் அம்மா என்ற பிராண்ட்-ஐ முன்னிறுத்தித்தான் பிரசாரம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். இதிலிருந்தே அதிமுக என்ற முத்திரைக்கு முக்கியத்துவம் அளிக்காத நிலை அப்பட்டமாகி விடும். அம்மா என்ற முத்திரையோடு அதிமுக என்ற முத்திரையையும் சேர்த்து வளர்த்திருந்தால் இந்த அளவிற்கு பிரச்னையை கட்சியும், ஆட்சியையும் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. இந்த பிரச்னையின் தீவிரத்தை ஆர்.கே. நகர் தேர்தல் முடிவு பகிரங்கப்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

கண்டிப்பாக தமிழக மக்கள் பெரிய அளவிலான மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. 100 சதவீதம் அதன் வெளிப்பாடு மக்கள் முகத்தில் பளிச்சிடுகிறது. ஆனால் மக்கள் பெரும்பாலான நேரங்களில் கவர்ச்சியான தோற்றம், வண்ணங்கள், அளவீடு ஆகியவற்றில் மயங்கி மறுபடியும் பெரிய பிராண்ட்களின் ஏமாற்று முயற்சிகளுக்கு பலியாகி விடுகின்றனர். இதனால் தமிழகம் எப்போது 100 சதவீதம் உண்மையான உறுதியான பிராண்ட்-க்கு முக்கியத்துவம் அளிக்கும் என்பது கேள்விக்குறியாகவே நீடித்து வருகிறது.

ஜெயலலிதா நினைவு நாள் கட்டுரைகள்...

1.தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் முதல் பெண் உறுப்பினர், ஜெயலலிதா – ச.கோசல்ராம்

2. தாய்ப்பாசத்துக்காக ஏங்கிய ஜெயலலிதா – ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா

3. “ஜெயலலிதா யாரையும் விட்டுக்கொடுக்க மாட்டாங்க” – செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு

4. ஜெயலலிதா இல்லாத ஒரு வருடம் - கவிதா முரளிதரன்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment