Advertisment

திரை உலகின் உலகநாயகன்... அரசியல் உலகின் பவர்ஸ்டாரா?

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரும் போது, சினிமா துறையில் இருந்தது போல உலக நாயகனாக இருக்க முடியுமா? அரசியல் பவர்ஸ்டாராக இருப்பாரா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kamal Hassan PC

வழக்கறிஞர் சுந்தரராஜன்

Advertisment

கமலஹாசன் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தபோது அதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் கமலஹாசனுக்கு முன்பே அரசியல் பேசிய ரஜினிகாந்த், பல தலைமுறைகளாக அரசியலுக்கு வருவதைப்போல ‘பாவலா’ காட்டி டபாய்த்துக் கொண்டிருப்பதால், கமலஹாசனின் அறிவிப்பும் மீடியாக்களைத் தவிர சமூக தளத்தில் பெரிய கவனத்தை துவக்கத்தில் பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் விளம்பரத்திற்காக கமலஹாசன் அரசியல் பேசுவதாக கருதியவர்கள் அதிகம்.

கமலஹாசன் தொடர்ந்து அரசியல் பேசியதுதான் அரசியல்வாதிகளை திரும்பிப் பார்க்க வைத்தது. குறிப்பாக ஆளும் கட்சி சார்ந்தவர்களும், அமைச்சர்களும் கமலஹாசனை திருப்பித்தாக்க ஆரம்பித்தனர். திமுகவின் குரலை வழக்கம் போல தி.க. ஒலித்தது. திராவிடக் கட்சிகளின் தலைமைகள் நலிவுற்ற நிலையில் தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்க நினைத்த பாஜக பதறியது. கம்யூனிஸ்ட்டுகள் கூட கமலுக்கு எதிர்வினையாற்றினர்.

“கமலஹாசன் அரசியலுக்கு வருவதை நாங்கள் எதிர்க்கவில்லை! யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்!!” என்று ஆரம்பிக்கும் விவாதம் மெல்ல “தமிழ்நாட்டின் முக்கியமான பல பிரச்சினைகளுக்கு கமலிடம் தீர்வு இல்லை. பின்னர் எப்படி அவர் அரசியலுக்கு வரலாம்....!?” என்ற தொனியில் நீட்டி முழக்கும்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை எதுவும் பேசாமலிருந்த கமலஹாசன், அவரது மறைவுக்கு பின்னர் ‘துணிச்சல்’ பெற்று அரசியல் பேசுவதாகவும் நமது அறிவுஜீவிகளிடம் ஒரு கருத்து இருக்கிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அமைதி காத்தவர்கள் பட்டியல் மிகவும் பெரியது. பிரதான எதிர்கட்சியே பெரும் போராட்டங்களை நடத்தியதில்லை. இடதுசாரிகள்கூட நெளிவுசுளிவாகத்தான் இருந்தார்கள். கருணாநிதியின் ஆட்சியில் துள்ளிக் குதிக்கும் பல அமைப்புகள் ஜெயலலிதா ஆட்சியில் துயில் கொண்டிருந்ததுதான் தமிழக வரலாறு. மேலும் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அமைதியாக இருந்தவர்கள், அவரது மறைவுக்கு பிறகு அரசியல் பேசக்கூடாது என்று சட்டமெல்லாம் எதுவுமில்லை. தமக்கு ஏதுவான அரசியல்-சமூகச் சூழல் இருக்கும்போது அதை பயன்படுத்திக்கொள்வது உலகம் முழுவதும் நடக்கும் சாதாரண சம்பவம்தான்.

இந்த எதிர்வினைகளுக்கு இடையே கமலஹாசன் தனது நகர்வுகளை திட்டமிட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறார். மாநில அரசை மட்டுமே விமர்சனம் செய்கிறார் என்ற விமர்சனத்தை தவிர்ப்பதற்காக, மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கோரினார். சுற்றுச்சூழல் பேசினார். களத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

எல்லாம் சரி! கமலஹாசன் அரசியலுக்கு வரலாமா? கூடாதா?

கமலஹாசன் அரசியலுக்கு வருவதால் அவருக்கு கிடைக்கப்போவது என்ன? அவர் இழக்கப்போவது என்ன? தமிழ்நாட்டிற்கு கிடைக்கப்போவது என்ன? தமிழ்நாடு இழக்கப்போவது என்ன?

கமலஹாசன் அரசியலுக்கு வருவதால் அவரது “உலகநாயகன்” பட்டம் பறிபோகலாம். அதைவிட அதிகாரம் மிகுந்த இடம் கிடைக்கும் என்று அவர் கனவு காணலாம். ஆனால் அவரது நிம்மதி பறிபோகும் என்பதை கணிப்பதற்கு அதீதமான அறிவு தேவையில்லை. இதுவரை அவரை விமரிசனம் செய்தவர்கள் குறைவு. அவரை விமரிசனம் செய்யாமல் புறக்கணித்தவர்கள் அதிகம். அவரது அரசியல் பிரவேசம் இதை முற்றிலுமாக மாற்றிவிடும். அவர் மீது அனைத்து திசைகளில் இருந்தும் விமர்சனக்கணைகள் பாயும். கமலஹாசனின் சொந்த சகோதரரான சாருஹாசனின் கருத்துகளே கமலஹாசனுக்கு ஆதரவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கமலஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமன்றி அவரைச் சார்ந்தோரின் தனிப்பட்ட வாழ்க்கையும் சமூக வெளியில் விவாதிக்கப்படும்.

சரி! கமலஹாசனின் அரசியல் அவதாரம் தமிழ்நாட்டிற்கு எதைக் கொடுக்கப்போகிறது என்பதே நமக்கு முக்கியமான கேள்வி. ஒரு திரைப்பட கதாநாயகன் கொடுக்கக்கூடிய அனைத்து அம்சங்களையும் தமிழ்நாட்டில் ஏற்கனவே கோலோச்சும் அரசியல் நாயகர்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே புரிந்தும், புரியாமலும், புரிந்ததுபோல தோற்றமளிக்கும் புரியாத ட்விட்களைத் தவிர வேறெதுவும் கிடைக்கும் எனத் தோன்றவில்லை.

ஏனென்றால் இருக்கும் அமைப்பு மீது குறை கூறுதலும், விமரிசனம் செய்தலும் மட்டுமே அரசியலாகிவிடாது. இதற்கு மாற்றான அமைப்பை முன் மொழியாத எந்த அரசியல் சக்தியும் மக்களின் ஆதரவை பெற முடியாது. இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் இடதுசாரிகள் முதல் ஏனைய பல அரசியல் முனைப்பாளர்களும் தோற்று நிற்கும் புள்ளி இதுவாகவே தோன்றுகிறது. இடதுசாரிகளை மக்கள் மதிப்பார்கள் – ஆனால் வாக்களிக்க மாட்டார்கள். இதற்கு காரணம் வாக்காளர்கள் அல்ல. இடதுசாரிகள்தான்! இடதுசாரிகளான தங்களை, மக்கள் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மக்களுக்கு புரியும் வண்ணம் இதுவரை கூறியதே இல்லை. எனவே மக்களும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதில்லை. காங்கிரஸை எதிர்த்து களம் கண்ட திமுகவிற்கு ஒரு கனவு இருந்தது. தாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்ற கனவுதான் அது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்ற கற்பனை செய்தார்கள். அதை வாக்குறுதிகளாக வழங்கினார்கள். ஆட்சியைப் பிடித்தார்கள். வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படாமலிருக்கலாம். ஆனால் தங்கள் மீது நம்பிக்கை வைத்த அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே மக்கள் ஆளும் வாய்ப்பைத் தந்திருக்கிறார்கள்.

இந்த அனுபவத்தில், கமலஹாசன் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன கூறப்போகிறார் என்பது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு முக்கியமானது. ஆனால் கமலஹாசன் இதுவரை இந்தக் கோணத்தில் எதையும் கூறியதாக தெரியவில்லை. ஆளும் அரசை விமர்சனம் செய்வது முக்கியமானதுதான். அதேநேரம் அவரது விமர்சனங்கள் அனைத்தும், தமிழ்நாட்டு மக்கள் அனுபவபூர்வமாக உணர்ந்ததுதான். அவர் எதையும் புதிதாக கூறவில்லை. பிரச்சினைகளுக்கான தீர்வாக அவர் எதையும் முன்மொழியவும் இல்லை. இதுவரை கமலஹாசனின் நண்பர்களாக அறியப்பட்டவர்கள் அனைவரும் பெரும்பாலும் இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களுமே. அவர்களும் கமலஹாசனின் மனது கோணாமல் கருத்து சொல்லி தமது நட்பை நீடித்துக் கொள்வதில் நிபுணர்கள். இவர்கள் யாரும் கமலஹாசனுக்கு அரசியல்ரீதியாக ஆலோசனை கூறி வழிநடத்த முடியுமா என்பது கேள்விக்குறியே! மேலும் கமலஹாசனுக்கு இயல்பாகவே சுயமோக தன்மை இருப்பதாக தோன்றுகிறது. இல்லாவிட்டால் அவரை மற்றவர்கள் “உலக நாயகன்” என்று அழைப்பதை மந்தகாச புன்னகையுடன் ரசித்து அனுபவிக்க மாட்டார். இந்த மனநிலையில் அவர் மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்பாரா என்பதும் கேள்விக்குறியே!

எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்தபோது, அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும் அனுபவம் பெற்ற பலர் அவரோடு இருந்தனர். அக்கட்சியின் தலைமையை ஜெயலலிதா ஏற்றபோது அவருக்கும் ஆலோசகர்கள் இருந்தனர். ஆலோசகர்களே தேவைப்படாத நிலை ஜெயலலிதாவுக்கு பின்னர்தான் ஏற்பட்டது. கமலஹாசன் இப்போதே அப்படி இருக்கிறாரோ என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

அடிப்படையில் கமலஹாசன் தமிழ்நாட்டின் சாதாரண குடிமகனின் எந்த அனுபவத்தையும் அனுபவித்தது இல்லை. அவர் போட்டுக் குளிக்கும் சோப்பின் விலைகூட அவருக்குத் தெரியாது என்று அவரே சுயசரிதை எழுதி இருக்கிறார். இந்நிலையில் அவர் அரசியலுக்கு வர முயற்சிப்பது சற்று விந்தைக்குரியதுதான்.

தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களும், உலகின் மற்றப் பகுதிகளைப் போலவே பிரம்மாண்டத்தைக் கண்டு மயங்கும் மனநிலை கொண்டவர்கள்தான். அதன் காரணமாகதான் வெற்றியடைய பெரும் வாய்ப்புள்ள கட்சிக்கு ஆட்டுமந்தையைப்போல வாக்களித்து தாங்களும் வெற்றி அடைந்ததாக பெருமிதம் கொள்பவர்கள். இதுதான் நிதர்சனம். தமிழ்நாட்டு மக்களை கவர ஒரு அடிக்கட்டமைப்பும், பிரமாண்டமும் அவசியமானவை. கமலஹாசனால் பிரமாண்டத்தை அளிக்க முடியலாம். ஆனால் அடிக்கட்டமைப்பு?

இன்றைய நிலையில் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் என்பது விஜயகாந்த் தொட்ட தூரத்தை தொடும் வாய்ப்பே மிகவும் அரிதுதான். அரசியலில் அவர் இன்னொரு சிவாஜி கணேசனாகவோ, கே. பாக்யராஜாகவோ, டி. ராஜேந்தராகவோ ஆவதற்கு மட்டுமே அவருக்கு வாய்ப்பு இருக்கிறது. திரை உலகின் உலகநாயகன் அரசியல் உலகின் பவர்ஸ்டார் ஆகவிரும்புவாரா எனத் தெரியவில்லை.

இது இன்றைய நிலைதான். இதுவும் நிலையானது அல்ல. இந்த நிலையை மாற்றுவதற்கு கமலஹாசனுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இத்தகைய ஒரு முயற்சியாகவே அவர் எண்ணூர் கழிமுகப் பகுதியை பார்வையிடும்போது சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்தை உடன் அழைத்துச் சென்றிருப்பதாக தோன்றுகிறது. அடுத்து விவசாயிகள் சங்கத் தலைவர்களில் ஒருவரான பி.ஆர். பாண்டியன், ஊழல் ஒழிப்புப் போராளிகள் உள்ளிட்ட சிலருடன் இணைந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்துகிறார். இது ஆக்கபூர்வமான அரசியலின் ஒரு பகுதிதான்.

ஆனால், தமிழ்நாட்டின் வேளாண்மை, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட ஏராளமான துறைகள் குறித்த கருத்தை உருவாக்க வேண்டிய அவசியம் கமலஹாசனுக்கு இருக்கிறது. டெல்லியின் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியதைப் போல பிரசினை வரும்போது அது குறித்து யோசிப்போம் என்பதெல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது. தமிழ்நாட்டு மக்கள் ஆரவாரமான அறிவிப்புகளை எதிர்பார்ப்பவர்கள். ஆனால் அது நிறைவேற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க மறந்துவிடுவார்கள். இது கமலஹாசனுக்கு புரிய வேண்டும்.

இதைக் குறித்தெல்லாம் யோசிப்பவர்களை கமலஹாசனின் அருகே பார்க்கும்போதுதான் அவரது அரசியல் எதிர்காலம் குறித்து முழுமையான கருத்தை கூற முடியும்.

அதுவரை, இலுமினாட்டி சதியின் ஒரு பகுதிதான் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் போன்ற நகைச்சுவைகளை படித்து பொழுதைப்போக்க வேண்டியதுதான். கமலஹாசனோடு எண்ணூர் கழிமுகப்பகுதிக்கு சென்ற சூழலியலாளர் நித்தியானந்துக்கு வெளிநாட்டு தொடர்புகள் இருக்கிறதாம். எனவே அவர் இலுமினாட்டியின் ஸ்லீப்பர் செல்லாம். கமலஹாசனை அரசியலுக்கு இழுப்பதுகூட இலுமினாட்டிகள்தானாம். ஃபேஸ்புக் கருத்தாளர்களின் கருத்துகள் சரியாகத்தானே இருக்கும்!

கமலஹாசனின் அரசியல் முயற்சிகள் வெற்றி பெறாவிட்டால், இந்தியன்-2ம் பாகத்தைத் தொடர்ந்து, இலுமினாட்டி அரசியலை முன்னிறுத்தி விஸ்வரூபம்-3ம் பாகம் வெளிவரலாம். கமலஹாசனின் அரசியல் முயற்சிகளின் விளைவாக தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் கொடையாக அந்த திரைப்படம் அமையலாம்.

(கட்டுரையாளர் : வழக்கறிஞர் சுந்தரராஜன், அணு உலைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவர். ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் மூலம் அணு ஆற்றலுக்கு எதிரான கருத்தரங்குகள், போராட்டங்களை முன்னெடுப்பவர். சூழலியல், மரபணு பயிர்கள் எதிர்ப்பு, நிலையான வளர்ச்சி குறித்தும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.)

Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment