Advertisment

பொன்முட்டையிடும் பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படுவது ஏன்? ஜி.எஸ்.டி வந்த பின்னரும் ஏன் பெட்ரோல், டீசல் விலை உயருகிறது என்பதை விவாதிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பெட்ரோல் டீசல் விலை நிலவரம், Petrol-Diesel Price Today in Chennai

பெட்ரோல் டீசல் விலை

ஸ்ரீவித்யா

Advertisment

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதற்கு காரணம் என்ன? இவற்றையும் ஏன், ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வரக்கூடாது என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

ஜிஎஸ்டி கொண்டு வந்தபோது, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலைகள் குறையும். நாடு முழுவதும் ஒரே விலை இருக்கும் என்று கூறப்பட்டது. அவ்வாறு சில பொருட்களின் விலை குறைந்தாலும், அந்தப் பலனை மக்களுக்கு அளிப்பதற்கு தொழில் நிறுவனங்களும், வர்த்தகர்களும் முன்வரவில்லை. எம்.ஆர்.பி., விலை வந்தப் பிறகு இந்தப் பிரச்னை சீரடைந்து விடும் என்று நம்புவோம்.

சமையல் காஸ்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் காஸ், ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் சிலிண்டர் விலை உயர்ந்தது.

அதற்கு காரணம், சமையல் காஸ் சிலிண்டருக்கு உற்பத்தி வரி கிடையாது. தமிழகம் மற்றும் பெரும்பாலான மாநிலங்களில், வாட் வரி கிடையாது. சில மாநிலங்களில் மிகவும் குறைவு. சமையல் காஸுக்கு, 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அதை விலை உயர்ந்தது. இதில் உள்ள லாஜிக்கை குடும்பத் தலைவிகளும், பொருளாதார நிபுணர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பெட்ரோல் ஏன் இல்லை?

சமையல் காஸை விட, பெட்ரோல், டீசலே அன்றாடம் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

இந்தாண்டு மே மாதத்தில் நாட்டின் மொத்த பெட்ரோலியப் பொருட்களின் தேவை, 5.4 சதவீதம் உயர்ந்துள்ளதாக பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம், 1.687 கோடி டன்னாக இருந்த பெட்ரோலிய பொருட்களின் விற்பனை, இந்தாண்டு மே மாதம், 1.779 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.

மொத்த பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாட்டில், 40 சதவீதமாக உள்ள டீசல் விற்பனை, 75.1 லட்சம் டன்னாகவும், பெட்ரோல் விற்பனை 24 லட்சம் டன்னாகவும் இருந்தது. சமையல் காஸ் பயன்பாடு 17.8 லட்சம் டன்னாகும்.

டீசல் என்பது, லாரி, ஆட்டோ போன்ற வாகனங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையோடு இணைந்த டீசலையும், பெட்ரோலையும் ஏன் ஜிஎஸ்டியில் சேர்க்கவில்லை என்று தற்போது பல்வேறு தரப்பினரும் கொதித்து எழுகின்றனர். அரசியல் கட்சிகளைத் தவிர.

பெட்ரோல், டீசல் விலை முன்பு உயர்ந்தபோது, உடனடியாக அதை குறைக்க வேண்டும் என்று பக்கம் பக்கமாக அறிக்கைவிட்ட அரசியல்வாதிகள் தற்போது எதுவுமே நடக்காததுபோல் மவுனமாக இருக்கிறார்கள். அதற்கும் காரணம் உள்ளது.

வரிகளே பாதி

முதலில் பெட்ரோல் டீசல் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்று பார்ப்போம். இந்தாண்டு ஜூன் 16 முதல், பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயிக்கும் முறை நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. அதாவது இவற்றின் விலை தினமும் மாறும்.

2017 ஜூன் 16-ம் தேதியன்று, கச்சா எண்ணெயின் சர்வதேச விலை 47 டாலர். அதாவது ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூ.19.18. சுத்திகரிப்பு செலவு உள்ளிட்ட செலவுகளை சேர்த்தால், ஒரு லிட்டர் பெட்ரோல் அடிப்படை விலை, ரூ.27.51. அதில் மத்திய, மாநில அரசுகளின் வரிகள், ரூ.40.51 சேர்க்கப்பட்டு, கடைசியாக ரூ.68.02க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்பட்டது. அதாவது பெட்ரோல் மீது, மத்திய, மாநில அரசுகள், 55.5 சதவீத வரியையும், டீசல் மீது, 47.3 சதவீத வரியையும் விதிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற 2014 மார்ச் மாதத்தில், டில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.73.16. அப்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல், 108.6 டாலர். இந்தாண்டு செப்., 11ம் தேதியன்று, ஒருபேரல் கச்சா எண்ணெய் விலை, 54.2 டாலர். ஆனால், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 70.30.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்பவும், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு போன்றவற்றை காரணம் காட்டியே இதுவரை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்தது. ரூபாயின் மதிப்பில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால், பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.

2015 மற்றும் 2016ல், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை, மத்திய அரசு பலமுறை மாற்றி அமைத்தது. மாநில அரசுகளும் தங்கள் பங்குக்கு வாட் வரியை உயர்த்திவிட்டன.

கடந்த, 2014, ஏப்ரலில், ரூ.9.48 ஆக இருந்த பெட்ரோலுக்கான சுங்க வரி, தற்போது ரூ. 21.48ஆக உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் டீசல் மீதான சுங்க வரியும் ரூ.3.65ல் இருந்து ரூ.17.33ஆக உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவி்ல கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது, ரூபாய் மதிப்பில் மாற்றமில்லை. ஆனாலும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை, ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலோ, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலோ பொருளாதாரம் படித்தவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்றில்லை.

கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? மத்திய, மாநில அரசுகள் வசூலிக்கும் அதிகப்படியான வரிகள் தான், இவற்றின் விலை உயர்வுக்கு காரணம் என்பது யாரும் சொல்லாமலேயே நமக்கு புரியும்.

சரி, ஜிஎஸ்டி வரியின் கீழ் இவற்றை கொண்டு வந்தால் விலை குறையுமே என்றால், அதற்கு மத்திய, மாநில அரசுகள் தயாராக இல்லை. இந்த விஷயத்தில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன.

ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வந்தால், பெட்ரோல், டீசல் விலை கிட்டத்தட்ட பாதியாக குறைந்துவிடும். இதனால், மக்களுக்கு லாபம். ஆனால் அரசுகளுக்கு. இவற்றின் மீதான வரிதான் மாநிலங்களுக்கு கிடைக்கும் மிகப் பெரிய வருவாய். பொன்முட்டை இடும் வாத்தை இழப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தயாராக இல்லை. அதனால், ஜி.எஸ்.டி.,யின் கீழ் பெட்ரோல், டீசல் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment