Advertisment

அரசியல் பழகுவோம் 5 : பெண்கள் அதிகாரத்தை யாருக்காக பயன்படுத்துகிறார்கள்?

நடிகைகள் என்ற வெளிச்சத்தை வைத்து அதிகாரத்துக்கு வருபவர்கள், அதிகாரத்தை யாருக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை தீவிரமாக அலசுகிறார், சுகிதா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தடுப்பூசி எடுத்துக்கொண்டும் நடிகை நக்மாவுக்கு கொரோனா

சுகிதா

Advertisment

நடிகை ஜெயா பச்சன் 2004 ம் ஆண்டு மாநிலங்களவைக்கு சமாஜ்வாதி கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2006 ம் ஆண்டு உத்திர பிரதேச திரை துறை வாரியத்தின் தலைவராக ஜெயா பச்சன் இருந்து வந்தார். ஆதாயம் தரும் இரு பதவிகளில் இருக்க கூடாது என்ற சர்ச்சை எழுந்தது. அதையடுத்து குடியரசுத்த தலைவராக அன்றிருந்த அப்துல் கலாம் ஜெயாபச்சனை தகுதி நீக்கம் செய்தார். ஜெயாபச்சன் உச்சநீதிமன்றத்திற்கு சென்றார். உச்சநீதிமன்றம் ஜெயாபச்சினின் மனுவை தள்ளுபடி செய்தது.

2012 ம் ஆண்டு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 ம் ஆண்டு ”துரோனா” பட இசை வெளியீட்டு விழாவில் உத்திர பிரதேசத்தில் இருந்து வரும் நான் இந்தியில் பேச மகாராஷ்டிரா மக்கள் மன்னித்து அனுமதிக்க வேண்டும் என்று பேசினார். இதற்கு ராஜ்தாக்கரே, ஜெயா பச்சன் கவனம் ஈர்ப்பதற்காக இந்தியில் பேச அனுமதி கேட்பது போல் கேட்கிறார் என்று கிண்டலடித்தார்.

publive-image ஜெயாபச்சன்

மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவினர் ஜெயா பச்சன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அமிதாப் பச்சனின் ”தி லாஸ்ட் லியர்” படம் ஓடிய தியேட்டர்களில் கலவரம் நடத்தினர். சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் ஜெயாபச்சன் சம்பாதிப்பது மும்பையில், உத்திர பிரதேசம் தான் இன்னும் மனதில் இருக்கிறதா? என்று கேட்டார் . ஆனால் பூனே பிலிம் இன்ஸ்டியூட்டில் தங்க பதக்கம் வாங்கிய ஒரே நடிகை என்ற புகழுக்கு சொந்தகாரரான ஜெயா பச்சன் எதற்கும் பதில் சொல்லவில்லை. மன்னிப்பும் கேட்கவில்லை .

மகநிர்மான் சேனாவின் தொடர் அழுத்தத்தால் அமிதாப் பச்சன் ஜெயா பச்சனுக்கு பதிலாக மன்னிப்பு கேட்டார். அந்தளவிற்கு உறுதியானவர் ஜெயா பச்சன். அதேபோன்று மற்ற மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிராவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு முறை பேசினார். மும்பையில் ராஜ்தாக்கரே ஆட்கள் வெளி மாநில ஆட்டோக்களை பறிமுதல் செய்ததை சுட்டிக் காண்பித்து வெளி மாநில தொழிலாளர்களுக்கு பணி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பேசியதால், தொடர்ந்து ஜெயாபச்சனுக்கும் ராஜதாக்கரே ஆட்களுக்கும் எப்போதும் மோதல் வலுத்துக் கொண்டே இருந்தது. ராஜ்தாக்கரே மாதிரியான ஆளை ஒரு பெண் எம்.பி எதிர்ப்பது என்பதெல்லாம் சாதரண விஷயமில்லை.

2012 ம்ஆண்டு நிர்பயா சம்பவத்தின் போது நாடாளுமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுது நிர்பயாவிற்கு நியாயம் கிடைக்கவும் பெண்களை பாதுகாக்கவும் ஜெயாபச்சன் மத்திய அரசை கேட்டுக் கொண்டார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைக்கு 11 லட்சம் தருகிறேன் என பாஜக இளைஞரணி தலைவர் யோகேஷ் வர்ஷேனே பேசியதற்கு கண்டனம் தெரிவித்த ஜெயாபச்சன் பாஜக அரசு மாடுகளை பாதுகாக்க காட்டும் அக்கறையில் பெண்களை பாதுகாக்க சிறிதும் காண்பிக்கவில்லை என்று அவையில் கோபப்பட்டார். மம்தா பானர்ஜிக்கு பாதுகாப்பு வழங்க கோரியவர் பெரும்பாலும் அவையில் பெண்கள் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக தான் அதிகம் பேசி உள்ளார்.

அமிதாப் பச்சன் பாஜகவுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். அவருக்கு ஜிஎஸ்டிக்கான விளம்பர தூதர் பட்டம் எல்லாம் கொடுத்து பாஜக அழகு பார்த்து வருகிறது. பணமதிப்பிழப்பை கடுமையாக நாடாளுமன்றத்தில் சாடினார் ஜெயாபச்சன். அமிதாப்போ கருப்பு பண ஒழிப்பு என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு மோடியை புகழ்ந்தார். இப்படி அரசியல் ரீதியாக வெளிப்படையாக இருவரும் வெவ்வேறு கருத்துகள் கூறி வருவதும் சரச்சைகளில் சிக்குவதும் வழக்கமான ஒன்று .

நடந்து முடிந்த உத்திரபிரதேச தேர்தலில் ஆக்ரா தொகுதியில் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவுடன் இணைந்து பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது மேடையில் இவரை பேச அழைக்கும் போது சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மனைவி என்று அழைக்க, மைக்கை வாங்கியவர், ’எம்.பி ஜெயாபச்சன் என்றே அழைக்கலாம்’ என்றார். இது வெறும் பெயர் அடையாளமில்லை. இத்தனை ஆண்டு காலம் நடிகை, எம்.பி என்று பொது வாழ்வில் இருந்து வரும் ஜெயாபச்சனுக்கு அவருக்கான அடையாளத்தை விடுத்து கணவரின் அடையாளத்தில் தன்னை அழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படிதான் தொடர்ந்து அரசியலில் தனக்கென்று ஒரு இடத்தை வகிக்க, உருவாக்க, அடையாளப்படுத்த, அங்கீகாரம் பெற என பெண்கள்போராடிக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது.

publive-image ஹேமமாலினி

நக்மா மீரத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார். பிரச்சாரத்தின் போது நக்மாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை நக்மா கன்னத்தில் அறைந்தார். இது சர்ச்சையானது. பொது கூட்டங்களுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு, கூட்ட நெரிசலில் பெண்கள் சந்திக்கும் பாலியல் சீண்டல்கள் சில நேரங்களில் சொல்லாமல் கடந்து போவதுண்டு. இல்லை எனில் நக்மா போன்று பதிலடி கொடுத்தால் என்ன விளைவுகளை பெண்கள் சந்திப்பார்கள் என்பதற்கு நக்மாவே சிறந்த உதாரணம்.

காவல்து றையால் கட்டுப்படுத்த முடியாத கூட்டம் நக்மா செல்லும் இடமெல்லாம் அலைமோதியது. ஆனால் அந்த தேர்தலில் நக்மா படுதோல்வி அடைந்தார். பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக்கு அடுத்து மூன்றாவது இடத்தையே நக்மாவிற்கு வழங்கினார்கள் மீரத் மக்கள். வாங்கிய ஓட்டும் வெறும் 13 ஆயிரத்து 222. இன்னொருபுறம் பெண், நடிகை என்பதற்காக நக்மா பாலியல் சீண்டலுக்கு ஆளானது ஒருபுறம் என்றால் அரசியல் ரீதியாக அவரை கோபப்படுத்தி ஆண்கள் மத்தியில் அவருக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் திட்டமிட்டு நக்மாவிடம் அப்படி அந்த நபர் நடந்துக் கொண்டாரா என்பதும் ஆராய வேண்டிய ஒன்று.

இந்த சம்பவத்திற்கு பிறகு பெண்கள் அரசியலுக்கு வரும் போது எதிர்கொள்ளும் இன்னல்கள் என்ற பார்வையில் நக்மா மீது இறக்கம் கொண்டு அந்த தேர்தலில் வெற்றி பெற மக்கள் வழி வகை செய்திருக்க வேண்டும். ஆனால் மாறாக நக்மா அந்த தேர்தலில் தோற்கடிக்கப்படுகிறார். இதன் மூலம் ஒரு செய்தி சொல்லப்படுகிறது. இதை எல்லாம் பொறுத்துக் கொண்டு அரசியலில் பெண்கள் இருக்க வேண்டும் என்பது தான் அந்த செய்தி. இன்றும் அதிகாரத்தில் ஓரளவிற்கு இருக்கும் பெண்களுக்கே இந்த நிலை என்றால் கட்சியின் பேச்சாளராக இரவு பகல் பாராமல் ஊர் ஊராக செல்லும் பெண் பேச்சாளர்கள், சொந்த ஊரில் உள்ள அடிப்படை பெண் உறுப்பினர்கள் அரசியலில் படும் இன்னல்களை அவர்கள் வெளியில் சொல்வதே இல்லை .

அதே நேரத்தில் பெண்கள் குறிப்பாக நடிகைகள் பொறுப்பான அரசியல் தலைவர்களாக நடந்துக் கொள்கிறார்களா என்ற கேள்வியும் உண்டு. பாஜகவின் தேர்தல் பிரச்சாரங்களில் தலையை காண்பிக்க ஆரம்பித்த ஹேமமாலினி 2003ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார் . தமிழ் நாட்டில் பிறந்த ஹேமமாலினிக்கு தமிழில் இல்லாத புகழை பாலிவுட் தந்ததால் எளிதில் மாநில பொது செயலாளர் பதவியும் கிடைத்தது.

உத்திரபிரதேசத்தில் விதவைகள் வாழும் விருந்தாவன் உள்ள மதுரா தொகுதிக்கு 2014ம் ஆண்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். விருந்தாவனில் தான் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் உள்ளனர். வடமாநிலங்களில் குறிப்பாக பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கணவனை இழந்த பெண்கள் விருந்தாவனில் வந்து கிருஷ்ணரை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்று நம்ப வைக்கப்பட்டு கிருஷ்ண வழிபாடு நடத்தி வருகிறார்கள். பெரும்பாலும் கணவனை இழந்த பெண்கள் தானாக இங்கு வருவது ஒரு வகை என்றால் வீட்டில், வைத்துக் கொள்ளாமல் முதுமை அடைந்த விதவை பெண்களை விருந்தாவனில் கொண்டு வந்து விட்டுச் செல்வதும் உண்டு. விருந்தாவனில் உள்ள பெண்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் உணவு அளித்து வருகிறார்கள்.

இவ்வளவு முக்கியமான பெண் பிரச்சினையை மையமாக கொண்டுள்ள மதுரா தொகுதிக்கு எம்பி ஆன ஹேமமாலினி என்ன செய்திருக்க வேண்டும் ? அவர்கள் வாழ்வை மேம்படுத்த அங்கு தொழில் முனையம் அல்லது அவர்களுக்கு வாழ தகுதியான இடமாக விருந்தாவனை மாற்றி அமைத்துக் கொடுத்திருக்கல்லவா வேண்டும். தற்போதைய விருந்தாவனில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது, மிக முக்கிய பிரச்சினை. இவை எதையும் சரி செய்யவில்லை. ’கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் மேற்குவங்கம், பீகார் மாநிலங்களில் இருந்து கணவனை இழந்த பெண்கள் யாரும் விருந்தாவனுக்கு வர வேண்டாம்’ என்று டிவிட்டரில் ஹேமமாலினி பதிவிட்டார்.

பெண்கள் தங்களுடைய அதிகாரங்களை யாருக்காக பயன்படுத்துகிறார்கள் என்பது மிக முக்கியமாக பார்க்க வேண்டிய ஒன்று. அதே போன்று மதுரா தொகுதியில் ஜவகர் பாக் பகுதியில் சட்டவிரோத குடியிருப்புகளை அகற்ற சென்ற போலிசாருக்கும் குடியிருப்புவாசிகளுக்கும் இடையே கடும் மோதல் நடந்து அதில் போலிசார் 2 பேர் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். மதுரா பற்றி எரியும் போது மும்பையில் உள்ள மேத் தீவில் சூட்டிங்கில் இருந்த ஹேமமாலினி படக்காட்சிகளை டிவிட்டரில் பதிவேற்றம் செய்ய இணையவாசிகள் பொங்கி எழுந்துவிட்டார்கள். பிறகு மன்னிப்பு கேட்டார். டிவிட்டர் பக்கத்தில் படங்களை நீக்கினார். கலவரத்திற்கு அகிலேஷ் யாதவ் அரசுதான் காரணம் என்று கூறினார்.

இப்போது பாஜக தான் உத்திரபிரதேசத்தில் ஆட்சியில் இருக்கிறது. விருந்தாவனுக்கு என்ன செய்தார் ஹேமமாலினி? ஜவகர் பாக் பிரச்சினை தீர்ந்ததா என்றால் இல்லை ? ஜிஎஸ்டியை ஆதரித்து பிரச்சாரம் செய்துக் கொண்டிருக்கும் ஹேமமாலினி, ராதை பிறந்ததாக சொல்லப்படும் ராவல் கிராமத்தில் கிருஷ்ணா தீம் பார்க் கட்டி சுற்றுலா பயணிகளை கவர்வது தான் தலையாய திட்டமாக வைத்திருக்கிறார். வளர்ச்சி என்ற கோஷமும், இந்துத்வத்திற்கு கிருஷ்ணரும்,ராதையும் ஹேமமாலினிக்கு இப்போதைக்கு மதுராவில் கைக்கொடுக்கிறார்கள்.

publive-image ஷப்னா அஸ்மி

ஷபனா ஆஸ்மி 1997 ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . அப்பா கவிஞர், அம்மா மேடை நாடக கலைஞர் என்பதால் இயல்பில் கலையும், பெற்றோர்களின் இடதுசாரி சிந்தனையும் ஷபனா ஆஸ்மிக்கு இயல்பாகவே வந்தது. முத்தலாக் முறையை கடுமையாக எதிர்ப்பவர். பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் உட்பட 52 நாடுகளில் முத்தலாக் முறை ரத்து செய்யப்பட்டுவிட்டது. ஆனால் இந்தியா, சவுதி, குவைத்தில் இன்னும் முத்தலாக் முறை இருப்பது வேதனை அளிக்கிறது என்றுதொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்திய முஸ்லீம்களின் நிலையை மேம்படுத்த ராஜேந்திர சச்சார் கமிட்டி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். எச்.ஐ.வி விழிப்புணர்வு பிரச்சாரம், இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல், வீடற்றவர்களுக்கு அரசுடன் இணைந்து வீடு கட்டித் தந்தது என இவரது பொதுச் சேவை பட்டியல் பெரிது.

ஐ.நா மக்கள் நிதியத்தின் நல்லெண்ண தூதராகவும் ஷபனா ஆஸ்மி உள்ளார். இஸ்லாமியர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதும், வீடு வாங்குவதும் கடும் சவாலாக உள்ளது என குறிப்பிடும் அவர் இஸ்லாமிய தலைவர்கள் இஸ்லாமியர்கள் மீது வைக்கப்பட்டுள்ள தவறான பிம்பங்களை களைவதற்கு முயற்சிகள் எடுக்க முன்வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

முதல் நாள் நாடாளுமன்றத்திற்கு சென்ற போது எதிர்கட்சி எம்பிக்கள் வெளியேறியதை பார்த்தவுடன் இந்த இடத்திற்கு நாம் தகுதியானவர் தானா என்று கேள்வி வந்தது. இப்படி கூச்சல் போடுகிறார்களே என்று யோசித்தேன். ஆனால் பின்பு ஒவ்வொரு சட்டத்தின் ஒவ்வொரு வரியிலும் உள்ள சாதக பாதகங்களை படித்து அதற்காக குரல் எழுப்பும் போது இந்த கூச்சல் அவசியம் என்று பழகிவிட்டது. அதன் வலிமை புரிந்தது என்று ஒரு முறை பேட்டியில் ஷபனா ஆஸ்மி நாடாளுமன்ற அனுபவங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார். இந்து மதத்தின் அடையாளமான விருந்தாவனை மேம்படுத்த முயற்சிக்காத ஹேமமாலினியும், தான் பிறந்த மதத்தில் முத்தலாக் முறையால் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று எதிர்த்து கேள்வி எழுப்பும் ஷபனா ஆஸ்மியும் இந்திய அரசியலின் இரு வேறு கோடுகள்.

publive-image ரம்யா

முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான எஸ்.எம் கிருஷ்ணாவின் பேத்தி என்ற அறிமுகமும், தமிழில் சில படங்கள் நடித்த அடையாளமும் தான் குத்து ரம்யா என்று தமிழ் ரசிகர்கள் மனதில் குடிகொண்டிருந்த திவ்யா ஸ்பந்தனாவை மாநிலங்களவை உறுப்பினராக்கியது. 2011 ல் இளைஞர் காங்கிரசில் இணைந்த திவ்யா பட்டு நூல்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்தி, கூட்டுறவு பட்டு சொசைட்டிகளை மூடிவிட்டு கைத்தறி விழா கொண்டாடுவது தான் பிரதமரின் ஸ்பெஷல் என மோடியின் கைத்தறி விழாவை டிவிட்டரில் கிண்டலடித்தது வைரலாக காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள அணிக்கு தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டது.

இளம் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் சார்க் மாநாட்டிற்கு பாகிஸ்தான் சென்று வந்தவர், இந்தியாவைப் போன்று பாகிஸ்தான் ஒன்றும் நரகமில்லை என்று குறிப்பிட பாஜகவின் அமைச்சர் மனோகர் பாரிக்கர் அப்படி என்றால் நீங்கள் அங்கேயே போய் இருங்கள் என்று ஆவேசப்பட்டார் . பாஜக வழக்கறிஞர் ஒருவர் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்து விட்டதாக திவ்யா மீது வழக்கு தொடர்ந்தார். அதன் பின் டிவிட்டரில் பெரிய அளவில் திவ்யா கருத்துக் கூறுவதில்லை . 2014 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் .

ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா, அதிரடி நடிகை விஜயசாந்தி, நடிகை ஜெயசுதா, நடிகை ஜீவிதா என ஆந்திர அரசியலில் நடிகைகள் பலர் காலூன்றினாலும் இவர்களது இடம், இவர்கள் அரசியலில் ஆற்றிய பங்கு என்பது கேள்விக்குறியாகத் தான் உள்ளது .

நடிகை என்றாலும் சார்ந்திருக்கும் கட்சியின் தலைமைக்கு கட்டுபட்டு நடப்பதும் , அதிகாரமிருந்தும் அதனை பயன்படுத்த முடியாமல் இருப்பதும் ஒரளவிற்கு புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆனால் இத்தாலி மகளாக பிறந்து இந்தியாவின் மருமகளானவர் சோனியா காந்தி. அரை நூற்றாண்டு இந்திய வரலாற்றை எழுதிய மாபெரும் காங்கிரஸ் பேரியக்கத்தில் வானளாவிய அதிகாரத்துடன் தலைவர் பொறுப்பில் இருக்கும் சோனியா செய்தது என்ன? நேரு குடும்பத்து பெண்கள் இந்திய அரசியலில் பங்காற்றியது என்ன வரும் வாரம் பார்க்கலாம்…

Sugitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment