Advertisment

எண்ணூர் அனல் மின் நிலையங்களும் மீனவர்களின் வாழ்வாதாரமும்

மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு அதிகமாக நம்பியிருப்பது எண்ணூர் கழிமுகப் பகுதியை தான். ஆய்வு முடிவுகள் அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ennore_Thermal_Power_Plant

பொறியாளர் சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்:

Advertisment

எண்ணூரில் உள்ள அனல் மின்நிலையங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் கழிமுக பகுதியில் கொட்டப்படுகின்றன. வட சென்னை அனல் மின் நிலையமும் அந்த பணியை செய்கிறது என்கிற குற்றச்சாட்டை சூழல் செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து வைத்து வந்தனர். குறிப்பாக நித்தி, பூஜா, சரவணன் போன்றவர்கள் அந்த பகுதிகளுக்கு சென்று பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட இதை வெளிக்கொண்டுவந்தனர். அதை தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னக கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பெயரில், பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, எண்ணூர் கழிமுக பகுதியில் நடைபெற்றுள்ள சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள பணிக்கப்பட்டது. அந்த குழு மொத்தம் 60 மாதிரிகள் எடுத்தது, 20 மாதிரிகள் மீன்கள், 20 தண்ணீர் மற்றும் 20 கொட்டப்பட்ட சாம்பல் என்று பல மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியது. அதுவும் குறிப்பாக மீன்கள், நண்டுகள் இறால்கள் என மீனவர்களிடமிருந்தே மாதிரிகள் எடுக்கப்பட்டன.

மாதிரிகள் தமிழ்நாடு "சோதனை நெறிமுறைகளை" (standard testing protocols) பின்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. குறிப்பாக எட்டு கன உலோகங்களின் (heavy metals) இருப்பு குறித்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, அவை பாதரசம், கேட்மியம், செலினியம், ஆர்செனிக், குரோமியம், டின் மற்றும் செம்பு.

மேலும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை, இ-கோலி, நுண்கிருமிகள் குறித்தும், தண்ணீரில் 17 வைகையான ரசாயனங்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியை அளிக்கின்றன. எடுக்கப்பட்ட அனைத்து மீன்மாதிரிகளிலும் மிக அதிக அளவில் கன உலோகங்கள் கண்டறியப்பட்டன. அவ்வாறு இருக்கும் மீன்களை நீண்ட நாட்களாக உட்கொண்டால் மரணத்தில் கொண்டுபோய் நிறுத்தும். செம்பு மிக அதிக அளவில் சிப்பியிலும் (68.42mg /லிட்டர்) மீன்களிலும் (66.18mg/லிட்டர்) அளவிலும் கண்டறியப்பட்டுள்ளது. அதிக அளவில் செலேனியமும் அளக்கப்பட்டுள்ளது. அவை மீன் உற்பத்தியை கெடுக்கக்கூடிய நஞ்சாகும். அப்படியே மனிதர்களையும் பாதிக்கும். மேலும் செலினியம் புற்றுநோயையை உண்டாக்கும். மரபணுக்களில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் பல்வேறு நச்சுக்களை இந்த மீன்களை சாப்பிடும் மனிதர்களுக்கு தரும். குரோமியம் உட்பட பல்வேறு கன உலோகங்கள் கண்டறியப்பட்டுள்ளது பல்வேறு கவலைகளை அளிக்கிறது.

மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு அதிகமாக நம்பியிருப்பது எண்ணூர் கழிமுகப் பகுதியை தான். பலநூற்றுக்கணக்கான குடும்பங்கள் இதை நம்பி தான் வாழ்கின்றனர். இந்த ஆய்வு முடிவுகள் அவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் கேள்விக்கு உள்ளாக்கிருக்கிறது. இத்தனைக்கும் எண்ணூர் கழிமுகப்பகுதி இவ்வளவு நஞ்சானதற்கு மீனவர்கள் எந்த தவறையும் செய்யவில்லை. சென்னையில் பல்வேறு மால்களில் மின்சாரம் ஜொலிப்பதற்கு அவர்களின் வாழ்வாதாரம் பலியாக்கப்படுவது கொடுமையிலும் கொடுமை. வளர்ச்சி என்கிற பெயரால் மானுட சமூகம் இன்னும் எத்தனை இன்னல்களை சந்திக்கிப்போகிறதோ?

(கட்டுரையாளர் என்ஜினியர் சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தைச் சேர்ந்த சூழல் செயற்பாட்டாளர்)

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment