Advertisment

காவிரி பிரச்னை அ முதல் ஃ வரை : கனவாகிப் போன காவிரி

காவிரி நதி நீர் பிரச்னையில் முன்பு என்ன நடந்தது. எப்போது பிரச்னை உருவானது? இப்போது என்ன நடக்கிறது என்பதை தீவிரமாக அலசுகிறார், கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kaveri_banks_near_Nimishamba_temple,_Mysore (1)

வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

Advertisment

காவிரி நடுவர் மன்றம் 1990ல் அமைக்கப்பட்டு, 17 ஆண்டுகளுக்குப் பின் 2007ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று இறுதி தீர்ப்பை வழங்கியது. அப்போதிருந்தே இந்தப் பிரச்சினை கண்ணாமூச்சி விளையாட்டாகிவிட்டது. உச்சநீதிமன்றம் வலியுறுத்தியும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று கூறியுள்ளது, வேதனையைத் தருகின்றது. மத்திய அரசின் சார்பில் வாதிட்ட அட்டர்னி ஜெனரலின் உறுதிமொழிக்கு முற்றிலும் முரணாக தமிழக மக்களை மத்திய அரசு வஞ்சித்துவிட்டது.

உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. கங்குலி, அரசியல் சாசன பிரிவு 144ன் படி உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு மத்திய அரசும், கர்நாடக அரசும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும், கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தே கேரளா முல்லைப்பெரியாறுப் பிரச்சினையில் தீர்மானம் நிறைவேற்றியது போல கர்நாடக சட்டமன்றத்திலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும் முடியாது என்ற கருத்தை தெளிவாக கூறியுள்ளார். இவ்வாறான நிலையில் எதையும் மதிக்காமல் மத்திய அரசும், கர்நாடக அரசும் காவிரிப் பிரச்சினையில் நடந்து கொள்வது தான்தோன்றித்தனமாக தெரிகிறது.

காவிரியும், தமிழகமும் பிரிக்க முடியாத வரலாற்றையும், தொன்மையும், பழமையும் கொண்டது. பல்வேறு காலகட்டங்களில் காவிரிப் பிரச்சினையில் சிக்கல்கள் வந்தாலும் தீர்க்கப்பட்டுள்ளன. 1872ல் காவிரிப் பிரச்சினை துவங்குகிறது. 140 வருடங்களாக அமைதிப் பிரச்சினைகளாக இருந்து வந்தன. ஆனால் கடந்த 43 ஆண்டுகளில் கொழுந்துவிட்டு எரிகின்றது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கடினமான சிக்கல் எப்போதும் ஏற்பட்டதில்லை. காவிரி பிரச்சினை தோன்றி 48 ஆண்டுகளாக சிக்கல்கள் தொடர்கின்றன. இதனால் 10 மாவட்ட தமிழக விவசாயிகள் தவிக்கின்றனர். நடுவர் மன்றம் அமைத்தும், இடைக்காலத் தீர்ப்பையும், இறுதித் தீர்ப்பையும் மதித்து கர்நாடகா செயல்படவில்லை. இந்த காலகட்டத்தில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், கபினி, ஹேரங்கி, ஹேமாவதி, சுவர்ணவதி, யாகாட்சி என்ற ஐந்து காவிரி துணையாறுகளில் கர்நாடகா அணையைக் கட்டி பாசன நிலங்களை அதிகப்படுத்தி, கால்வாய்களையும், ஆழப்படுத்தியும், அகலப்படுத்தியும் எந்த நெறிமுறையையும் மதிக்காமல் நடந்து கொண்டது.

காவிரி மொத்தத்தில் பாயும் தூரம் தமிழகத்தில்தான் அதிகம் (ஏறத்தாழ 416 கி.மீ.). கடைமடைப் பகுதியான தமிழகத்திற்குத்தான் உரிமைகள் அதிகம். இந்த உரிமைகளையெல்லாம் கர்நாடகா மறுத்துவிட்டு கையகப்படுத்திக் கொண்டது. நதிநீர்ப் பகிர்வு பன்னாட்டு அளவில் ஹெல்சிங் கோட்பாடு என்று சர்வதேச அளவில் ஹெல்சிங் நகரில் கூடி முடிவெடுத்து இந்த உலகம் ஏற்றுக்கொண்ட நடைமுறைகளையும், கர்நாடகாவும், மத்திய அரசும் மதிப்பதில்லை.

வரலாற்று ரீதியாக தமிழர் நீர் மேலாண்மை நிர்வாகம் உலகத்துக்கு வழிகாட்டியது. காவிரியில் தமிழகத்தில் ஆதிபத்தியம் இருந்ததால்தான் கரிகாலன் கல்லணையைக் கட்டினார். இயற்கையின் போக்கில் உள்ள ஆறுகளை தன் போக்குக்கு மாற்றுவது இயற்கைக்கு முரணானது. காவிரி சிக்கல்கள் வரலாற்று ரீதியாகப் பார்த்தால் சில நேரங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டாலும, உடனுக்குடன் தீர்க்கப்பட்டுள்ளன.

கி.பி. 11ம் நூற்றாண்டில் சோழராட்சி நடந்து கொண்டிருந்த போதும், கர்நாடகத்தில் ஹொய்சள வம்சத்தினர் ஆட்சியில் இருந்தபோது, காவிரியின் குறுக்கே அணைகட்டி நீரை வேறு திசைக்குத் திருப்பிவிட்டனர். அப்போது சோழமன்னன் இரண்டாம் ராஜராஜன் அந்நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, அவ்வணையை உடைத்துக் காவிரியின் தண்ணீரை பழைய பாதையில் ஓடச்செய்து சோழ நாட்டிற்குத் தண்ணீரைக் கொண்டு வந்திருக்கிறான். இச்செய்தியை ஒட்டக் கூத்தர் தக்கயாகப் பரணியிலும், ராஜராஜசோழன் உலாவிலும் கூறப்பட்டுள்ளது. இதை எறிபத்த நாயனார் புராணத்தில் சேக்கிழாரும் கூறியிருக்கிறார்.

கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலும் ராணி மங்கம்மாளும், தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரும் பெரும் படையோடு காவிரியை மீட்க சென்றதெல்லாம் வரலாற்று செய்திகள்.

1807ம் ஆண்டு பேச்சுவார்த்தை இரண்டு வட்டாரங்களில் துவங்கின. மைசூருக்கான ஆங்கிலேய அதிகாரி கர்னல் ஆர்.ஜே. சாங்கி, மைசூர் சமஸ்தானத்துடன் இணைந்து கர்நாடக மலைச்சரிவில் விழும் நீரை முழுமையாக பயன்படுத்த திட்டமிட்டர். இதற்கு அன்றைய சென்னை மாகாண அரசு ஒத்துக்கொண்டது. அதன்பின்பு தமிழகத்துக்கு வரும் நீர்வரத்து குறைந்துவிடும் என்று திரும்பவும் பேச்சுவார்த்தையில் இறங்கி அணையை கட்டவேண்டாம் என்றும் வலியுறுத்தியது. பல சுற்று பேச்சுவார்த்தைக்குப் பின் 1892 பிப்ரவரி 18ம் தேதி ஒரு ஒப்பந்தம் இறுதியானது. அதுதான் காவிரியின் முதல் ஒப்பந்தம். மைசூர் அரசு 41.5 டி.எம்.சி. கொள்ளளவில் கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜசாகர் அணையை திட்டமிட்டபோதுதான் சென்னை மாகாண அரசும் மேட்டூர் அணையை கட்ட திட்டமிட்டது. 1910ல் இந்த தாவா சற்று விஸ்வரூபமெடுத்தது. பல பேச்சுவார்த்தைகளுக்குப் பின் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 1924ம் ஆண்டு திரும்பவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வாறான கடந்த கால வரலாறு துவங்கி இன்றைக்கும் தீர்க்கப்படாத சிக்கலாக உள்ளது.

இவ்வளவு சிக்கல்கள் காலத்திலும் காவிரி பாசனப் பகுதியில் கர்நாடகத்தில் ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர், தமிழ்நாட்டில் மேட்டூர், கீழ்பவானி, அமராவதி மற்றும் கேரளத்தில் பனசுரசாகர் ஆகிய அணைகள் கட்டப்பட்டன. கேரளா துவக்கத்தில் காவிரி சிக்கலில் ஒரு மாநிலமாக இல்லை. 1956க்கு பின் மாநில எல்லைகளை சீரமைத்தப்பின் கேரளாவும் காவிரியில் உரிமை கொண்டாடியது. 1960களில் ஒருதலைபட்சமாக தமிழகத்தை சற்றும் மதிக்காமல் கர்நாடகா தன் போக்கில் காவிரியில் அணைகள் கட்டிகொண்டபோதுதான் வழக்கு சிக்கல்கள் துவங்கின.

1976ம் ஆண்டு காவிரி உண்மை அறியும் குழு ஓர் அறிக்கையை தயாரித்தது. இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக வழக்குகளை அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி திரும்பப் பெற சொன்னதால் திரும்பப் பெறப்பட்டது. அதற்குப் பிறகும் மத்திய அரசு காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டின் நியாயங்களை கவனிக்காமல் பாராமுகமாகவும் இருந்தன. 1983ல் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு 1990ல் கிடைத்து, நடுவர் மன்றமும் அமைக்கப்பட்டது. இப்படிப் பல இழப்புகள் தமிழகத்திற்கு தொடர்கதையாக உள்ளன. உலக அளவில் நைல், அமேசான், சீனாவில் யாங்சே, அமெரிக்காவில் மிசிசிப்பி-மிசூரி, யெனிசே-அங்காரா, ஓப்-இர்டிஷ், ஹுவாங்-ஹ (மஞ்சள் ஆறு), ஆமுர், காங்கோ, லெனா, அமு டாரியா, காங்கோ, தாமோதர், தன்யூப், கொலம்பியா, டெட்ரோயிட், நீப்பெர் (Dnieper), நீஸ்ட்டர் (Dniester), இயூபிரட்டீஸ் , ஜோர்தான் ஆறு, மியூஸ் ஆறு, நைஜர் ஆறு, ரியோ கிராண்டே, பரனா ஆறு, ரைன், ரோன், வோல்ட்டா போன்ற பல நதிகள் நாடு விட்டு நாடு கடந்து பாய்கின்றன.

எந்த சிக்கலும் இல்லாமல் நீர் பங்கீடு முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஏன்? நமது பிரம்மபுத்திரா நதியே இந்தியா, வங்கதேசம், திபெத் ஆகிய நாடுகளுக்கிடையே முறையாக நீரைப் பங்கீடு செய்கின்றது. தீஸ்டா நதி நீரையும் வங்கதேம் பகிர்ந்துகொள்கிறது. அண்டை நாடுகளில் பாயும் சிந்து நதி மற்றும் கங்கை-பிரம்மபுத்திரா-மேகனா படுகை என்பதெல்லாம் அண்டைநாடுகளுடன் தீர்க்கப்பட்டு உரிய நீர்வரத்து கிடைக்கின்றது. ஆனால் தமிழகத்துக்கு மட்டும் நதிநீர்ப் பிரச்சினையில் எதுவும் தீர்ந்தபாடில்லை.

நாடுகளுக்கிடையேயான நதி நீர் பிரச்னையை தீர்த்துவிடலாம். மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்னை தீர்ந்திருக்கிறதா?

நாளை பார்க்கலாம்.

(கட்டுரையாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மூத்த வழக்கறிஞர். நதி நீர் இணைப்புக்காக போராடி வருபவர். கதைச்சொல்லி  இதழின் இணை ஆசிரியர் என பல முகம் கொண்டவர்.)

 

K S Radhakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment