Advertisment

சொன்னால் முடியும்: மு.க.ஸ்டாலின் ; போராட்ட களத்தின் முதல்வர்

மு.க.ஸ்டாலின் திமுகவை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றபோது அந்தக் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து வழுவாமல் இருப்பாரா என்ற சந்தேகத்தைப் பலர் கிளப்பினர்.

author-image
Ravi Kumar
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK-StalinMKStalin

ரவிக்குமார் 

Advertisment

காவிரி பிரச்சனை குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் – காலையில் பத்தரை மணிக்கு ஆரம்பித்து மாலை ஐந்தரை மணி வரை நடந்தது. அதில் திமுக சார்பில் ஆக்கபூர்வமான கருத்துகளை முன்வைத்தது மட்டுமின்றி நாள் முழுவதும் அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்து அரசியல் தலைவர்களும், விவசாய சங்கத் தலைவர்களும் பேசியவற்றையெல்லாம் பொறுமையோடு கவனித்தார். அவரது ஆலோசனையின்பேரில்தான் அந்தக் கூட்டத்துக்கு ஐம்பதுக்கு மேற்பட்ட விவசாய சங்கங்களின் தலைவர்கள் அழைக்கப்பட்டார்கள். ’திமுக சார்பில் அனைத்துக்கட்சிக் கூட்டம் என அழைப்பு விடுக்கப்பட்ட பின் அரசாங்கம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது தங்களுக்குப் பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்ககத்தான்’ என நினைக்காமல் அரசாங்கம் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்று காவிரிப் பிரச்சனையில் தமிழகம் ஒன்றுபட்டு நிற்கிறது எனக் காட்டிய பெருமை திரு மு.க.ஸ்டாலின் அவர்களையே சாரும்.

தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை அநியாயமாகப் பன்மடங்கு உயர்த்தியபோது அதை எதிர்த்து மறியல் போராட்டம் நடத்திக் கைதானது மட்டுமின்றி கட்டணத்தை உயர்த்தாமலேயே போக்குவரத்துக் கழகங்களை நிர்வகிப்பது எப்படி என்ற ஆலோசனைகளை முதலமைச்சரை சந்தித்து வழங்கவும் செய்தார்.

’இடித்துரைப்பது மட்டுமல்ல எதிர்க்கட்சியின் பணி அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவதும்தான்’ என சொல்லப்பட்டாலும் அதை நடைமுறையில் கடைபிடித்த தலைவர்கள் இல்லை. அந்த வகையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்துக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருந்த காலம். நான் பள்ளி மாணவன். திமுக தலைவர் கலைஞர் முரசொலியில் எழுதுகிற ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் இருக்கின்ற பல்வேறு அர்த்தங்களைக் கண்டுபிடித்து விவாதித்து மனம் சிலிர்த்த பொழுதுகள் அவை. சிறையில் சித்திரவதைக்குள்ளாகும் திமுக தொண்டர்களில் ஒருவராக திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் பெயர் அப்போதுதான் என் மனதில் பதிந்தது. அதன் பின்னர் சிட்டிபாபுவின் சிறைக் குறிப்புகளைப் படித்தபோது அவரைப் பற்றிய மதிப்புப் பன்மடங்கு உயர்ந்தது. அரசியல் வாழ்வில் சிறை செல்வது இயல்புதானே எனச் சிலர் நினைக்கலாம். அவர் இருந்தது அவசரகாலக் கொடுஞ் சிறை. அதன் பயங்கரம் என்ன என்பதை இன்றைய தலைமுறை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. அந்தத் தியாகத்தில் புடம்போடப்பட்டவர்தான் ’தளபதி’  முக.ஸ்டாலின் அவர்கள். 

தலைவர் கலைஞரோடு இருந்து அரசியல் பணியாற்றுவது ஒரு பல்கலைக்கழகத்தில் படிப்பதைவிடவும் மேலானது. அவரது மகனாக இருப்பது எத்தனை பெரிய நல்வாய்ப்பு! ஆனால் அதில் அனுகூலம் மட்டும் இல்லை, மிகப்பெரிய சவாலும் இருக்கிறது. தமிழ்நாட்டுத் தலைவர்களில் கலைஞர் போல அரசியல் நுண்ணுணர்வு கொண்டவர்கள் எவருமில்லை. அவரைப் போன்ற பன்முக ஆளுமை என எவரையும் நாம் சுட்டிக்காட்ட முடியாது.

கலைஞரை சந்திக்கப் போகும் போதெல்லாம் வேலைக்கு நேர்காணலுக்குச் செல்லும் படபடப்போடுதான் நான் போவேன். அவர் எங்கிருந்து பேச்சைத் தொடங்குவாரென்றே நாம் யூகிக்க முடியாது. அவரிடம் உரையாட தினசரி அரசியல் நடப்புகள் மட்டும் நமக்குத் தெரிந்திருந்தால் போதாது. அவரது பேச்சு தமிழக அரசியல் வரலாற்றின் ஏதாவது ஒரு புள்ளியிலிருந்து தொடங்கும், அல்லது சங்க இலக்கியத்தில் ஆரம்பிக்கும், அல்லது நாம் சாதாரணமாகக் கேள்விப்பட்டிருக்க முடியாத ஒரு சிற்றிதழில் வந்திருக்கும் செய்தியைப் பற்றியதாக இருக்கும். அவரது பேச்சின் நூல் பிடித்துப் பேசுவது அவ்வளவு எளிதல்ல. அப்படியொரு தலைவரோடு இருந்து அரசியல் செய்வது சாமான்யமானதல்ல. அவரது அறிவாற்றல், அவரது உழைப்பு, தொண்டர்களிடம் காட்டும் அரவணைப்பு, தமிழக மக்களின் அடிப்படையான பிரச்சனைகள் குறித்த அக்கறை - இப்படிப் பல விஷயங்களில் அவருக்கு ஈடுகொடுப்பது எளிதான விஷயமில்லை. அவரது மகனாக இருப்பது ஒருவிதத்தில் கொடுப்பினை என்றால் இன்னொருவிதத்தில் அதுவே மிகப்பெரிய சவால். ஒவ்வொரு அசைவிலும் தலைவர் கலைஞர் அவர்களோடு ஒப்பிடப்பட்டு எடைபோடப்படும் ஆபத்து அதில் இருக்கிறது. இன்று கலைஞர் உடல்நலம் குன்றியுள்ள நிலையில் திமுகவின் செயல் தலைவராக இருக்கும் திரு முக.ஸ்டாலின் அவர்கள் அந்த சவாலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

குறைசொல்ல முடியாத அவரது கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாகத்தான்  துணை முதல்வர்  பொறுப்பு அவரைத் தேடி வந்தது. அவர் துணை முதல்வராக இருந்தது மட்டுமல்ல முதல்வராக இருந்த கலைஞர் அவர்களுக்குத் துணையாக இருந்து பல பொறுப்புகளைப் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, தொழிற்துறையை அவர் நிர்வகித்தவிதம் அதிகாரிகளிடம் அவரைப்பற்றிய மதிப்பை அதிகரிக்கச் செய்தது. நேர்மைக்குப் பேர்போன அதிகாரிகள் அவரது ஆற்றலை மனம் திறந்து பாராட்டக் கேட்டிருக்கிறேன். அதனால்தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்னர் பழிவாங்கும் நோக்கில் எல்லோர் மீதும் வழக்கு போட்ட ஜெயலலிதா அவர்களால் திரு மு.க.ஸ்டாலின் மீது எந்த வழக்கையும் தொடுக்க முடியவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்தின் இன்னல் களைய நிரந்தரத் திட்டம் வகுக்க வேண்டும் என நான் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தபோது சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தேன். முதல்வராயிருந்த கலைஞர் அவர்கள் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அதற்கென அமைச்சர்கள் குழு ஒன்றை அமைத்தார். அவரது தலைமையில் அக்குழு கூடி விவாதித்துப் பல்வேறு திட்டங்களை உருவாக்கியது. காட்டுமன்னார் கோயில் தொகுதிக்கு அதனால் பல நன்மைகள் விளைந்தன. கொள்ளிடம் கரை உயர்த்தப்படவும், வீராணம் ஏரி  தூர்வாரப் படவும் வாய்ப்பு கிடைத்தது.

குடிசை வீடுகளை மாற்றி கான்கிரீட் வீடுகளாகக் கட்டித் தரவேண்டும் என்ற எனது கோரிக்கை அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் செயல்வடிவம் பெற்றது. அந்த மகத்தான திட்டத்தின் முதல் வீட்டுக்கு நான் எம்.எல்.ஏ வாக இருந்த காட்டுமன்னார்கோயில் தொகுதியில் வல்லம்படுகை என்னும் சிற்றூரில் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் வந்து அடிக்கல் நாட்டினார். அந்த வீட்டை கலைஞர் அவர்களே நேரில் வந்து திறந்து வைத்தார். பெரிய பெரிய திட்டங்களைக்கூட முதலமைச்சர்கள் காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைக்கும் நடைமுறை வந்துவிட்ட காலத்திலும் நேரில் வந்து அந்த வீட்டுக்கு அடிக்கல் நாட்டியதும், திறந்து வைத்ததும் எளிய மக்களின் மேம்பாட்டின் மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறைக்கு அடையாளம்.

2009 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது திரு மு.க.ஸ்டாலின் அவர்களது வாகனத்தில் நானும் வந்துகொண்டிருந்தேன். பெரம்பலூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சிதம்பரம் தொகுதிக்குப் போய்க்கொண்டிருந்தோம்.அப்போது ஓரிடத்தில் தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தார்கள் அவரிடம் கைகொடுக்க முண்டியடிக்கும் கூட்டம். அதில் ஒருவர் அவரது கையில் ஒரு துண்டுச் சீட்டைத் திணித்துவிட்டுப் போயிருக்கிறார். அந்த இடத்திலிருந்து வாகனம் புறப்பட்டுவிட்டது. அவர் தனது கையிலிருந்த துண்டுச் சீட்டைப் பிரித்துப் பார்த்தார். அதில் ஒரு பெயரும், மொபைல் போன் எண்ணும் எழுதப்பட்டிருந்தது. அந்த எண்ணுக்கு உடனே போன் செய்தார். அது தி.மு.க தொண்டர் ஒருவரின் எண். அவர் போன் செய்ததும் மறு முனையில் அந்தத் தொண்டர் ஆனந்தத்தில் அழுவதை நாங்கள் கேட்க முடிந்தது. அவரிடம் நலம் விசாரித்து ஊக்கப்படுத்திப் பேசினார். அடிப்படைத் தொண்டரிடமும் அன்போடு இருக்கும் அவரது அணுகுமுறை தி.மு.கவுக்கு மிகப்பெரிய பலம். 

திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுகவை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றபோது அந்தக் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து அவர் வழுவாமல் இருப்பாரா என்ற சந்தேகத்தைப் பலர் கிளப்பினர். அதிலும் குறிப்பாக வகுப்புவாதமே இன்று இந்தியாவை அச்சுறுத்தும் மிகப்பெரிய ஆபத்து என்ற நிலையில் அதை உறுதியோடு அவர் எதிர்ப்பாரா என்று கேள்வி எழுப்பினர். அந்த ஐயங்களை நீக்கும் விதமாக தி இந்து தமிழ் நாளேட்டுக்கு அவர் அளித்த பேட்டி அமைந்தது ( 28.01.2018 ) “நான் மதவாத அரசியலைத் தொடர்ந்து எதிர்த்துக்கிட்டிருக்கேன்… எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது” என ஆணித்தரமாக அவர் அறிவித்தது அவதூறு பரப்பியவர்களின் வாயை அடைத்தது.

திமுக மீது விமர்சனங்களை வைப்பவர்கள் அதன் படோடபமான அரசியலையே முதன்மையாக சுட்டிக்காட்டுவார்கள். திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல் தலைவராக வந்ததற்குப் பிறகு அது பெருமளவு குறைந்துள்ளது.

‘மேடையில் சால்வை அணிவிப்பதற்குப் பதிலாக புத்தகங்களைக் கொடுங்கள்’ என அவர் கூறியதால் இப்போது திமுக மேடைகள் 1960 களில் இருந்ததைப்போல காட்சியளிக்கின்றன. தனக்கு வழங்கப்படும் புத்தகங்களைப் பொது நூலகங்களுக்கு வழங்கி அதையும் பொதுமக்களுக்குப் பயன்தரும் விதமாக அவர் மாற்றிக்கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் அவரைப்போல எவ்வித பாசாங்கும் அற்ற ஒரு தலைவரைப் பார்ப்பது கடினம். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதே அரசியல் சாணக்கியம் என ஆகிப்போய்விட்ட சூழலில் மனதில் பட்டதை முகத்துக்கு நேராகக் கூறக்கூடிய பண்பு கொண்டவர் அவர். வறட்டு கௌரவம் பார்க்காமல் எவர் ஒருவர் நல்ல ஆலோசனையைத் தந்தாலும் அதை ஏற்றுக்கொள்பவர்.

அவசரநிலைக் காலத்தில் கலைஞர் அவர்களின் அரசியல் போராட்டத்தில் களம் கண்ட வீரனாக இருந்து விழுப்புண் தாங்கியவர் அவர். இன்று தமிழ் நாட்டின் உரிமைகளெல்லாம் பறிக்கப்படும் நிலையில் ’தமிழர் உரிமை காக்கும் பெரும் போரில்’ தளபதியாக இருக்க வேண்டும் என காலம் அவருக்குக் கட்டளையிட்டிருக்கிறது. அதை ஏற்று அந்தப் போராட்ட களத்தில் அவர் முதல்வராக நிற்கிறார். தமிழ்நாட்டின் முதல்வராக அவர் ஆவதற்கு வெகு காலம் இல்லை என கருத்துக் கணிப்புகள் கூறிக்கொண்டிருக்கின்றன . நாளை ( 01.03.2018) பிறந்த நாள் காணும் அவருக்கு என் வாழ்த்துகள்.

(கட்டுரையாளர் முனைவர் ரவிக்குமார் : கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய / அரசியல் விமர்சகர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர். writerravikumar@gmail.com)

Ravikumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment