Advertisment

பாதை தெரியாமல் பயணிக்கிறதா பா.ஜ.க?

அண்மையில் அ.தி.மு.க. விற்கு இதமாக பா.ஜ.க. பேசிய ஒரே கருத்து, 'ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறப்பதில் தவறில்லை' என்பதுதான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dr. - ponr - modi

அரவிந்தன்

Advertisment

தமிழக அரசியல் குறித்த பா.ஜ.க. மேலிடத்தின் பார்வையைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபம் இல்லை. ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி தமிழக அரசு நடத்தும் ஒரு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரச் சம்மதித்தது, அ. தி. மு. க. வினருக்கே நம்பமுடியாத ஆச்சரியமாகிவிட்டது. காரணம், அ. தி. மு. க. வினரின் 'இதய தெய்வமான' ஜெயலலிதாவின் உருவ படத்தை தமிழக சட்டமன்றத்தில் திறக்க முடிவெடுத்த போது மோடியின் கரங்களால் அந்த படம் திறக்க பட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் ஒட்டுமொத்த விருப்பமாக இருந்தது. இதை வெளிப்படையாக தெரிவிக்கவும் செய்தனர். இதைப்பற்றி பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்திற்கு பதில் கூட கிடைக்கவில்லை. காத்திருந்து, காத்திருந்து கண்களும் பூத்துபோய், கடைசியில் சட்டசபை சபாநாயகரை கொண்டே திறந்து விட்டார்கள்.

'ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவர் படத்தை சட்டசபையில் திறக்கலாமா?' என்று பலத்த சர்ச்சை உருவெடுப்பதற்கு முன்பாகவே, இத்தகைய ஒரு ஆட்சேபம் எழுப்பப்படலாம் என்பதை எதிர்பார்த்தே பிரதமர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்தார் என்று பா.ஜ.க. வட்டாரத்தில் அதற்குக் காரணம் கூறப்பட்டது. தவிர, தமிழக அரசின் செயல்பாடுகள் ஒரே ஊழல் மயமாக இருப்பதாக மத்திய அரசுக்கு அனுப்பப்படும் அறிக்கைகள் தெரிவிப்பதால், அ.தி.மு.க. விஷயங்களை ஜாக்கிரதையுடன் கையாள பா.ஜ.க. மேலிடம் விரும்புவதாகத் தெரிகிறது.

இந்தப் பின்னணியில்தான் இப்போது பிரதமரின் வருகை ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது. மிகச் சமீபத்தில்தான் ஜெயலலிதா படத் திறப்பு விழாவில் பங்கேற்பதை தவிர்த்தார் என்பது மட்டும் அதற்க்கு காரணம் அல்ல. மத்திய பா.ஜ.க. அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட கட்சியின் மாநில நிர்வாகிகளும் அ.தி.மு.க. ஆட்சியை விமர்சித்து கருத்துக்களை கூறாத நாட்களே இல்லை.

இரண்டு தினங்களுக்கு முன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை கவலை அளிப்பதாக பொன். ராதாகிருஷ்ணன் கூறியதுடன் நிறுத்தாமல், 'தீவிரவாத அமைப்புகளின் புகலிடமாக தமிழ்நாடு மாறிவருகிறது' என்று அதிரவைக்கும் ஒரு குற்றச்சாட்டையும் சுமத்தினார். 'மத்திய அமைச்சராக இருப்பவர் விவரங்கள் தெரிந்த நிலையில்தான் இத்தகைய ஒரு கடுமையான குற்றச்சாட்டை கூறுவார் மாநில அரசு இதை அலட்சியப்படுத்தக்கூடாது' என்று மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திருநாவுக்கரசர் கூட, பொன்னாரின் கருத்தை ஆதரித்து பேட்டியளித்தார் இதற்கு எதிர் வினையாக தமிழக அரசின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், 'பொன். ராதாகிருஷ்ணன் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்' என்று சீற, பொன்னாரோ சளைக்காமல், 'நான் கூறியது மாநில நலனில் அக்கறைக்கொண்ட உண்மையான கருத்து' என்று தனது குற்றசாட்டை மீண்டும் உறுதி செய்தார்.

இன்னொருபக்கம் மாநில பா.ஜ.க. தலைவர் மற்றும் அதன் செய்தி தொடர்பாளர்கள் பேட்டிகளிலும், டெலிவிஷன் சேனல் விவாதங்களிலும், 'அ.தி.மு.க. அரசு ஒரு ஊழல் அரசு' என்று வெளுத்துக்கட்டி வருகின்றனர். அண்மையில் அ.தி.மு.க. விற்கு இதமாக பா.ஜ.க. பேசிய ஒரே கருத்து, 'ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறப்பதில் தவறில்லை' என்பதுதான். இப்படி கூறியபோதிலும், 'பிரதமர் அந்நிகழ்ச்சிக்கு ஏன் வராமல் தவிர்த்தார்?' என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு திருப்தி அளிக்கக்கூடிய ஒரு பதிலை இதுவரை பா.ஜ.க. அளிக்கவில்லை.

இப்போது பிப்ரவரி 24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் அன்று, பெண்களுக்கு மானியவிலையில் ஸ்கூட்டி வாகனம் வழங்கும் ஒரு திட்டத்தை தமிழக அரசு தொடங்குகிறது. இதற்காக பிரதமருக்கு ஒரு சம்பிரதாய அழைப்பைத்தான் விடுத்தது. இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் பிரதமர் வரவா போகிறார் என்று தான் அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள் நினைத்தார்கள். அதனால்தான் பிரதமரின் வருகை, அவர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.

சொல்லப்போனால் பிரதமர் வருகை பற்றி டெலிவிஷன் சேனல்கள் வழியாகத்தான் மாநில பா.ஜ.க. முக்கியஸ்தர்களுக்கே தெரியவந்தது. அவர்களும் முதலில் இதை நம்ப முடியாமல் ஆச்சரியப்பட்டார்கள். எனினும் பா.ஜ.க. மேலிடத் தொடர்புடைய ஒருவர், இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை என்கிறார்.

'பா.ஜ.க. வுக்கு நேர் நிலையில் நிதிஷ் குமார் இருந்த சமயத்திலேயே கூட பிஹார் அரசு விழாவில் பிரதமர் பங்கேற்று இருக்கிறார். மேற்கு வங்க மம்தா அரசு மீது அம்மாநில பா.ஜ.க. வுக்கு கடும் விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் மேற்கு வங்க அரசு நிகழ்ச்சியில் பிரதமர், மத்திய அரசின் மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். அ.தி.மு.க. வோ, பா.ஜ.க. வுடன் தோழமையை விருப்பும் ஒரு கட்சி. தவிர, ஜெயலலிதா படத் திறப்புக்கு வராத குறையைப் போக்கிக்கொள்ள பிரதமர் இந்நிகழ்ச்சிக்கு வரச் சம்மதித்திருக்கலாம்' - என்று சொல்கிறார் அந்த முக்கியஸ்தர்.

அரசியல் விமர்சகர்கள் இதை வேறு ஒரு கோணத்திலும் பார்க்கிறார்கள். தமிழகத்தில் எதிர்வரும் தேர்தல்களில் பா.ஜ.க. வின் முதல் சாய்ஸ் ரஜினி தான். எனினும் ரஜினியையே முழுவதும் நம்பி இருக்காமல், கட்சி கட்டமைப்பு பலமும், வாக்கு வங்கியும் கொண்ட அ.தி.மு.க. வலிய வந்து தரும் ஆதரவை ஏன் இழப்பானேன் என்பது பா.ஜ.க. மேலிடம் போடும் கணக்காக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். பாதை தெரியாமல் பயணிக்கிறதா பா.ஜ.க. என்பதற்கு காலம்தான் விடை கூறமுடியும்.

Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment