Advertisment

ப.சிதம்பரம் பார்வை : குஜராத்தின் மண்ணின் மைந்தர்கள்

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு இந்தியா கொண்டு வந்து, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சத்தை போடுவேன் என்றவர், மோடி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
modi-amit-shah-gujarat-1

குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மோடி, அமீத் ஷா.

ப.சிதம்பரம்

Advertisment

குஜராத்தின் பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் பூஜ் பகுதியிலிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், தான் குஜராத்தின் மண்ணின் மகன் என்றும், குஜராத்துக்கு வருகை தந்து மண்ணின் மைந்தனுக்கு எதிராக புகார் கூறுபவர்களை இந்த மாநிலம் மன்னிக்காது என்றார். 1995ம் ஆண்டு முதல் பிஜேபி குஜராத் ஆண்டு வருகிறது. அக்டோபர் 2001ல் மோடி குஜராத்தின் முதலமைச்சராக ஆனார். 2014ம் ஆண்டு அவர் பிரதமரான பிறகு, அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவர் பிரதமரானார்கள். முதலாமவர் ஆனந்திபேன் பட்டேல். அவருடைய தேர்வு மோசமானது என்பதை காலம் உணர்த்தியது. இரண்டாவது, விஜய் ரூபானி. இவரின் முதல்வர் பணியும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால்தான் மோடி, தன்னையே இந்த தேர்தலில் ஒரு முக்கிய விவகாரமாக உருவாக்கி அவர் பெயரால் வாக்கு சேகரித்து வருகிறார். இது போல எந்தவொரு பிரதமரும் இது வரை செய்ததில்லை.

கடந்த 57 ஆண்டுகளில், இதர மாநிலங்களைப் போலவே, குஜராத்தும் முன்னேறியிருக்கிறது. 1991 பொருளாதார தாராளமயமாக்கலுக்கு பிறகு, பலனடைந்த மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. செப்டம்பர் 2013ல், டாக்டர் ரகுராம் ராஜன் தலைமையிலான ஒரு குழு, மத்திய நிதிகளை ஒதுக்கீடு செய்வதன் பொருட்டு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில், வளர்ச்சி குறைந்த மாநிலங்கள் பட்டியலிடப்பட்டன. மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலம் ஒதிஷா. 0.79 சதவிகித வளர்ச்சியை மட்டுமே அது பெற்றது. அதிகம் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் கோவாவும் (0.05), கேரளாவும் (0.50) முன்னிலை வகித்தன. குஜராத் பட்டியலின் மத்தியில் 0.50 புள்ளிகளோடு இடம் பெற்றது. குஜராத்தின் வளர்ச்சி கர்நாடக மாநிலத்தோடு ஒப்பிடக் கூடியது. சமூக முன்னேற்றம் மற்றும் போட்டிக்கான அமைப்பு சமூக வளர்ச்சி குறித்து நடத்திய ஒரு ஆய்வில், குஜராத் 15வது இடம் பிடித்தது. பட்டியலில் அதற்கு மேலே 14 மாநிலங்கள், கீழே 14 மாநிலங்கள். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்த அளவீட்டில் குஜராத் முதல் ஐந்து இடங்களுக்குள் இருந்தது. நலமான வாழ்வுக்கான அளவீட்டில், கடைசி ஐந்து இடங்களில் இருந்தது.

மக்களின் குறைகள் அப்படியே உள்ளன

ஒவ்வொரு மாநில மக்களைப் போலவும் குஜராத் மக்களுக்கும் அதிருப்தி இருக்கிறது. குறிப்பாக விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளார்கள். மோசமான நிர்வாகத்துக்கு சர்தார் சரோவர் அணை ஒரு சிறந்த உதாரணம். அந்த அணையின் கட்டுமானத்தால் பயன் கிடைக்கும் என்று சொல்லப்பட்ட 18.45 ஹெக்டேர் விவசாய நிலங்களில், கால் பகுதிக்கும் குறைவாகவே நீர் பாசனம் கிடைத்தது. 30 ஆயிரத்துக்கும் அதிகமான கால்வாய்கள் கட்டப்படாமலேயே உள்ளன. சர்வதேச நீர் மேலாண்மை நிலையத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கும் துஷார் மேத்தா என்பவர் “சர்தார் சரோவர் அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கி 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. இது வரை 48 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. 45 ஆயிரம் குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன. 245 கிராமங்கள் முழுமையாக மூழ்கின. 250 ஆயிரம் ஹெக்டேர் நிலம் கையகப்படத்தப்பட்டது. ஆனால் இத்தனைக்குப் பிறகும், சர்தார் சரோவர் அணை இன்னும் கனவாகவே உள்ளது“ என்று எழுதுகிறார்.

பிற துறையை சேர்ந்த மக்களுக்கும் அதிருப்தி இருக்கிறது. பட்டிதார்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறார்கள். தலித்துகளும், பழங்குடியின மக்களும், அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் மீது ஒடுக்குமுறையும் வன்முறையும் ஏவி விடப்படுவதாக சொல்கிறார்கள். சிறுபான்மையின மக்கள், தங்கள் மீது பெரும்பான்மையினரின் விருப்பங்கள் திணிக்கப்படுவதாக உணர்கிறார்கள்.

குஜராத்தில், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதராகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன. மோசமான முறையில் செயல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியை பொறுத்துக் கொள்ளும் மக்களும் உள்ளார்கள். இதன் மோசமான அமலாக்கத்தால் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்த சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், ஜவுளித் தொழிலில் ஈடுபடுவோர், இதை வெறுக்கவும் செய்கிறார்கள். புதிதாக குஜராத்தில் அரசு ஊழியர்களாக நியமிக்கப்பட்டவர்கள், ஆசிரியர்கள், ஒப்பந்த அடிப்படையில், அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 14 உத்தரவாதப் படுத்தியுள்ள சம உரிமைக்கு எதிராக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். குஜராத்தில் மட்டுமே இது போன்ற குறைகள் உள்ளன என்று இல்லை. இந்த அநீதிகளுக்கு எதிராக இயக்கங்களும், சங்கங்களும், தலைவர்களும் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள். அதுதான் ஜனநாயகத்தின் சிறப்பு. ஹர்திக் பட்டேல், ஜிக்னேஷ் மேவானி மற்றும், அல்பேஷ் தாக்கூர் ஆகியோர் புதிய தலைவர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். அரசுக்கு எதிராக குரல் கொடுத்து, மக்களின் ஆதரவை அவர்கள் கோருகிறார்கள். அவர்கள் அத்தனை பேரும், குஜராத்தின் மண்ணின் மைந்தன் மீது புகார் கணைகளை தொடுக்க குஜராத்துக்கு வரவில்லை. அவர்களும் குஜராத்தின் மண்ணின் மைந்தர்களே.

உண்மையான பிரச்சினைகள் புறந்தள்ளப்பட்டன

நரேந்திர மோடி அவர்கள்தான் இந்தியாவின் பிரதமர். நல்ல காலத்தை கொண்டு வருகிறேன் என்று உறுதி கூறினார். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு இந்தியா கொண்டு வந்து, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சத்தை போடுவேன் என்று இவர்தான் வாக்குறுதி அளித்தார். வருடத்துக்கு 2 கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என்றார். மோடி அவர்கள் குஜராத்தின் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும். சர்தார் சரோவர் அணை, ஊனா சம்பவம், நகர்ப் புறங்களில் சிறுபான்மையினர் ஒதுக்கி வைக்கப்படுதல், குஜராத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிதி நிலை, நானோ கார் திட்டத்தின் தற்போதைய நிலைமை, ஊட்டச் சத்து குறைவான குழந்தைகளின் நிலை, சட்டவிரோதமாக கரளமாக புழங்கும் மதுபானம் குறித்தெல்லாம் பேச வேண்டாமா? குஜராத் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க நிலவி வரும் பிரச்சினைகள் குறித்தும் மோடி பேச வேண்டும். விவசாயிகளின் துயர நிலை, தலித்துகள் ஒடுக்கப்படும் கொடுமை, சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சம், காடுகளின் மீதான உரிமைகள் பறிக்கப்பட்ட பழங்குடியின மக்கள், வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் நசிவு, இட ஒதுக்கீடு, பெரும்பான்மையின் ஆதிக்கம், பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் செய்யப்படும் அராஜகம், ரஃபேல் விமான பேரம், பொருளாதார வளர்ச்சி விகிதம் இது குறித்தெல்லாம் மோடி அவர்கள் பேச வேண்டும்.

குஜராத்திகளின் பெருமையை யாரும் காயப்படுத்தவில்லை. குஜராத்தையோ, குஜராத்திகளையோ யாரும் வெறுக்கவில்லை. மோடி முதலமைச்சராவதற்கு முன்னதாகவே, மத்திய அரசுகளும், (காங்கிரஸ் அரசு உட்பட), இந்திய மக்களும், பல குஜராத்திகளின் சாதனைகளை பாராட்டியிருக்கிறார்கள். மகாத்மா காந்தி அதன் தொடக்கம். காந்தி அவர்கள், இந்தியர் மட்டுமல்லாமல், அவரும் குஜராத்தின் மண்ணின் மைந்தன்தான். அவர் தேசத் தந்தை என்று புகழப்பட்டதோடு சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுக்க அவர் தேர்ந்தெடுத்த கருவி, காங்கிரஸ் கட்சி. ஜவஹர்லால் நேருவும், சர்தார் பட்டேலும் இவர்கள் இறக்கும் வரை நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். மொரார்ஜி தேசாய், குல்சாரிலால் நந்தா, விக்ரம் சாராபாய், ஜாவேர்சந்த் மேக்னானி, த்ரிபுவன்தாஸ் பட்டேல், ஐஜி.பட்டேல் போன்றவர்களோடு, குஜராத்தி பேசும் பார்ஸிக்களும், குஜராத்தை பெருமை படுத்தியிருக்கிறார்கள். இந்தியர்களால் கொண்டாடப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு சாதாரண மாநிலத்தின் தேர்தலில் கூட, பிரதமர் மோடி அவர்கள் பிரதமரைப் போலத்தான் பேச வேண்டும்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 03.12.17 அன்று எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழில் ஆ.சங்கர்

P Chidambaram A Sankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment