ப.சிதம்பரம் பார்வை : கொலையாளிகளும், கொல்லப்பட்டவர்களும்

மூடநம்பிக்கைக்கு எதிராகவும், உருவ வழிபாட்டுக்கு எதிராகவும், அறிவியல் அறிவை வளர்ப்பதற்கு எதிராகவும் யார் இருக்கக் கூடும் என்று நான் வியக்கிறேன்.

ப.சிதம்பரம்

ஜோன் ஆப் ஆர்க் கட்டி வைத்து எரிக்கப்பட்டார். சாக்ரட்டீஸ் கோப்பையிலிருந்து விஷமருந்த வைக்கப்பட்டார். சர் தாமஸ் மூர், தலை சீவப்பட்டது. தங்களின் கொள்கையில் உறுதியாக இருந்ததால் இவர்கள் இவ்வாறு கொல்லப்பட்டனர். சில ஆண்டுகளுக்குள் இந்தியாவில் நிகழ்ந்த மூன்று கொலைகள், இந்திய மக்களின் மனசாட்சியை உலுக்கியது. ஊடகங்கள், இக்கொலையில் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் யார் யார் என்பதில் கவனம் செலுத்துகின்றன. கொலைகள் நடந்த மாநிலங்களின் காவல்துறையினர், கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில வழக்குகளில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் எந்த வழக்கும் முடிவடையும் தருவாயில் இல்லை. காவல்துறையும், ஊடகங்களும், கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுவது சரியே. ஆனால் எனக்கு இதில் மாறுபட்ட ஒரு பார்வை உள்ளது.
இதில் கொல்லப்பட்டது யார் என்ற கேள்வியை மக்கள் எழுப்ப வேண்டியது முக்கியம் என்று நான் கருதுகிறேன். இறந்து போன ஐவரின் பெயர் என்ன, அவர்கள் என்ன வேலை செய்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்தாலும், இவை அனைத்தையும் ஒருங்கிணைத்தால்தான் இந்த கொலைகள் ஏன் நடந்தன என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

நரேந்திர தாபோல்கர் (1945-2013)

நரேந்திர தாபோல்கர் ஒரு மருத்துவர். பங்களாதேஷில் விளையாடிய இந்திய கபடி அணியில் அவர் ஒரு உறுப்பினர் என்பதை நம்மில் பலர் அறிய மாட்டோம். அவருக்கு எதிரானவர்களுக்கு எரிச்சலூட்டிய விஷயம் என்பது என்னவென்றால் அவர் மராட்டிய மாநிலத்தின் மிக முக்கியமான பகுத்தறிவாளர் மற்றும், மூடநம்பிக்கை எதிர்ப்புப் போராளி. அவர் 12க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். 16 வருடங்களாக ஒரு வார இதழை நடத்தினார். மஹாராஷ்டிர அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, அதில் 10 ஆயிரத்துக்கும் மேலான ஆசிரியர்களை, மூடநம்பிக்கைக்கு எதிராக அறிவியல் ஆர்வத்தையும் உணர்வையும் மாணவர்களிடையே எப்படி வளர்ப்பது என்று பயிற்சி அளித்தவர். பல வருடங்களுக்கு முன்பாக அவர் மூடநம்பிக்கை மற்றும் பில்லி சூனிய எதிர்ப்புச் சட்டம் என்ற வரைவுச் சட்டத்தை உருவாக்கியவர். இதில் வினோதம் என்னவென்றால், தாபோல்கர் கொல்லப்பட்ட 20 ஆகஸ்ட் 2013க்கு நான்கு நாட்களுக்கு பிறகு அவர் உருவாக்கிய வரைவு சட்டத்தின் அடிப்படையில் ஒரு புதிய சட்டம் உருவானது என்பதே.

கோவிந்த் பன்சாரே (1933-2015)

கோவிந்த் பன்சாரே அவர் வாழ்க்கை முழுக்க கம்யூனிஸ்டாக வாழ்ந்தவர். ஓரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். செய்தித்தாள் போடும் பணி, முனிசிபல் அலுவலகத்தில் ப்யூனாகவும் இருந்து படித்து முன்னேறி, வழக்கறிஞரானார். தொழிலாளர்களின் வழக்குகளை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றார். சிவாஜி யார் என்ற புகழ் பெற்ற புத்தகத்தை மராத்தி மொழியில் எழுதியவர். சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தார். ஷராமிக் நகரி சகாகாரி பத்சான்ஸ்தா என்ற கூட்டுறவு வங்கியை உருவாக்கியவர். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்காகவே அவர் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டார்.

எம்.எம்.கல்புர்கி ( 1938-2015)

எம்எம்.கல்புர்கி ஒரு புகழ்பெற்ற பேராசிரியர். ஹம்பியில் அமைந்துள்ள ஒரு கன்னட பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர். சிறந்த எழுத்தாளர். 2006ம் ஆண்டு, சாகித்ய அகாடமி விருது பெற்றவர். இந்து மதத்தில் உள்ள மூட நம்பிக்கை மற்றும் உருவ வழிபாடு குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தவர். இதனால் வலதுசாரி இயக்கங்களின் கடும் கோபத்துக்கு அவர் ஆளானார். 18 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு புத்தகத்துக்காக இவர் மீதும் யு.ஆர்.அனந்தமூர்த்தி மீதும் மத உணர்வுகளை புண்படுத்திய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கவுரி லங்கேஷ் (1962-2017)

கவுரி லங்கேஷ் தன்னை ஒரு இடதுசாரி என்று அறிவித்தவர். நக்சலைட் இயக்கங்கள் சார்பாக பேசக் கூடியவர். தீவிரமான செயற்பாட்டாளர். நக்சல் அமைப்புகளில் இருந்த பலரை, அதிலிருந்து விலகி, பொதுத் தளத்தில் செயல்பட வைத்தவர். கவுரி லங்கேஷ் ஒரு பத்திரிக்கையை தொடங்கி நடத்தி வந்தவர். அந்த பத்திரிக்கை வலதுசாரி அரசியல் மற்றும் தீவிர இந்துத்துவாவை எதிர்த்தும், ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு ஆதரவாகவும், அப்பத்திரிக்கையில் எழுதி வந்தவர். அவர் மரணத்துக்கு சில காலத்துக்கு முன்பு, போலி செய்திகள் மற்றும் தவறான செய்திகளை பரப்புவதை எதிர்த்து தொடர்ந்து எழுதி வந்தவர். எத்தனையோ மிரட்டல்கள் வந்தாலும் எதற்கும் அஞ்சாமல், அவற்றை தன் கடைசி நாள் வரை சந்தித்து வந்தவர்.

சாந்தனு பவுமிக் (1989-2017)

சாந்தனு பவுமிக் என்பவர், திரிபுரா மாநிலம் அகர்த்தலாவிலிருந்து ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றி வந்தவர். மாதம் 6,000 ரூபாயை ஊதியமாக பெற்று வந்தார். எந்த செய்தியாக இருந்தாலும், எந்த சம்பவமாக இருந்தாலும், முதலில் அந்த இடத்துக்கு சென்று களத்திலிருந்து சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கக் கூடிய ஒரு நிருபர். மனிதம் என்று பொருள் தரக்கூடிய வங்காள மொழிச் சொல்லான மனோபிக் என்ற ஒரு ஆரம்பப்பள்ளியையும் நடத்தி வந்தார் பவுமிக். திரிபுராவின் உள்ளுர் மக்கள் முன்னணி என்ற அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டம்தான் அவர் கடைசியாக செய்தி சேகரித்த செய்தி.

இவர்களில் யாரும் பெரும் பணக்காரர்கள் (பெரும் பணக்காரர்கள் என்றால் ஏழைகளை ஏய்த்து பணக்காரர்களாகுபவர்கள்) கிடையாது. இவர்களில் யாரும், அரசியல் பதவிகளுக்கு போட்டியோ அல்லது அதிகாரத்துக்காக அலைந்தவர்களோ அல்ல. இவர்களில் ஒருவருக்கும் வன்முறையில் நம்பிக்கை கிடையாது. மூவர் வயதானவர்கள். ஒருவர் நடுத்தர வயதுடையவர். ஒருவர் இளைஞர்.

இவர்கள் அத்தனை பேரும் படித்தவர்கள். தத்துவார்த்த விவாதங்கள் மற்றும் புதிய சிந்தனைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள். புதிய சிந்தனைகள் யாரையும் அச்சுறுத்துவதில்லை. ஆனால் சிலரை அச்சுறுத்தியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. சிலர் புதிய சிந்தனைகளும், அந்த சிந்தனைகளினால் எழும் விவாதங்களையும், கண்டு அஞ்சுகிறார்கள். மூடநம்பிக்கைக்கு எதிராகவும், உருவ வழிபாட்டுக்கு எதிராகவும், அறிவியல் அறிவை வளர்ப்பதற்கு எதிராகவும் யார் இருக்கக் கூடும் என்று நான் வியக்கிறேன். மேலும் அதற்காக கொலை செய்யக் கூடிய அளவுக்கு போகக் கூடும் என்பதும் எனக்கு புரியவில்லை. சில கலப்புத் திருமணங்கள் யாருக்கு இத்தனை கோபத்தை ஏற்படுத்த முடியும்? நான் இடது சாரி, நான் கம்யூனிஸ்ட் என்று வெளிப்படையாக அறிவித்தவர்கள் மீது கோபம் வராமல் தென்கோடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கம்யூனிஸ்ட் மீது இத்தனை கோபம் ஏன்? ஒரு பழங்குடியின மக்கள் நடத்தும் ஒரு ஆர்ப்பாட்டத்தை படபிடிப்பு செய்து செய்தி சேகரிக்கும் ஒரு பத்திரிக்கையாளர் மீது யார் இப்படியொரு கொலை வெறியில் இருக்க முடியும்?

இந்த படுபாதகங்களை செய்யக் கூடியவர்கள் எப்படி இருப்பார்கள் என்ற ஒரு சித்திரத்தை நம்மால் எளிதாக வரைந்து விட முடியும். இவர்கள் நிச்சயமாக வலதுசாரி அரசியலைச் சேர்ந்தவர்கள். மிக மிக மோசமான பிற்போக்குத்தனத்தில் ஊறிப்போயிருப்பவர்கள். அவர்களின் நம்பிக்கைகளையும், சிந்தனைகளையும் கேள்வி கேட்பவர்களை கண்டால் அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. சகிப்புத் தன்மை சுத்தமாக இல்லாதவர்கள். வெறுப்பை உமிழ்பவர்கள். தங்களைப் போன்ற சிந்தனையைக் கொண்டவர்களோடு சேருகையில் இவர்களின் துணிச்சல் அதிகமாகும். வன்முறையில் ஈடுபடத் துணிவார்கள். சமயத்தில் கொலை கூட செய்யத் துணிவார்கள். இப்படிப்பட்ட நபர்களை நாம் அடையாளம் கண்டு கொண்டால், விஷயங்கள் தெளிவாகும். கொல்லப்பட்டவர்கள் யார் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டால், அது தானாக கொலையாளிகள் யார் என்பதற்கான விடையை புலனாய்வு அமைப்புகளுக்கு தந்திருக்கும். நான்கு சம்பவங்களில் சில குற்றவாளிகளின் சம்பந்தப்பட்டுள்ளது தெரிய வருகிறது. சில குற்றவாளிகள் தேடப்படுபவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த புலனாய்வு நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலேயே பரப்பப்படும் வெறுப்பும், அச்சமும் நம்மை வருத்தத்தாலும் அவமானத்தாலும் தலை குனிய வைக்கிறது என்பதுதான் வேதனை.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 8.10.17 அன்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழில் ஏ.சங்கர்

×Close
×Close