Advertisment

சிதம்பரம் பார்வை : 70 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் – புதிய பொய்.

ஒவ்வொரு ஆண்டிலும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் புதிதாக சேர்க்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை புதிய வேலை வாய்ப்பாக கருத முடியாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilnadu jobs

jobs

பேராசிரியர்கள் புலக் கோஷ் மற்றும் சவும்யா காந்த்தி கோஷ் ஆகியோர், பெரும் மதிப்பு பெற்ற கல்வியாளர்கள். 2017-18ம் ஆண்டில், இந்தியாவில் 70 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள், அமைப்பு சார்ந்த தொழில்களில் உருவாக்கப்படும் என்று அவர்கள் கூறியபோது, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

அமைப்பு சார்ந்த வேலைவாய்ப்பு என்றால் என்னவென்று இந்த பேராசிரியர்கள் இதற்கு விளக்கம் வேறு அளித்தார்கள். தொழிலாளர் நல நிதி, மாநில தொழிலாளர் காப்பீட்டுத் திட்டம், தேசிய ஓய்வூதிய திட்டம், பொது சேமநல நிதித் திட்டம் ஆகியவற்றில் உறுப்பினராக சேர்க்கப்பட்டவர்களை அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று விளக்கமளித்தார்கள்.

70 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் என்ற செய்தி நமது மூச்சை ஒரு கணம் நிறுத்தும் அளவுக்கு அதிர்ச்சி தரும் செய்தி. அதே செய்தி கட்டுரையில் இது போன்ற அரசு சேமநல நிதி திட்டங்களில் இணைந்தவர்களின் எண்ணிக்கை 919 லட்சம் என்றார்கள். இவர்கள் கூறும் 70 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் என்பது, தற்போது உள்ள அமைப்பு சார்ந்த வேலை வாய்ப்புகளில் 7.5 சதவிகிதம்.

தொழிலாளர் சேம நல நிதி அதிசயம்

இவர்கள் குறிப்பிடும் வேலை வாய்ப்புகளில் பெரும்பான்மை, தொழிலாளர் சேம நல நிதியில் உறுப்பினராக்கப்பட்ட வேலைகள். தொழிலாளர் சேம நல நிதி 550 லட்சம் உறுப்பினர்களோடு, 190 தொழிற்சாலைகளில், ஒரு தொழிற்சாலையில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனம் என்று எடுத்துக் கொள்ளலாம். தொழிலாளர் சேம நல நிதி 550 லட்சம் உறுப்பினர்களோடு 11 லட்சம் கோடி நிதியை உள்ள அமைப்பு என்று கூறுகிறார்கள். இவர்களில் 18 முதல் 25 வயது வரை உள்ளவர்களின் எண்ணிக்கை 45.4 லட்சம். இவர்கள் மாதந்தோறும், இந்த நிதிக்கு சந்தா செலுத்துகிறார்கள். ஏப்ரல் 2017 முதல் நவம்பர் 2017 வரை, 36.8 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இந்த நிதியில் இணைந்தார்கள் என்று கூறும் இவர்கள், 2017-18 நிதியாண்டில், இது வரை, 55.2 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்கள்.

இந்தியாவின் தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் அவர்கள் நிறுவனத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 20க்கும் மேற்பட்டவர்களை புதிய உறுப்பினர்களாக்கி ஒரு ஆண்டுக்கு 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன என்றால், இந்தியா என்ற அற்புதமான நாடு, வேலைவாய்ப்பின்மை என்ற அந்த மாபெரும் பிசாசை வென்று விட்டதாக தைரியமாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்த வேலைவாய்ப்புகளோடு சேர்த்து நாம் கீழ்கண்டவற்றையும் சேர்க்க வேண்டும்.

20க்கும் குறைவானவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களில் உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகள்

அமைப்பு சாரா புதிய தொழில்கள் மற்றும், சிறு மற்றும் குறுந் தொழில்கள் (பல லட்சங்களை கடக்கும்)

விவசாயத் துறையில் உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகள், சுமை தூக்குபவர்கள், கூலித் தொழிலாளர்கள் போன்ற சாதாரண பணிகளில் ஈடுபடுவோர். ஒழுங்கமைக்கப்படாத பொருளாதாரம் சார்ந்த தொழில்களில் உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகள்.

வேலைவாய்ப்புகளை பட்டியலிட்டு கட்டுரை எழுதிய பேராசிரியர்கள் குறிப்பிட்டுள்ள, அமைப்பு சார்ந்த வேலை வாய்ப்புகளோடு, மேற்குறிப்பிட்ட வேலை வாய்ப்புகளையும் சேர்த்தால், 2017-18 ஆண்டில், புதிய வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 140 லட்சத்தை கடக்கும். பேராசிரியர் கோஷின் அறிக்கையின்படி, வேலை வாய்ப்பு சந்தையில் ஒவ்வொரு ஆண்டும் 150 லட்சம் பேர் இணைகிறார்கள். இவர்களில் 66 லட்சம் பேர் தொழில் பயிற்சி பெற்றவர்கள். இந்த நிலை இவர் கூற்றின்படி நீடித்தால், வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையை விட, வேலைக்காக ஆள் தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஒரு ஒப்பீட்டுக்காக நம்மை விட, அதிக அளவு ஜிடிபி வளர்ச்சியில் உள்ள சீனா, ஆண்டுக்கு 150 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. ஆகையால், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் புதிதாக இணைந்தவர்களின் எண்ணிக்கை என்று 2016-17ல் 45.4 லட்சம் மற்றும், 2017-18ல் கூறப்படும் 55.2 லட்சம் எண்ணிக்கை மிக முக்கியமானது. இந்த எண்ணிக்கை சரியானதாக இருந்தால், 2017-18ல், 70 லட்சம் அமைப்பு சார்ந்த புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்ற எண்ணிக்கை சரியானது என்று ஏற்றுக் கொள்ளலாம்.

மாற்றுக் கருத்து

திரு.ஜெய்ராம் ரமேஷ் மற்றும் திரு சக்ரவர்த்தி ஆகியோரும், நன்றாக அறியப்பட்ட நிபுணர்கள். இவர்கள் இருவரும் கூட்டாக எழுதிய கட்டுரையில், பேராசிரியர் கோஷ் அவர்கள் வேலை வாய்ப்பு குறித்து கூறியுள்ளதை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். ஒவ்வொரு ஆண்டிலும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் புதிதாக சேர்க்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை புதிய வேலை வாய்ப்பாக கருத முடியாது என்றும், அமைப்பு சாரா பிரிவிலிருந்து, அமைப்பு சார்ந்த பிரிவுக்கு மாறி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினராகும் நபர்களின் எண்ணிக்கை இதில் அதிகம் என்பதை குறிப்பிடுகின்றனர். மேலும் புதிதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினராவதை, புதிய வேலை வாய்ப்பாக ஒரு காலமும் கருத முடியாது என்றும் குறிப்பிடுகின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், நவம்பர் 2016க்கு பின்னரும், ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஜுலை 2017க்கு பிறகும், அமைப்பு சாரா தொழில்களில் பெரும்பாலானவை, அமைப்பு சார்ந்த தொழில்களாக மாற்றப்படும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டன. இந்த மாற்றங்கள் அனைத்தும் 2017-18 நிதியாண்டில் நடந்தது. இந்த மாற்றங்கள் வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால், பல தொழில்கள் மூடப்பட்டன. இதனால் பெரும் வேலையிழப்பு ஏற்பட்டது என்பதும் உண்மை.

மேலும், பொது வெளியில் இருக்கும் புள்ளி விபரங்களை வைத்துப் பார்க்கையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இணைந்தவர்களின் சதவிகிதம் 2014-15ல் 7 சதவிகிதமாகவும், 2015-16ல், 8 சதவிகிதமாகவும் இருந்தது. ஆனால் பேராசிரியர் கோஷின் அறிக்கையின்படி, இது 2016-17ல் 20 சதவிகிதமாகவும், 2017 டிசம்பர் வரை 23 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது.

பேராசிரியர்கள் கோஷ் இந்த எதிர்வினைக்கு பதில் அளித்தார்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் புதிய வேலைகளோடு இணைந்தவர்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டார்கள் என்றும், புள்ளி விபரங்களை எடுக்கையில், இதற்கு தகுதி பெறாதோரின் எண்ணிக்கைகள் நீக்கப்பட்டன என்றும் கூறினார்கள். அவர்கள் அதிகபட்சமாக கொடுத்த விளக்கம் என்னவென்றால் 70 லட்சம் வேலை வாய்ப்புகள் என்று அவர்கள் கூறியது, மொத்த எண்ணிக்கை என்றும், ஏற்கனவே பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் இடங்களில் இணைந்தவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்துதுதான் 70 லட்சம் என்பதுமே.

இரு கோரிக்கைகள்

தற்போது இந்த விவாதம் சுவையான கட்டத்தை எட்டியுள்ளது. பேராசிரியர்கள் கோஷ் உள்ளிட்டோருக்கு பொதுத் தளத்தில் இல்லாத அரசின் புள்ளி விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளன என்பது வெளிப்படையாக தெரிகிறது.

முதலில், அரசு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறித்த அனைத்து புள்ளி விபரங்களையும் பொதுத் தளத்தில் வெளியிட வேண்டும்.

பேராசிரியர் கோஷ் மற்றும் டாக்டர் கோஷ் ஆகியோர், தற்போது அவர்கள் கட்டுரையில் கணித்துள்ள அதே முறையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 2014-15 மற்றும் 2015-16 ஆண்டுகளில் புதிதாக இணைந்தவர்களின் எண்ணிக்கையை கணிக்க வேண்டும். இந்த இரண்டு ஆண்டுகளும், பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு முன் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினரானவர்களின் எண்ணிக்கையையும் வெளியிட வேண்டும். மேலும், 2004 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது இந்த எண்ணிக்கை என்ன என்பதையும் வெளியிட வேண்டும்.

இது போன்ற விரிவான ஆய்வுகளே உண்மையை கண்டறிய உதவும். இல்லையென்றால் 70 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் என்ற வாதம், வெற்று ஜம்பமாகவும், நாளடைவில் பொய் என்பதும் கண்டு பிடிக்கப்படும்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 28.01.17 அன்று எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழில் : ஆ.சங்கர்

P Chidambaram A Sankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment