Advertisment

ப.சிதம்பரம் பார்வை : ஒன்றும் புரியாமல்

அனைத்து பொருளாதார வல்லுனர்களும், பொருளாதார வளர்ச்சி சரிவை சந்தித்துள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரே ஒப்புக் கொள்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
money-759

ப.சிதம்பரம்

Advertisment

ஏறக்குறைய அனைத்து பொருளாதார வல்லுனர்களும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவை சந்தித்துள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரே ஒப்புக் கொள்கிறார். ஆனால் அரசுதான் பிடிவாதமாக மறுத்து வருகிறது. ஒரு அரசு இப்படியொரு உண்மையை அப்பட்டமாக மறுக்கிறதென்றால், இந்த சரிவுக்கு காரணம் என்ன என்பதும் அரசுக்கு புரியவில்லை என்பதே நிஜம்.

பெருமைபட்டுக் கொள்ளும் நேரம் முடிந்து விட்டது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியா விலகி விட்டது. சீனாவின் மீதான தேவையற்ற கோபம் கடந்த ஏழு காலாண்டுகளாக இருந்தது. தொடர்ந்து ஐந்து காலாண்டுகளாக இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி மற்றும் மொத்த உற்பத்தி வளர்ச்சி வீழ்ந்து வருகிறது (படத்தை பார்க்கவும்)

chidambaram1

ஜிடிபி வளர்ச்சி 5.7 என்ற விகிதத்தில் தேங்கலாம். அல்லது ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் மேலும் வீழ்ச்சி அடையலாம். பண மதிப்பிழப்பின் தாக்கம் இன்னும் நீங்கவில்லை. பொது விற்பனை வரி, (ஜிஎஸ்டி) ஒரு நல்ல திட்டம். ஆனால் போதுமான திட்டமிடல் இல்லாமல் அவசர அவசரமாக செயல்படுத்தப்பட்டதால், அது உற்பத்தித் துறையில் உள்ள பல தொழில்களை பாதித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், சராசரி வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது.

வெற்றுப் பெருமை

2016ல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவிகிதம் வளர்ந்தது. 2016-17ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.1 ஆக இருந்தது. சீனாவின் பொருளாதார அளவு 11,200 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்தியாவின் பொருளாதாரத்தின் அளவி 2300 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை விட, சீனாவின் வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்தாலும் கூட, ஒரு ஆண்டில் இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட, சீனாவுடையது அதிகம். நமது பெருமைகளை, சீனா உட்பட எந்த நாடும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆகையால், தன்னடக்கத்தோடு இருப்பதே நல்லது.

ஏறக்குறைய அனைத்து பொருளாதார வல்லுனர்களும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவை சந்தித்துள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரே ஒப்புக் கொள்கிறார். ஆனால் அரசுதான் பிடிவாதமாக மறுத்து வருகிறது. ஒரு அரசு இப்படியொரு உண்மையை அப்பட்டமாக மறுக்கிறதென்றால், இந்த சரிவுக்கு காரணம் என்ன என்பதும் அரசுக்கு புரியவில்லை என்பதே நிஜம். இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ஆராய்வோம்.

வளர்ச்சியை நிர்ணயிப்பதில் நான்கு காரணங்கள் உந்துசக்தியாக செயல்படுகின்றன. அரசின் செலவு, ஏற்றுமதி, தனியார் முதலீடு, தனியார் நுகர்வு. இது 2016-17 மற்றும் 2017-18ன் முதல் காலாண்டில் எப்படி இருந்தது.

மேலே உள்ள படம் தெளிவாக கூறுகிறது. அரசு கூடுதலாக செலவு செய்வதை கெட்டியாக பிடித்துக் கொண்டது. ஜுலை 2017 இறுதியில் அரசு வருடாந்திர நிதிப் பற்றாக்குறையில் 92.4 சதவிகிதத்தை காலி செய்துவிட்டது. திடீரென்று எதிர்பாராமல் ஏராளமான வருவாய் வந்தாலே ஒழிய இது தொடராது. அல்லது செலவுகளை குறைக்க வேண்டும். முதலில் சொன்னது நடக்க வாய்ப்பில்லை. ஆனால் இரண்டாவதாக சொல்லப்பட்டுள்ளது, சரியான நடைமுறை கிடையாது. அரசு இப்போது முதல் மார்ச் 2018 வரை, தன செலவுகளை குறைத்தே ஆக வேண்டும். வண்டி ஓடும். ஆனால் நிதானமான வேகத்தில்தான் ஓட முடியும்.

மூன்று உந்து சக்திகள் தடுமாறுகின்றன.

ஏற்றுமதி, வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் 2013-14ல், வருடாந்திர ஏற்றுமதி வளர்ச்சி 314 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கடந்த மூன்றாண்டு ஆட்சியில் இது வரை அடைந்த உச்சபட்ச இலக்கான 310 பில்லியன் டாலர்களை விட வெகு குறைவாகவே இருந்தது. முதலாண்டில் 310 பில்லியன், 262 பில்லியன் மற்றும் 276 பில்லியன் டாலர்களாக இருந்தது. பொருளாதார அறிஞர் ஸ்வாமிநாதன் ஐயர் அவர்கள், ஒரு நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி 15 சதவிகிதமாக இருந்தாலே ஒழிய அந்நாடு 7 சதவிகித ஜிடிபி வளர்ச்சியை அடைய முடியாது என்று கூறுகிறார்.

தனியார் முதலீடும் வளர்ச்சிக்கு உதவவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில், ஜிடிபியில் முதலீடு வளர்ச்சி சதவிகிதம் 31.34, 30.92 மற்றும் 29.55ஆகவே இருந்து வருகிறது. 2011-12ல் இது 31.41 சதவிகிதம் வரை வளர்ச்சி அடைந்தது. தனியார் முதலீட்டின் மற்றொரு அளவுகோல், தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன். கடந்த அக்டோபர் 2016 முதலே இது சரிவில் உள்ளது. இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது, அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கும் நடுத்தர தொழில் நிறுவனங்களே. நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன், ஜுலை 2015ல், 1,19,268 கோடியாக இருந்தது. இது ஜுலை 2017ல் 1,00,542ஆக, அதாவது 16 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால் இந்த அரசு இன்னும் வேலை வாய்ப்பை உருவாக்குகிறது என்று நம்மை நம்பச் சொல்கிறது.

தொழில் உற்பத்தி அளவீடு ஒவ்வொரு மாதமும் அபாய ஒலியை எழுப்பிக் கொண்டே இருக்கிறது. ஆனால் யாரும் அதை கவனிப்பதாக தெரியவில்லை. இந்த ஆண்டு ஏப்ரல்-ஜுலை 2017ல், இந்த அளவீடு வெறும் 1.7 சதவிகிதம் மட்டுமே வளர்ந்துள்ளது. உற்பத்தித் துறையில் இந்த அளவீடு 1.3 சதவிகிதம் மட்டுமே வளர்ந்துள்ளது. ஜுலை மாதத்தில் இந்த அளவீடு மிக மோசமாக 1.2 சதவிகிதமாகவும், உற்பத்தித் துறையில் 0.1 சதவிகிதமாகவும் இருந்தது.

இறுதியாக தனியார் நுகர்வும் குறைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக குறைந்து தற்போது இது 6.7 சதவிகிதமாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆய்வின்படி, நடப்பு சூழல் அளவீடு மே 2017ல் 100ஆக இருந்தது. இது ஜுன் மாதத்தில் 96.8ஆக குறைந்துள்ளது. இது பல துறைகளிலும் வீழ்ச்சி நடந்து கொண்டிருப்பதற்கான அளவீடு. நகர்ப்புறங்களில் நிலைமை மட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும், ஊரக பகுதிகளில் மிகவும் மோசமடைந்துள்ளது.

இவையெல்லாம் எப்போது நடக்கிறது என்றால், உலக பொருளாதாரம் நிமிரத் தொடங்கியுள்ளது. கச்சா எண்ணை விலை குறைந்துள்ளது. குறைந்த வட்டி விகிதம் உள்ள நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்கின்றன. இந்த சூழலில்தான் இத்தகைய வீழ்ச்சி!!! இதையெல்லாம் பயன்படுத்தி முன்னேற வேண்டிய அரசு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் அவசரமாக அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி ஆகியவற்றால் தனக்குத்தானே காயங்களை ஏற்படுத்திக் கொண்டது. இந்த தோல்விகளையெல்லாம் மூடி மறைக்க, தன் திறமையின்மையை மூடி மறைக்க, வரித் துறை அதிகாரிகளுக்கு நிறைய அதிகாரங்களை அளித்து சீரழிவை தொடங்கி வைத்துள்ளது.

ஆனால் பிரதமரின் முகத்திலோ, நிதி அமைச்சரின் முகத்திலோ, அல்லது புதிய தொழில் துறை அமைச்சரின் முகத்திலோ இது குறித்த கவலை ரேகைகள் தென்படவில்லை. ஆனால் பிரதமர் அலுவலகத்தோடு தொடர்பில் உள்ள பத்திரிக்கையாளர்கள், பிரதமர் அலுவலகம் கவலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த கவலையின் ஒரே அறிகுறி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் வளர்ச்சித் துறை ஆகியவற்றின் அமைச்சர்களை பணி நீக்கம் செய்திருப்பது. நான்காவதாக தொழில் துறை அமைச்சர் மாற்றப்பட்டுள்ளார்.

காரணங்களை புரியாத அரசாங்கம், இந்த சிக்கல்களுக்கான காரணத்தை கண்டறிந்து அவற்றை சரி செய்ய முடியாது. இதற்கிடையே பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் வரித் துறையினரின் தீவிர நடவடிக்கைகள் ஆகியவை மேலும் பொருளாதாரத்தை பாதிப்படையச் செய்யும்.

ப.சிதம்பரம் இந்தியன் எக்ஸ்பிரஸ் 17.09.17 தேதியிட்ட நாளிதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

தமிழாக்கம் : ஆ.சங்கர்

P Chidambaram A Sankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment