Advertisment

ஞாயிறு சிறப்பு சிறுகதை : ஹவில்தார் குப்புலிங்கம்

தொலைந்து போன நண்பனின் நினைவுகளை அசை போடுவது என்பது தனி சுகம். அவர்கள் தொலைந்து போனதில் உள்ள கதைகள் படுசுவராஸ்யம் என்பதை உறுதி செய்கிறது, ஹவில்தா குப்புசாமி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
havildar-kupulingam

அரவிந்த் குமார்

Advertisment

பைக்கை நிறுத்திவிட்டு ஏடிஎம்-க்குள் செல்ல முயன்றபோது அதன் ஷட்டர் பாதி மூடப்பட்டிருந்தது. பணம் நிரப்புராங்க சார், வெயிட் பண்ணுங்க என்றார் வாட்ச்மேன். பர்சில் இருந்து ஏடிஎம் கார்டை எடுத்து கையில் வைத்து தட்டியபடி நின்று கொண்டிருந்தேன். ஷட்டர் உயர்த்தப்பட்டதும், உள்ளே இருந்து பெரிய துப்பாக்கிகளை தூக்கிக் கொண்டு வெளியே வந்த இரண்டு பேரில் ஒருவரை பார்த்ததும் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் ஒலிக்க "ஹவில்தார் குப்புலிங்கம்" என்று கூவி விட்டேன்.  அவரும் அதிர்ந்து போய் என்னைப் பார்க்க, "அண்ணா என்னை தெரியலயா? நான்தான் இஸ்மாயில்" என்றேன். "எப்படி இருக்கீங்க, எங்க இருக்கீங்க, எவ்ளோ நாள் ஆச்சு" என்று அடுத்தடுத்து கேள்விகளை கேட்டுக் கொண்டே அருகில் சென்றேன். கண்கள் சுருங்க, மூக்கை உறிஞ்சியபடி, "ஓ! இஸ்மாயிலா?" என்றபடி "இருக்கேன்பா" என்று சொல்லிவிட்டு "நான் இப்போ யார்கிட்டயும் பேசக்கூடாது, டியூட்டில இருக்கேன், அப்புறம் பார்க்கலாம்" என்று அவசரமாக வண்டியில் ஏற, என்னை உரசியபடி அந்த வண்டி சென்று விட்டது. 

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்படி இருந்த அண்ணா, ஏன் என்கிட்ட ஒரு வார்த்தையும் பேசல, கடைசியாக அவரை பார்த்த அன்று என்ன நடந்து இருக்கும் என்று அப்போது சரியாக புரியாவிட்டாலும், இத்தனை வருடங்களில் அது தெளிவாக புரிகிறது. அதற்கு இவர் என்ன செய்வார் என்ற யோசனைகள் மண்டையை சூடாக்கியது. ஏடிஎம்-மில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு நேராக சாம்சன் கடைக்கு சென்றேன். அங்கு ஒரு பைக்குக்கு பங்சர் போட்டுக் கொண்டிருந்த சாம்சனிடம், ஹவில்தார் குப்புலிங்கத்தை பார்த்ததை சொன்னேன். தடாலென்று "எங்கடா பார்த்த? எப்படா பார்த்த? பேசினியா? போன் நம்பர் வாங்கினியா?" என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான். "இல்ல மச்சி, வேலைல இருக்கேன், அப்புறம் பேசுறேனு போயிட்டாருடா" என்றேன். "சே, எப்பிடி இருப்பார்ல அண்ணன், என்னாமா பேசுவாரு, என்னலாம் பண்ணி இருக்கோம், எவ்ளோ கலாட்டா, ஜாலி, நினைச்சுப் பார்த்தா இப்போ கூட குதிக்கணும் போல இருக்குடா" என்று கடைப்பையன் வாங்கி வந்து தந்த டீயை உறிஞ்சியபடி சாம்சன் ஆற்றாமையோடு பேசினான்.

அன்றெல்லாம் விடுமுறைக்கு கிறிஸ்டோபர் அண்ணா ஊருக்கு வந்துவிட்டால் ஒரே கொண்டாட்டம் தான். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வரும் அவர் பொங்கல் முடிந்துதான் மீண்டும் செல்வார். ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது உண்மை பெயரான கிறிஸ்டோபர் என்பதை எல்லோரும் மறந்து விட்டோம். எதனாலோ குப்புலிங்கம் என்ற பெயர் அவருக்கு நிலைத்து விட்டது. சிரித்து பேசும் வேளைகளில் குப்புலிங்கம் என்று சொன்னால் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார். ஆனால் கோபமான நேரங்களில் அந்த பெயரைச் சொல்லி விட்டால் போதும், துரத்தி துரத்தி அடிப்பார். சிறுவர்கள் தூரப்போய் நின்று "ஹவில்தார் குப்புலிங்கம் டோய்" என்று கத்திவிட்டு ஓடுவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். 

பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து இடதுபுறம் திரும்பினால் மலையடிவாரத்தில் வந்து முட்டி நிற்கும் இடம்தான் பெரியார் நகர். அதில் நாங்கள் எல்லாம் ஒரு கேங். பாலாஜி, குண்டு பாலாஜி, மகேஷ், வேலு, முனுசாமி, சூப் சந்திரன், சாம்சன் என்று பெரிய பட்டாளம் அது. விடுமுறை காலத்தில் கிறிஸ்டோபர் அண்ணா தான் கேங் லீடர். கிறிஸ்துமஸ் இரவு அன்று பல்லாவரம் பெரிய சர்ச்சுக்கு போவோம். கூட்டத்தில் வெறுமனே சுற்றிவந்து கேக் தின்றபடி அவ்வப்போது பெண்களாக பார்த்து ஹாப்பி கிறிஸ்துமஸ் என்று சொல்வோம். மற்றபடி யேசுவுக்கும், எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. 

லஷ்மி தியேட்டர் எதிரில் பெங்களுரைச் சேர்ந்த அண்ணன்-தம்பிகள் ரெண்டு பேர் பேக்கரி ஒன்றை திறந்திருந்தார்கள். கர்நாடகா பிரச்னை கொழுந்துவிட்டு எரிந்த நேரம், அதை சாக்காக வைத்துக் கொண்டு கிறிஸ்டோபர் அண்ணா தலைமையில் கடையை சூறையாடி இனிப்புகளை முடிந்தவரை அள்ளிக் கொண்டோம். உள்ளே பூரணம் வைத்து உருண்டை வடிவில் இருந்த இனிப்பு பணியாரத்தின் விலை 40 ரூபாய். அதனை குறிவைத்து அப்படியே கூடையோடு எடுத்து வந்தோம். அன்று இரவு முழுவதும் பார்த்தவர்கள் எல்லோருக்கும் இனிப்புகள் வழங்கியபடி ஹாப்பி கிறிஸ்துமஸ் சொல்லிக் கொண்டே தின்று தீர்த்தோம்.

ஒவ்வொரு முறை வரும்போதும் ஏதாவது ஒரு புதுக்கதையோடு வருவார் கிறிஸ்டோபர் அண்ணா. வீட்டு சுற்றுச்சுவரில் அமர்ந்தபடி காலாட்டிக் கொண்டே அவர் சொல்லும் கதைகளை கேட்க நேரம் போவதே தெரியாது. எந்த மாநிலத்துக்காரன், எந்த மாதிரி பேசுவான், உயர் அதிகாரிகளின் முட்டாள்தனமான முடிவுகள் என்று அவர் சொல்லும்போது நாமே ராணுவத்தில் சேர்ந்தது போல் இருக்கும். மாலை நேரத்தில் ஆரம்பிக்கும் எங்கள் ஜமா, நள்ளிரவு வரை போகும். ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவது போன்று பொம்மை துப்பாக்கியை கைகளில் அவர் கைகளில் லாவகமாக சுழற்றிக் காட்டுவது பார்ப்பதற்கு சாகசம் போல் இருக்கும். 

ஒருசமயம், இருட்டில் பேசிகொண்டிருந்த எங்களிடம், "இப்போ இங்க வவ்வால் இருக்கா, இல்லையா எப்படி கண்டுபிடிப்ப?" என்று என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த வினோத்திடம் கேட்டார். தெரியலையே என்று ஆர்வம் பொங்க சொன்னான் வினோத். உடனே கையில் தின்று கொண்டிருந்த வேர்க்கடலையை ஒரே வாயில் போட்டுக் கொண்டு காகிதத்தை சுருட்டி தலைக்கு மேலே வேகமாக விட்டெறிந்தார். எங்கிருந்தோ சில வவ்வால்கள் கணநேரத்தில் தலைக்கு மேலே குறுக்கும் நெடுக்குமாய் கடந்து போயின. அதனை பார்த்த எங்களுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. இப்படி ஏதாவது ஒன்றை சொல்லியபடியும், செய்தபடியும் ஹவில்தார் குப்புலிங்கம் எங்களுக்கு உற்சாகமூட்டும் நபராக இருந்தார்.  

பல்லாவரம் மிலிட்டரி கேண்டீனுக்கு முதல்முதலாக அவருடன் தான் சென்றேன். ஹார்லிக்ஸ், பருப்பு, சர்க்கரை என்று ஏராளமான மளிகை சாமான்கள் கூடவே ஒரு பை நிறைய மதுபாட்டில்கள், எல்லாமே சல்லிசான விலையில். அன்றிரவு முதல்முறையாக ஓல்டு மாங் ரம்-மை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். கூடவே மாட்டுக்கறியும். வித்தியாசமான அந்த பாட்டிலின் வடிவமும், நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்திய அந்த முதல் மிடறும் இன்றளவும் ஞாபகத்தில் இருக்கிறது. குடித்து விட்டால் இந்தி பாடல்கள் தான் அண்ணனிடம், அதுவும் தப்பு தப்பாக. சிக்கன் பகோடாவுக்காக அதற்கு தாளம் போட்டதும் உண்டு.

பல்லாவரத்திற்கும், மீனம்பாக்கத்திற்கும் இடைப்பட்ட நெடுஞ்சாலை ஓரத்தில் இரவு நேரத்தில் திருநங்கைகள் ஏன் நின்று கொண்டிருப்பார்கள் என்ற என்னுடைய நீண்ட நாள் யோசனைக்கும் ஒருநாள் செயல் விளக்கம் அளித்தார் ஹவில்தார் குப்புலிங்கம். அன்று குமட்டி குமட்டி வாந்தி எடுத்தேன். "ராணுவத்துல இதெல்லாம் சகஜம்டா, இன்னும் சொல்லப்போனா ஆத்திரத்துக்கு ஆம்பளையாவது, பொம்பளையாவது" என்று அவர் சொன்னபோது, அன்று இரவு தனியாக அவருடன் வீடு திரும்புவதற்குள் எனக்கு தொண்டைத் தண்ணி வற்றிவிட்டது. 

கிறிஸ்டோபர் அண்ணாவின் தாயார், பார்ப்பதற்கு நீர் ஊற்றி வைக்கும் தொட்டி போலிருப்பார். கிறிஸ்துவர்களாக இருந்தாலும், பெரிய பொட்டு வைத்திருப்பார். அண்ணாவுக்கு அந்த விடுமுறையில் கல்யாணம் நிச்சயமாகி இருந்தது. அவர்களுக்கு சொந்த ஊர், திருநெல்வேலியின் ஏதோ ஒரு குக்கிராமம். திருமணத்திற்கு செல்வதற்கு முன்னர், எங்கள் எல்லோருக்கும் பெரிய விருந்து கொடுத்தார். முகம் கொள்ளாத சிரிப்பு. மூக்கை உறிஞ்சி, உறிஞ்சி பேசும் அவரது ஸ்டைல் அன்று கூடுதல் அழகாக தெரிந்தது. எங்கள் 4-வது தெருவில் இருந்த அத்தனை இளவட்டங்களுக்கும் அன்று உற்சாகம் கொப்பளித்த நாள். அண்ணனின் சிரிப்பு தெருமுனையை தாண்டியும் கேட்டது.

ஒருவாரம் கழித்து ஊருக்கு திரும்பினார். வழக்கம்போல், "குட்மார்னிங் குப்புலிங்கம்" என்று நான் எழுப்பிய குரலுக்கு, திரும்பி பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் பல் விளக்க ஆரம்பித்தார். அடுத்தடுத்த தினங்களில் எங்களுடன் அவர் நேரம் செலவிடுவது முற்றிலுமாக குறைந்து விட்டது. குப்புலிங்கம் அண்ணாவின் மனைவி பெயர் ஏஞ்சலின். ஆனால் அவரை யாருமே வெளியில் பார்க்கவில்லை. "ஊருக்கு புதுசுல, அதா, பழகிட்டா சரியாகிடும்" என்று என் அம்மாவிடம், குப்புலிங்கம் அண்ணாவின் அம்மா சொல்லிக் கொண்டிருந்ததையும் கேட்டேன். நான்காவது நாள் பொழுது விடிந்தபோது எங்கள் தெருவே வித்தியாசமாக இருந்தது. என் அம்மா உட்பட பெண்கள் எல்லோரும் அங்கங்கு கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். குப்புலிங்கம் அண்ணாவின் அம்மா அழுது அரற்றியபடி தரையில் விழுந்து கிடந்தார். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. 

அண்ணாவை தேடி வீட்டுக்குள் சென்றபோது, அவர் கதவை திறக்கவே இல்லை. ஜன்னலும் மூடப்பட்டிருந்தது. ரொம்ப நேரம் காத்திருந்து விட்டு நாங்கள் திரும்பி விட்டோம். இரவோடு இரவாக கிறிஸ்டோபர் அண்ணாவின் வீடு காலி செய்யப்பட்டு விட்டது. அதற்கு பிறகு பார்க்கவே இல்லை. ஆளுக்கொரு திசையில் நாங்களும் பிரிந்து விட்டோம். நாங்களும் பெருங்களத்தூர் வந்து செட்டில் ஆகிவிட்டோம். அப்போது ஒருநாள் மார்க்கெட்டிற்கு அம்மாவுடன் செல்லும்போது ஏஞ்சலின் அக்காவை பார்த்தோம். அம்மா தான் ஏஞ்சலின் கையைப் பிடித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். நான் வெயிலுக்கு அஞ்சி மாம்பழக் கடைவாசலில் இருந்த கீற்றுக் கொட்டகையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். அடிக்கடி ஏஞ்சலின் அக்கா கண்களை கசக்குவதும், அம்மா அவரின் தோளை தட்டுவதும் தெரிந்தது. பிறகு சிரித்தபடி அக்கா கடந்து சென்றார். போகும்போது என்னையும் ஒருமுறை பார்த்துவிட்டு சென்றார். திரும்பி வரும் வழியில் ஏஞ்சலின் அக்காவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றதையும், தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும் அம்மா போகிற போக்கில் சொல்லிச் சென்றார்.  

இதோ இன்று நான் யாரைப் பார்த்தேன். 

நிஜ துப்பாக்கியை விரைப்பாக பிடித்தபடி நின்ற கிறிஸ்டோபர் அண்ணாவும், பொம்மை துப்பாக்கியை சுழற்றி சாகசம் காட்டும் ஹவில்தார் குப்புலிங்கம் அண்ணாவும் கண்முன்னால் வந்து போனார்கள்.

Aravind Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment