Advertisment

எல்லாம் அவன் என்றிருப்போம்.

எல்லாம் அவன் செயல் என்ற வாசகத்துக்கு என்ன அர்த்தம் என்பதை ஜென் கதை மூலம் விவரிப்பதோடு, வாழ்க்கை தத்துவத்தையும் எடுத்துரைக்கிறார், இரா.குமார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
God - Ra.Kumar -

இரா.குமார்

Advertisment

“எல்லாம் அவன் செயல்” என்று சொல்வதில் ஆழ்ந்த பொருள் உள்ளது. அதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். “எல்லாம் அவன் செயல்” என்பது உளவியல் ரீதியாக நம்மைப் பக்குவப்படுதுவதாகும். இதைப் புரியாதவர்கள்தான், ஏடாகூடமாகக் கேள்வி கேட்கிறார்கள்.

“எல்லாம் அவன் செயல்” என்றால், கொலை, கொள்ளை நடப்பதும் அவன் செயலா என்று கேட்கின்றனர். இப்படிக் கேட்கின்றவர்களை நாம் இகழக்கூடாது. காரணம் அவர்களுக்கு இதன் தத்துவம் புரியவில்லை. புரியவில்லை என்பதைவிடவும் தெரியவில்லை என்று சொல்லலாம். தெரியவில்லை என்பது, அறியாமை. அறியாமை உள்ளவர்கள் மீது நாம் பரிதாபப்படவேண்டுமே தவிர, அவர்கள் மீது கோபப்பட்டு சுடு சொல் வீசக்கூடாது.

“எல்லாம் அவன் செயல்” என்று முன்னோர்கள் ஏன் சொல்லிச் சென்றனர்?

நான் எனது என்பது அகம்பாவத்தின் வெளிப்பாடு. அகம்பாவம் நம்மை என்றுமே நல்வழியில் செலுத்தாது. ஞானத் தெளிவு பெறுவதற்காக, முனிவர் ஒருவரிடம் ஒரு மன்னன் சென்றான். “நான் இந்த நாட்டின் மன்னன் வந்திருக்கிறேன். ஞானத் தெளிவு பெற விரும்புகிறேன்” என்றான். அதற்கு அந்த முனிவர், “ஞானத் தெளிவு பெற வேண்டுமானால், ”நான்” செத்தபிறகு வா” என்றார்.

“நீங்கள் செத்த பிறகு வந்து நான் யாரிடம் கேட்பது?”

”நான் என்பது என்னை அல்ல. உன்னை”

”புரியவில்லை சாமி”

”உன்னிடம் உள்ள நான் என்ற அகம்பாவம் செத்த பிறகு வா என்று சொன்னேன்” என்றார் முனிவர்.

மன்னனுக்குப் புரிந்தது. நான், எனது என்ற செறுக்கு அழியாதவரை ஞானத் தெளிவு பெற முடியாது என்பதை உணர்ந்தான்.

எனவே, நான் என்ற செறுக்கு அழிய வேண்டுமானால், “எல்லாம் அவன் செயல்” என்று இருக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல, “எல்லாம் அவன் செயல்” என்பது நம்மை சரியான பாதையில், எல்லா வகையிலும் வெற்றிப் பாதையில் செலுத்தக் கூடிய ஞானசூத்திரம். இதன் பொருளைப் புரிந்துகொண்டவர்களுக்கு இது விளங்கும்.

ஒரு செயலைச் செய்கிறோம். அதில் வெற்றி கிடைத்துவிடுகிறது. அது நமக்குக் கிடைத்த வெற்றி: நம்மால் கிடைத்த வெற்றி; நமது உழைப்பால், நமது முயற்சியால் கிடைத்த வெற்றி. நம் அறிவாற்றலால் கிடைத்த வெற்றி என்று எண்ணும்போது, உள்ளத்தில் மகிழ்ச்சிப் பிரவாகம் எடுக்கிறது. மகிழ்ச்சியில் உள்ளம் துள்ளிக் குதிக்கிறது. இதுவே, இன்னொருவர் முயற்சியால், இன்னொருவர் அறிவாற்றலால் கிடைத்த வெற்றி; இன்னொருவர் உழைப்பால் கிடைத்த வெற்றி என்றால், நம் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்காது.

இதே போலதான் தோல்வியும். ஒரு முயற்சியில் செயலில் தோற்றுவிட்டோம் என்றால், உடனே துவண்டுவிடுகிறோம். என் முயற்சி வீணாகிவிட்டதே; என் உழைப்பு பலனின்றிப் போய்விட்டதே; என் அறிவாற்றல் என்னாவது? இப்படி தோற்றுவிட்டேனே என்று மனம் சோர்வடைகிறோம்.

வெற்றியில் மகிழ்ச்சியும் தோல்வியில் விரக்தியும் எதனால் ஏற்படுகிறது? செய்தது நாம் என்று கருதுவதால்தானே? அடுத்தவர் செய்தது என்றால், வெற்றி தோல்வி நம்மை பெரிதாக பாதிப்பதில்லை.

அதனால்தான், “எல்லாம் அவன் செயல்” என்றார்கள். நம்மை ஆட்டுவிப்பவன் அவன். கருவிதான் நாம். மின்சாரமாக இருந்து இயக்குவது அவன். இதில் வெற்றியோ தோல்வியோ எல்லாம் அவனைச் சேரும். இதில் நாம் ஒன்றுமில்லை. செயல்தான் நம்முடையது. முடிவு அவனுடையது. எனவே வெற்றிக்கோ தோல்விக்கோ சொந்தக்காரர் நாம் இல்லை என்றார்கள் நம் முன்னோர்கள்.

வெற்றியோ தோல்வியோ அது நமதில்லை. அவனுக்கே சொந்தம் எல்லாமும் எனக் கருதிவிட்டால், வெற்றியில் துள்ளிக் குதிக்கப் போவதும் இல்லை. தோல்வியில் துவண்டுவிடப்போவதும் இல்லை. மனம் சம நிலையில் இருக்கும்.

மகிழ்ச்சியிலோ, சோகத்திலோ எடுக்கும் எந்த முடிவும் சரியானதாக இருக்காது. அப்போது எடுக்கும் முடிவு நம்மை வெற்றிப்பாதையில் செலுத்தாது.

“எல்லாம் அவன் செயல்” என்று இருக்கும்போது வெற்றியில் துள்ளாமலும் தோல்வியில் துவளாமலும் இருப்போம். அப்போது நம் மனம் சமநிலையில் இருக்கும். மனம் சமநிலையில் இருக்கும்போது எடுக்கப்படும் முடிவுகள் சரியானதாக இருக்கும். அவை நம்ம்மை சரியாக வழி நடத்தும். வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும்.

இதைப் புரிந்துகொள்ளாதவர்கள்தான், “எல்லாம் அவன் செயல்” என்றால் படிக்காமலே தேர்வில் வெற்றி பெற முடியுமா? அவன் வெற்றி பெற வைப்பானா? என்று கேட்கின்றனர். முயற்சிதான் நம்முடையது. முடிவு அவன் கையில் எனும்போது, வெற்றி தோல்விகள் நம்மை பாதிக்காது. சஞ்சலமற்ற மனத்துடன் வாழ முடியும். நெஞ்சுக்கு நிம்மதி கிடைக்கிறது. நெஞ்சம் நிம்மதி அடைந்தால், உள்ளம் சமநிலையாகி, உடலும் உற்சாகம் பெறும். வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.

எல்லாம் அவன் என்றிருப்போம்.

உள்ளம் தெளிவுற்று வாழ்வோம்.

Ra Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment