மும்பையில் தங்களுடைய இரு தங்கைகளை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு சகோதரர்களுக்கு சிறைத் தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த அவர்களது தாயாருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த 12 மற்றும் 16 வயதுடையை சிறுமிகளை அவர்களது இரண்டு சகோதரர்களே தனித்தனியாக தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அந்த சிறுமிகள் தங்களது சகோதரர்களால் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்துள்ளனர்.

இதுகுறித்து, அச்சிறுமிகளில் ஒருத்தி தன்னுடைய மற்றொரு சகோதரனிடம் கூறியுள்ளார். அந்த சகோதரனும் தனது தங்கைகளை காப்பாற்றியுள்ளார். ஆனால், 3 மாதங்களுக்குப் பின் அந்த சகோதரன் இறந்துவிடவே குற்றம்சாட்டப்பட்ட சகோதரர்கள் தங்கள் விருப்பம்போல் தங்கைகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதற்கு அச்சிறுமிகளின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். அச்சிறுமிகள் வீட்டிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும்போதெல்லாம் அவரது தாயார் அவர்களை பிடித்துவந்து கடுமையாக தாக்கி, சூடு வைத்துள்ளார்.

இந்நிலையில், அச்சிறுமிகளுள் ஒருத்தியின் கை மற்றும் முகத்தில் தீக்காயங்கள் இருந்ததை வீட்டின் அருகில் வசித்த ஒருவர் பார்த்து அதனை விசாரித்துள்ளார். அவரிடம் சிறுமிகள் அனைத்தையும் கூறியுள்ளனர். தங்களை துன்புறுத்தியதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாகவும் சகோதரர்கள் மிரட்டியதாகவும் சிறுமிகள் கூறியுள்ளனர்.

அதன்பிறகு, அந்நபர் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, சகோதரர்கள் இருவரும், உடந்தையாக இருந்த தாயாரும் கடந்த 2015-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் செவ்வாய் கிழமை தீர்ப்பளித்த மும்பை நீதிமன்றம், 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மூத்த சகோதரருக்கு (23) ஏழு ஆண்டுகளும், 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைய சகோதரருக்கு (21) 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக அவர்களது தாயாருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.