நாட்டின் பொருளாதரா சரிவிற்கான 2 காரணங்கள்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம்

பண மதிப்பு நீக்க நடவடிக்கையானது தொழில்நுட்ப ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ தேவையற்றது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்

பண மதிப்பிழக்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆகிய இரண்டு காரணங்களால் பொருளாதாரம் சரிந்துள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என மத்திய அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று திடீரென அதிரடியாக அறிவித்தது. தொலைக்காட்சி மூலம் அன்றைய தினம் இரவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஒரு சாரார் புகழ்ந்தாலும், பல்வேறு தரப்பினர் தங்களது கடும் எதிர்ப்பை இன்றளவும் தெரிவித்து வருகின்றனர்.

புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டாலும் சில்லறை பிரச்னைகள் உள்ளிட்டவைகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.

அதேபோல், அடுத்த அதிரடியாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தைக் மத்திய அரசு கொண்டு வந்தது. நாடாளுமன்ற மைய வளாகத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி அறிமுக விழாவில், இந்த வரிவிதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டமும் விமர்சனத்துக்குள்ளானது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்ததும் பாஜக-வினர் நாடாளுமன்ற வளாகத்தின் வாயிலில் வெடி வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். ஆனால், ஜிஎஸ்டி அறிமுக விழா நிகழ்ச்சியை காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

இந்நிலையில், பண மதிப்பிழக்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆகிய இரண்டு காரணங்களால் பொருளாதாரம் சரிந்துள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸினஸ் (ஐஎஸ்பி) ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் முன்னாள் பிரதமரும், பொருளாதார வல்லுனருமான மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அப்போது, பண மதிப்பு நீக்க நடவடிக்கை சரியான முடிவா என்று மாணவர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது என்று சில மாதங்களுக்கு முன்பே குறிப்பிட்டேன். பண மதிப்பு நீக்க நடவடிக்கையாலும் அதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி அமலாக்கத்தாலும் சரிவு ஏற்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பானது நீண்ட கால அடிப்படையில் பயனளிக்கும் விஷயமாகும். ஆனால் குறுகிய காலத்தில் இதில் சில பிரச்சினைகள் இருக்கும் அவற்றை சரி செய்தாக வேண்டும். இவ்விரண்டு காரணங்களாலேயே பொருளாதாரம் சரிந்துள்ளது என்றார்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையானது தொழில்நுட்ப ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ தேவையற்றது என தெரிவித்த மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைமையிலான அரசு பொறுப்பில் இருந்த போது நாட்டின் முதலீட்டு விகிதம் 35 சதவீதம் முதல் 37 சதவீதம் வரை இருந்தது. ஆனால் தற்போது இது 30 சதவீத அளவுக்குக் குறைந்துவிட்டது என்றும் சுட்டிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close