நாட்டையே உலுக்கிய சிறுமி ஆருஷி கொலை வழக்கு: விலகாத மர்மங்கள்

நாட்டையே உலுக்கிய 14 வயது சிறுமி ஆருஷி தல்வார் இரட்டை கொலை வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பை வழங்க உள்ளது.

நாட்டையே உலுக்கிய 14 வயது சிறுமி ஆருஷி தல்வார் கொலை வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பை வழங்க உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் ராஜேஷ் தல்வார். இவரது மனைவி நுப்பூர் தல்வார். பல் மருத்துவர்களான இத்தம்பதியரின் 14 வயது மகள் ஆருஷி தல்வார், கடந்த 2008-ஆம் ஆண்டு, மே மாதம் வீட்டின் படுக்கையறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர்களது வீட்டு வேலைக்காரர் ஜேம்ராஜ் மீது சந்தேகம் கொண்டனர். ஆனால், மறுநாளே ஹேம்ராஜூம் வீட்டின் மாடியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

நாட்டையே உலுக்கிய இந்த இரட்டை கொலை வழக்கில், மாநில காவல் துறையினர் திறம்பட செயல்படவில்லை என விமர்சனம் எழுந்த நிலையில், இந்த வழக்கு சிபிஐ போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணையில், ஆருஷி மற்றும் ஹேம்ராஜ் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருந்ததாக, ஆருஷியின் பெற்றோர் சந்தேகித்ததாகவும், அதனால் அவர்களே இந்த இரட்டை கொலைகளை செய்ததாகவும் சிபிஐ போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், வழக்கின் விசாரணை மெல்ல மெல்ல திசை மாறியது. ராஜேஷ் தல்வாரின் உதவியாளர் கிருஷ்ணா, வீட்டு வேலைக்காரர்கள் ராஜ்குமார் மற்றும் விஜய் ஆகியோர் மீது சிபிஐ-க்கு சந்தேகம் ஏற்பட்டது. மூவர் மீதும் மேற்கொள்ளப்பட்ட போதை மருந்து சோதனையின் அடிப்படையில், அவர்கள் ஆருஷியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் எனவும், அதற்கு சாட்சியமாக ஹேம்ராஜ் இருந்ததால் அவரையும் கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டது.

ஆனால், சாட்சியங்கள் வலுவாக இல்லாததால் மூவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, மற்றொரு சிபிஐ குழுவினரிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அந்த குழு, வழக்கில் வலுவான சாட்சியங்கள் இல்லாததால், அதனை முடித்துவைக்க பரிந்துரைத்தது. எனினும், ஆருஷியின் தந்தை ராஜேஷ் மீது சந்தேகம் இருந்தும் சாட்சியங்கள் இல்லை எனக்கூறி வழக்கை முடித்துவைக்க பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், சாட்சியங்கள் இல்லை எனக்கூறி வழக்கை முடித்துவைக்க முடியாது எனக்கூறிய சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ஆருஷியின் பெற்றோரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

தீவிர விசாரணையில் ஆருஷி தல்வாரின் பெற்றோர் ராஜேஷ் தல்வார் மற்றும் நுப்பூர் தல்வார் ஆகியோரும் இணைந்தே இரட்டை கொலைகளை செய்ததற்கான சாட்சியங்கள் கிடைத்தன.

இதையடுத்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதாகினர். இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, இருவரும் காஸியாபாத் தாஸ்னா சிறையில் அடைக்கப்பட்டனர். தங்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.

×Close
×Close