Advertisment

அகமது படேல் வெற்றிக்காக நள்ளிரவு வரை யுத்தம் : ஜெட்லி - ப.சிதம்பரம் நேரடி பலப்பரீட்சை

ப.சிதம்பரம் முன்வைத்த வாதங்களை தேர்தல் ஆணையம் சீரியஸாக பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் உருவானது. ஒருவேளை தேர்தல் ஆணையத்தில் நியாயம் கிடைக்காவிட்டால், உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகவும் காங்கிரஸ் தயாராக இருந்தது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
அகமது படேல் வெற்றிக்காக நள்ளிரவு வரை யுத்தம் :  ஜெட்லி - ப.சிதம்பரம் நேரடி பலப்பரீட்சை

டெல்லி அரசியல் இப்படியொரு மோதலை சந்தித்து நெடுநாள் இருக்கும். அகமது படேலின் வெற்றிக்காக இரு தேசிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அப்படியொரு யுத்தம் நடத்தியிருக்கிறார்கள்.

Advertisment

காங்கிரஸைப் பொறுத்தவரை, அகமது படேலின் வெற்றி என்பது சோனியாவின் கெளரவப் பிரச்னை! ராஜீவுக்கு நம்பகமானவராக இருந்து, சோனியாவின் அரசியல் மூளையாக உருவெடுத்தவர் அகமது படேல். குஜராத்தில் இருந்து 3 முறை லோக்சபாவுக்கும், 4 முறை ராஜ்யசபாவுக்கும் தேர்வானவர். அந்த மாநிலத்தில் இருந்து நாடாளுமன்றம் சென்றுகொண்டிருக்கும் இஸ்லாமிய சமூக பிரமுகர் இவர் மட்டுமே!

5-வது முறையாக அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்புவதில்தான் இவ்வளவு பிரச்னைகள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 8 (நேற்று) மாலை 5 மணிக்கு முடிந்தது. 5.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கையை தொடங்க குஜராத் தலைநகர் காந்திநகரில் அதிகாரிகள் தயாரானபோதுதான், காங்கிரஸ் பிரச்னையை எழுப்பியது. காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான போலாபாய் கோகல், ராகவிபாய் படேல் ஆகியோர் வாக்குப்பதிவு செய்த தங்களின் வாக்குச்சீட்டுகளை பா.ஜ.க. தேசிய தலைவரும், இந்தத் தேர்தலின் வேட்பாளர்களில் ஒருவருமான அமித்ஷாவிடம் காட்டியதாக புகார் செய்தனர்.

publive-image ப.சிதம்பரம்

இதற்கான வீடியோ ஆதாரத்தை சமர்ப்பித்த அவர்கள், தேர்தல் ஆணைய விதிப்படி அந்த இரு வாக்குகளையும் செல்லாத வாக்குகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். குஜராத் மாநில தேர்தல் அதிகாரியால் இதில் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. எனவே காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

முதலில் காங்கிரஸ் தரப்பில் ரந்தீப் சர்ஜ்வாலாவும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என்.சிங்கும் நேரில் வந்து தேர்தல் அதிகாரிகளிடம் பேசினர். ‘அங்கீகரிக்கப்பட்ட காங்கிரஸ் தேர்தல் ஏஜென்டை தவிர, வேறு யாரிடம் வாக்குச்சீட்டைக் காட்டினாலும் அது செல்லாத வாக்காகிவிடும்’ என அவர்கள் முறையிட்டனர். தலைமை தேர்தல் அதிகாரியான ஏ,கே.ஜோதியும், ராவத்தும் இவர்களின் மனுவை பெற்றுக்கொண்டு சட்ட நுணுக்கங்களை ஆய்வு செய்தனர்.

publive-image அருண் ஜெட்லி

பா.ஜ.க. தரப்பில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், தர்மேந்திரபிரதான், முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோரை அனுப்புவதாகத்தான் திட்டம் இருந்தது. ஆனால் திடீரென அதை மாற்றிக்கொண்டு மாலை 6.40 மணிக்கு மத்திய நிதி மற்றும் ராணுவ அமைச்சரான அருண் ஜெட்லியே நேரில் வந்தார். அவருடன் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அவரது ஜூனியர் வழக்கறிஞர் பி.பி.செளத்ரி, வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோரும் வருகை தந்தனர்.

ஒரு எம்.பி. தேர்தல் தொடர்பான சட்டவிதிகள் பிரச்னைக்கு சட்ட அமைச்சரே தேர்தல் ஆணையத்திற்கு வந்தது பரவலாக விவாதிக்கப்பட்டது. இது குறித்து ரவிசங்கர்பிரசாத்திடம் நிருபர்கள் கேட்டபோது, ‘நான் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவராக இங்கு வந்திருக்கிறேன்’ என்றார்.

தேர்தல் ஆணையர்களிடம் முன்வைத்த கோரிக்கை பற்றி ரவிசங்கர்பிரசாத்திடம் கேட்டபோது, ‘வாக்குப்பதிவின்போது எந்த ஆட்சேபணையையும் காங்கிரஸ் எழுப்பவில்லை. காலையில் ஜெயித்துவிடுவோம் என கூறிவந்த காங்கிரஸ் தலைவர்கள் இப்போது தோல்வி பயத்தில் இந்தப் பிரச்னையை எழுப்புகிறார்கள். நியாயமான முறையில் நடந்த ஒரு தேர்தலில், செலுத்தப்பட்ட வாக்கை ரத்து செய்ய முடியாது’ என்றார் அவர்.

publive-image காங்கிரஸ் கொண்டாட்டம்

ஜெட்லி வந்து சென்ற சிறிது நேரத்தில் காங்கிரஸ் கட்சியும் மூத்த தலைவரும் சட்ட நிபுணருமான ப.சிதம்பரம் தலைமையில் ஒரு படையை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது. சிதம்பரம் இரண்டு முன் உதாரணங்களை எடுத்துவைத்து தேர்தல் ஆணையர்களிடம் வாதாடினார்.

ஒன்று, கடந்த 2016 ஜூன் 11-ம் தேதி ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தல் நிகழ்வு! அங்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் வாக்கு செலுத்தப்பட்ட வாக்குச்சீட்டை, கட்சி ஏஜெண்ட் அல்லாத இன்னொருவரிடம் காட்டிவிட்டார். அந்த அடிப்படையில் அவரது வாக்கை செல்லாத வாக்காக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இன்னொரு முன் உதாரணம், கடந்த 2000-மாவது ஆண்டில் ராஜஸ்தானில் சுயேட்சை எம்.எல்.ஏ. ஒருவரின் வாக்குச்சீட்டை இன்னொருவர் பார்த்தார் என்கிறா புகாரின் அடிப்படையில் செல்லாத ஓட்டு ஆனது. ‘ஹரியானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் வாக்கு செல்லாமல் ஆனதால், பயன் அடைந்தது பா.ஜ.க.தான். இப்போது அவர்களுக்கு எதிராக இருக்கிறது என்பதற்காக ஒரே ஆண்டில் சட்டமும் மாறிவிடுமா?’ என கேள்வி எழுப்பினார் ப.சிதம்பரம்.

‘பா.ஜ.க.வுக்கு வெற்றி பெறும் நம்பிக்கை இருந்தால், அது சட்டப்படிதான் நடக்கவேண்டும். ஏஜெண்ட் தவிர, வேறு யாரிடமும் வாக்குச்சீட்டை காண்பிக்க கூடாது என சட்டம் தெளிவாக இருக்கிறது’ என கூறிவிட்டுச் சென்றார் ப.சி.! அடுத்த சிறிது நேரத்தில் மீண்டும் ரவிசங்கர்பிரசாத், முக்தர் அப்பாஸ் நக்வி உள்ளிட்ட பா.ஜ.க. குழுவினர் மீண்டும் தேர்தல் ஆணையர்களை சந்தித்தனர். அப்போது நிருபர்களிடம் பேசிய பிரசாத், ‘காங்கிரஸ் தவறான முன்னுதாரணங்களை வைக்கிறது. தேர்தல் ஆணையம் மீது அவர்கள் அழுத்தம் செலுத்த முடியாது.’ என கர்ஜித்தார்.

மத்திய அமைச்சர்களே திரும்பவும் தேர்தல் ஆணையத்திற்கு வந்தது குறித்து நிருபர்கள் கேட்டபோது, ‘காங்கிரஸ் குழு மூன்றாவது முறையாக தேர்தல் ஆணையத்திற்கு வந்தால் நாங்களும் வருவோம்’ என்றார் பிரசாத். அவர் அப்படி கூறிச் சென்ற சிறிது நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் ரந்தீப் சர்ஜ்வாலாவும், ஆர்.என்.பி.சிங்கும் மீண்டும் வந்து தேர்தல் அதிகாரிகளை இரவு 9 மணியளவில் சந்தித்தனர். ஆனால் இதன்பிறகு எந்தக் கட்சியின் குழுவையும் சந்திப்பதில்லை என்கிற முடிவுக்கு தேர்தல் ஆணையர்கள் வந்தனர்.

ப.சிதம்பரம் முன்வைத்த வாதங்களை தேர்தல் ஆணையம் சீரியஸாக பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் உருவானது. ஒருவேளை தேர்தல் ஆணையத்தில் நியாயம் கிடைக்காவிட்டால், உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகவும் காங்கிரஸ் தயாராக இருந்தது. 8-ம் தேதி (நேற்று) நள்ளிரவு 11.50 மணியளவில் காங்கிரஸ் கோரிக்கையை ஏற்று இரு எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளையும் செல்லாத வாக்குகளாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து அகமது படேல் வெற்றிபெறத் தேவையான வாக்குகளின் எண்ணிக்கை 45-ல் இருந்து 44 ஆக குறைந்தது. சரியாக 44 வாக்குகளைப் பெற்று மயிரிழையில் தப்பினார் அகமது படேல். பா.ஜ.க. வேட்பாளர்களான அமித்ஷாவும், ஸ்மிருதியும் தலா 46 வாக்குகளைப் பெற்றனர். முன்னாள் காங்கிரஸ் தலைவரும், பா.ஜ.க.வின் 3-வது வேட்பாளருமான பல்வந்த்சிங் ராஜ்புத் 38 வாக்குகளுடன் தோல்வியை தழுவினார்.

2014-ல் பா.ஜ.க.விடம் மத்திய ஆட்சியை இழந்த பிறகு காங்கிரஸ் கட்சி பெரும் போராட்டம் நடத்தி ஈட்டியிருக்கும் வெற்றியாக இதை கூறலாம். தேர்தல் முடிவுக்கு பிறகு கருத்து தெரிவித்த ப.சிதம்பரம், ‘சில எம்.எல்.ஏ.க்களை வேண்டுமானால், பா.ஜ.க. விலைக்கு வாங்கலாம். காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் உடைக்க முடியாது’ என்றார். அகமது படேல் தனது டுவிட்டில், ‘சத்தியமேவ ஜெயதே’ என குறிப்பிட்டார்.

Sonia Gandhi P Chidambaram Ahmed Patel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment