போலி அடையாள விவரங்கள் மூலம் ஆதார், பான் கார்டு பெற்ற பாகிஸ்தான் உளவாளி!

இந்தியாவில் இருந்து ரகசிய தகவல்களை அவர் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்

பாகிஸ்தானைச் சேர்ந்த ஹசான்-ஹல்-ஹக் என்ற உளவாளி இந்தியாவில் பதுங்கியிருக்க போலி அடையாள விவரங்களை அளித்து ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு பெற்றதாக தெரிவித்துள்ளார்.

ஜலந்தர் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் ஹசான் சிக்கினார். அப்போது தான் ஒரு ஆஸ்திரேலிய குடிமகன் என போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால், போலீசார் செய்த குறுக்கு விசாரணையில் அவர் உண்மையில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மூலம், இந்தியாவில் இருந்து ரகசியங்களை திருட அவர் அனுப்பப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஐந்து வருடங்களுக்கு முன் அவர் ஒரு இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவரையும் அவர் திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். பலமுறை தனது இந்திய மனைவியை அவர் பாகிஸ்தான் அழைத்துச் சென்றிருக்கிறார்.

பாகிஸ்தானின் சார்ஜா கிராமத்தைச் சேர்ந்தவரான ஹசான், போலி அடையாள அட்டைகளை உருவாக்கிக் கொண்டு, இந்தியன் என்று கூறிக் கொண்டு இந்தியாவில் உலாவியிருக்கிறார். சலேம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவன் என்று கூறி, ஆதார் மற்றும் பான் கார்டு பெற்றிருக்கிறார். அதேபோல், அலிபூரில் இடம் வாங்கி வீடு ஒன்றும் கட்டியிருக்கிறார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து ரகசிய தகவல்களை அவர் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

×Close
×Close