Advertisment

கோரக்பூர் சோகம்: ரத்தத்திற்கும், மருந்துக்கும் பரிதவித்த பெற்றோர்

கோரக்பூர் மருத்துவமனையில், ரத்தத்திற்கும், மருந்துக்கும் பெற்றோர்கள் அலைய விடப்பட்ட அவலம் கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
கோரக்பூர் சோகம்: ரத்தத்திற்கும், மருந்துக்கும் பரிதவித்த பெற்றோர்

தங்கள் கண் முன்னே தங்களது பச்சிளம் குழந்தைகள் கண்கள் சொருகி உயிரிழந்ததைக் காணும் நிலைக்கு தள்ளப்பட்ட பெற்றோர்கள், கோரக்பூர் மருத்துவமனையில் ரத்தத்திற்கும், மருந்துக்கும் அலைய விடப்பட்ட அவலம் கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசுக்கு சொந்தமான பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குழந்தைகள் சுமார் 60 பேர் மூளை வீக்கம் ஏற்பட்டு அடுத்தடுத்த நாட்களில் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதையடுத்து 12-ம் தேதியன்று 11 குழந்தைகளும், 13-ம் தேதி (நேற்று) ஒரு குழந்தையும் மூளை வீக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளன. இதனால், குழந்தைகளின் உயிரிழப்பு எண்ணிக்கை 72-ஆக உயர்ந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவமனைக்கு பிராண வாயு (ஆக்சிஜன்) சிலிண்டர் விநியோகித்து வந்த தனியார் நிறுவனம் தனது நிலுவைத் தொகைக்காக ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்தியதே குழந்தைகள் அடுத்தடுத்து பலியானதற்குக் காரணம் எனக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் உயிரிழப்புக்கு ஆளும் பாஜக பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன. ஆனால், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறது என குற்றம் சாட்டியுள்ள அம்மாநில பாஜக அரசு, இதுகுறித்து நீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் கல்லூரி முதல்வரை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், குழந்தைகளை தங்களது கண்முன்னே பறிகொடுத்த பெற்றோர்கள், அடிப்படை தேவையான பஞ்சு, ஊசி, மருந்து, ரத்தம் உள்ளிட்டவற்றுக்கு கூட மருத்துவமனையில் அங்கும் இங்கும் அலைய விடப்பட்ட அவலச் செய்தி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை தருவதற்கு ரூ.7,000 இல்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனையில் இருந்து கோரக்பூரில் உள்ள அரசுக்கு சொந்தமான பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனது இரட்டை குழந்தைகளை அனுமதித்து, அவர்கள் இருவரையும் பலி கொடுத்த பிரம்தேவ் எனும் விவசாயி தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தை விளக்கியுள்ளார்.

அவர் கூறியதாவது: மருத்துவமனையில் அனுமதித்து நான்கு நாட்களில், பிறந்து 10 நாட்களே ஆன நிலையில், இரட்டையர்களான எனது மகனையும், மகளையும் பறி கொடுத்துள்ளேன். மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஆக்சிஜன் அளவை காட்டும் கருவியை கடந்த 7-ம் தேதி தான் முதன்முதலில் பார்த்தேன். அதில், சாதாரண, உயர் மற்றும் குறைவு என மூன்று அளவுகள் இருந்தன. அன்றைய தினத்தில் அது குறைவான அளவையே காட்டிக் கொண்டிருந்தது. செவிலியர்கள், கையால் இயக்கும் கருவியை கொண்டு சுவாச சிகிச்சை அளித்தனர். ஆனால், அதற்கடுத்த நாள் தான் எங்களுக்கு தெரிந்தது ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று. அன்று, நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை நான் கண்டேன். ஆனால், எந்த பெற்றோரும் எதுவும் கேட்கவில்லை. உதவியற்ற நிலையில் நாங்கள் இருந்தோம். அதேசமயம், ஆக்சிஜன் அளவு குறித்து செவிலியர்களிடம் நான் கேட்க முற்பட்டேன். ஆனால், அதற்கு அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.

ஆகஸ்ட் 8-ம் தேதி 30 மி.லி மற்றும் 9-ம் தேதி 40 மி.லி ரத்தம் தேவை என சொன்னார்கள். ரத்த வங்கிக்கு சென்று நான் ரத்த தானம் செய்து அவர்கள் கேட்ட ரத்தத்தை வாங்கி வந்தேன். அப்போதும், கூட அவர்களிடம் கேட்டேன் என்ன நடக்கிறது என்று. ஆனால், அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.தொடர்ந்து, ஆகஸ்ட் 9-ம் தேதி எனது பச்சிளம் மகன் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். எந்த ஒரு மருத்துவரும் எனது மகன் உயிரிழப்புக்கான காரணத்தை விளக்கவில்லை என்றார் கண்ணீர் மல்க.

ஆகஸ்ட் 9-ம் தேதி மட்டும் ஒன்பது குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிவித்தது என்பது கவனிக்கத்தக்கது. பிரம்தேவ் மற்றும் அவரது மனைவியின் சோகம் இத்துடன் முடிந்து விடவில்லை. உயிரிழந்த தங்களது மகனை கையில் வைத்துக் கொண்டு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில், உயிருக்கு போராடிய, தங்களது பச்சிளம் மகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது குழந்தையின் வாயில் இருந்து ரத்தம் ஊற்றுவதை பார்த்து கதறியதாக கூறிய அவர்கள்,"மருத்துவர் ஒருவரும், செவிலியர் ஒருவரும் தான் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு முழுவதும் சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லை. கையால் இயக்கும் கருவியை கொண்டு சுவாச சிகிச்சை அளித்தனர்" என சாடியுள்ளனர்.

ஆகஸ்ட் 10-ம் தேதி அதிகாலையில் தங்களது பச்சிளம் மகள் உயிரிழந்து விட்டாள் என மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்த அவர்கள், எங்களுக்கு இலவச மருந்துகள் எதுவும் தரவில்லை. போதுமான மருத்துவர்கள் இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரம்தேவின் மகள் உயிரிழந்த அரை மணி நேரத்துக்கு முன்னதாக, தனது நான்கு வயது மகனை பகதூர் என்பவர் பறிகொடுத்துள்ளார். அவரது மனைவி நந்தினி கூறும்போது, மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் ஆக்சிஜன் இல்லாமை உள்ளிட்ட காரணங்கள் தான் தனது மகனை கொன்று விட்டது என்றார் கண்ணீருடன். மேலும், ஆகஸ்ட் 9-ம் தேதியன்று எங்களது மகனை அனுமதிக்க மருத்துவமனைக்கு வந்தோம். அந்த சமயத்தில், எந்த ஒரு மருத்துவரும் எந்த ஒரு குழந்தையையும் பார்க்கவில்லை. முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகையையொட்டி அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர். எனது மகனுக்கு சிகிச்சை அளிக்குமாறு கெஞ்சினேன். ஆனால், ஒருவரும் கண்டு கொள்ளவில்லை என்றும் நந்தினி வேதனை தெரிவித்துள்ளார்.

publive-image

தனது இரட்டைக் குழந்தைகளை பறிகொடுத்த பிரம்தேவ், மருத்துவமனை வளாகத்தில் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னரே, அவரது மகனுடைய இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதில், திடீரென இதய செயல்பாடு தோல்வியடைந்ததன் காரணமாக ஏற்பட்ட சுவாச செயலிழப்பு தான் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. ஆனால், அவரது மகளுடைய இறப்பு சான்றிதழ் இதுவரை அவருக்கு கிடைக்கவில்லை. அதேபோல், பிரேதப்பரிசோதனை செய்யாமல் உடல்கள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரத்தத்திற்கும், மருந்துக்கும், பஞ்சுக்கும் அலைந்த பெற்றோர்கள், பிஞ்சுக் குழந்தைகளை தூக்கிக் கொண்டு தற்போது பிரேதப் பரிசோதனைக்கு அங்குமிங்கும் ஓடி வரும் அவலக் காட்சிகள் மருத்துவமனையில் அரங்கேறி வருகிறது.

"நான் எனது குழந்தைகளின் உடல்களை எளிதில் வெளியே எடுக்கும்படி தான் புதைத்துள்ளேன். அதற்கு அதிகாரிகள் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். உண்மை வெளியே வர வேண்டும்" என பிரம்தேவ் தெரிவித்துள்ளார்.

Gorakhpur Encephalitis
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment