சபரிமலை கோவிலில் நுழைய பெண்களுக்கு அனுமதிகோரிய வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக்கோரிய வழக்கை, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக்கோரிய வழக்கை, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆனால், இக்கோவிலுக்குள் நுழைய பருவமடைந்த பெண்களுக்கு அனுமதியில்லை. பருவமடையாத சிறுமிகளும், மாதவிடாய் பருவத்தை தாண்டிய பெண்கள் மட்டுமே சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நுழைய அனுமதியில்லை.

இந்த தடை அரசியலமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனவும், பெண்களின் சம உரிமையையும் மறுப்பதாக கூறி, அனைத்து வயதிலான பெண்களையும் அக்கோவிலில் அனுமடிக்கக்கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்சநீதி பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண்களை சபரிமலை கோவிலில் அனுமதிப்பதில் என்ன தவறு என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசியலமைப்பு சட்டத்தில் ஆண், பெண் இருபாலரும் சமம் எனவும் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், திருவிதாங்கூர் தேவஸ்தானம் மற்றும் கேரள அரசை இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அப்போது, கேரள அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், கோவில் ஆச்சாரங்களில் தலையிடுவதில் விரும்பவில்லை எனவும், ஒருவரது மதம் சார்ந்த நம்பிக்கைகளில் குறுக்கிடுவது தவறு எனவும் தெரிவித்திருந்தது. தேவஸ்தானம் அளித்த பதில் மனுவில், காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கத்தை மாற்ற முடியாது என தெரிவித்தது.

இதனிடையே, கேரளாவில் 2007-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த அப்போதைய இடதுசாரிய அரசு, சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க ஆட்சேபனை இல்லை என தெரிவித்தது. ஆனால், அதன்பிறகு ஆட்சியை பிடித்த காங்கிரஸ் அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள இடதுசாரி அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் பானுமதி, அஷோக் பூஷன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

×Close
×Close