Advertisment

வட இந்தியாவில் கனமழை... வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள் : மீட்பு பணிகள் தீவிரம்

கனமழை காரணமாக டெல்லியில் உள்ள யமுனை உட்பட வட இந்தியாவில் பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. துனாக் பகுதியில் மேகம் வெடித்ததால் மண்டியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Flood In North India

Tamil News Updates

வட இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் பெரும் அழிவு ஏற்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் மேலும் மழை நீடிக்கும் என்பதால், ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை மீட்பு பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

Advertisment

இந்தியாவின் வட மாநிலங்களாக ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இடைவிடாத மழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளதால், ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை மீட்புக் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும் இந்த மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தை சமாளிக்க மொத்தம் 39 தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இதில் பஞ்சாபில் 14 குழுக்களும், இமாச்சலப் பிரதேசத்தில் 12 குழுக்களும், உத்தரகாண்டில் 8 குழுக்கள் மற்றும் ஹரியானாவில் 5 குழுக்கள் என தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாபில், கனமழையால் வெள்ளத்தில் தனியார் பல்கலைக்கழகம் மூழ்கிய நிலையில், அங்கிருந்த 910 மாணவர்கள் மற்றும் 50 பேரை ராணுவம் மீட்டுள்ளது.

North India Flood Delhi

புது டெல்லியில் கனமழை காரணமாக யமுனா பஜார் ஹனுமான் மந்திர் அருகே தண்ணீர் தேங்கிய சாலை வழியாக மக்கள் நடந்து செல்கின்றனர்.

இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்ததை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசி, நிலைமையை ஆய்வு செய்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தங்களது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "உள்ளூர் நிர்வாகங்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்ய உழைத்து வருகின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக டெல்லியில் உள்ள யமுனை உட்பட வட இந்தியாவில் பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்பகுதி முழுவதும் உள்ள நகரங்கள், பல சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் என அனைத்து பகுதிகளும் முழங்கால் அளவு நீரில் மூழ்கியுள்ளன. மலை மாநிலமான ஹிமாச்சலப் பிரதேசம் பருவமழையின் சீற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக இங்கு இதுவரை சுமார் 16 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், பல முக்கியமான நெடுஞ்சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக மண்டி, பியாஸ் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று (ஜூலை 10) இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் நடந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். காலை மழை தொடர்ந்து பெய்ததால், சிம்லா-கல்கா நெடுஞ்சாலை போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது. துனாக்கில் மேகம் வெடித்ததால் மண்டியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இது தொடர்பாக காவல்துறையின் சார்பில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், குப்பைகள், பிளவுபட்ட மரக்கிளைகள் மற்றும் சேற்றுடன் சாலைகளில் தண்ணீர் ஓடுவதைக் காணலாம்.

Flood In North India

சோலன் மாவட்டத்தில் உள்ள பர்வானூவில் கனமழை பெய்யும் போது, ​​திடீர் வெள்ளத்தின் போது வாகனங்கள் அடித்துச் செல்லப்படுகின்றன.

இது குறித்து எஸ்எஸ்பி மண்டி சௌமியா சாம்பசிவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் நிலைமை மோசமாக உள்ளது. எங்கள் குழு தயார் நிலையில் உள்ளது, பியாஸ் நதியை ஒட்டிய பகுதிகளை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம் என்று கூறியுள்ளர். நேற்று காலை, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் "அதிக கனமழை"க்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வெளியிட்டது. கடந்த இரண்டு நாட்களில் மாநிலத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 16-17 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.

சுற்றுலா நகரமான மணாலியில் சிக்கித் தவித்த 20 பேர் மீட்கப்பட்டனர், ஆனால் 200 க்கும் மேற்பட்டோர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான சிம்லா-கல்கா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர், அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே கனமழை காரணமாக யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் டெல்லியில் ஆய்வு கூட்டம் நடத்தினார். தலைநகரில் வழக்கமாக ஜூலை முழுவதையும் விட வார இறுதியில் அதிக மழை பெய்துள்ளது. இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திங்கள்கிழமை மூத்த அதிகாரிகளுடன் யமுனை நதியின் நீர்மட்டம் அதிகரித்து வருவது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வெள்ள நிலைமை ஏற்படாது என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன," என்று அவர் கூறியுள்ளார்.

Yamuna River

கனமழைக்கு பிறகு யமுனை நதியின் நீர்மட்டத்தை டெல்லி கல்வி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி ஆய்வு செய்தார்.

ஆனாலும் யமுனை நதியைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி நிதியின் நீர்மட்டம் 206 மீட்டர் அளவைக் கடந்தவுடன் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விபத்துகளைத் தடுக்க டெல்லி சாலைகளில் உள்ள பள்ளங்கள் கற்களால் நிரப்பப்படும் என்றும், குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் நீர்நிலை பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சாலைகள் குண்டும் குழியுமான சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

Gangai River

ஹரித்வாரில், புனித மாதமான ஷ்ராவணத்தின் போது, ​​கங்கை நதியில் மூழ்கிய கன்வாரியாக்களை மாநில பேரிடர் மீட்பு பணியாளர்கள் மீட்டனர்.

சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக கட்டட இடிபாடுகள் தொடர்பான விபத்துகளைத் தவிர்க்க, டெல்லியில் உள்ள மிகப் பழமையான மற்றும் ஆபத்தான கட்டிடங்களை உடனடியாக கணக்கெடுக்க உத்தரவிடுமாறு டெல்லி மாநகராட்சியை (எம்சிடி) பாஜக கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோல் உத்தரகாண்டில், கங்கை அபாயக் கட்டத்தை நெருங்குகிறது, நிலச்சரிவுகள் காரணமாக முக்கிய நெடுஞ்சாலைகள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கடந்த ஞாயிறு (ஜூலை 9) அன்று 6 பேர் உயிரிழந்தனர். அடுத்த இரண்டு நாட்களில் அதிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கங்கை உட்பட அனைத்து முக்கிய நதிகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், மலை மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு ரெட்" அலர்ட் விடுத்துள்ளது. வானிலை காரணமாக பல சாலைகள் தடைபட்டுள்ளதால் ஆபத்தில் உள்ளதால், பயணிகள் மலைகள் ஏற்றத்தை தவிர்க்குமாறு உத்தரகாண்ட் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் தேசிய நெடுஞ்சாலை (NH) 9 திங்கள்கிழமை காலை தனக்பூர்-பித்தோராகர் வழித்தடத்தில் சில இடங்களில் தடை செய்யப்பட்டது,

நிலச்சரிவு காரணமாக கங்கோத்ரி நெடுஞ்சாலை இரண்டு இடங்களில் தடைபட்டுள்ளது, இதன் காரணமாக சில கன்வார் யாத்ரா யாத்ரீகர்கள் சிக்கித் தவிக்கின்றனர். பண்டார்கோட்டில் பெரும் குப்பைகள் விழுந்துள்ளதால், சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை காரணமாக மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நேரத்தில் பயணிகள் மிகவும் அவசியம் இல்லாத நிலையில், மலைகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேவையில்லாமல் பயணம் செய்யாதீர்கள், பாதுகாப்பான இடத்தில் இருங்கள். எந்த உதவிக்கும் 112 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்” என்று உத்தரகாண்ட் டிஜிபி அசோக் குமார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில், உத்திரபிரதேசம் முழுவதும், மழை தொடர்பான சம்பவங்களில், 34 பேர் பலியாகி உள்ளனர். இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநிலத்தில் கனமழை பெய்ததால் மின்னல், நீரில் மூழ்குதல் மற்றும் பிற காரணங்களால் இறப்புகள் நிகழ்ந்தன. மாநில நிவாரண ஆணையர் அலுவலகம் வழங்கிய தகவலின்படி, மின்னல் காரணமாக 17 பேர் இறந்தனர், 12 பேர் நீரில் மூழ்கி இறந்தனர் மற்றும் 5 பேர் மழை காரணமாக இறந்துள்ளனர்

உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிவாரணத் தொகையை உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் வட இந்தியாவின் பிற மாநிலங்களில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட உயிர் இழப்புகள் வருத்தமளிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் நிவாரண நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சி தொண்டர்களும் உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் நிவாரணப் பணிகளில் அதிகாரிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த இயற்கை பேரிடரின் கடினமான சவால்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும், ”என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கனமழையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து கூடுதல் நிவாரணம் வழங்குமாறு மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேட்டுக் கொண்டார். இதனிடையே நேற்று (ஜூலை 10) மேற்கு இமயமலைப் பகுதி, பஞ்சாப், ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழையுடன் லேசான/மிதமான பரவலான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பின்படி, மேற்கு மத்தியப் பிரதேசத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது சண்டிகரில் நேற்று முன்தினம் (ஜூலை 9) காலை 8.30 மணி வரை 302.2 மிமீ மழை பதிவாகியுள்ளது, இது நகரத்தின் வரலாறு காணாத மழையாகும். "சண்டிகர் வாணிலை ஆய்வு மையம் கடந்த 2009 இல் அமைக்கப்பட்டது, அதற்கு முன்னர், சண்டிகர் விமானப்படை கண்காணிப்பகத்திலிருந்தே புள்ளிவிவரங்கள் எடுக்கப்பட்டன. விமானப்படை கண்காணிப்பகம் கூட அதிகபட்சமாக 286.0 மிமீ வரை சென்றுள்ளது, ஆனால் தற்போதைய புள்ளிவிவரங்களைப் போல இல்லை, ”என்று MET துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Uttarkhand Flood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment