ஆருஷி கொலை வழக்கு: பெற்றோரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு!

ஆருஷி கொலை வழக்கில், போதிய ஆதாரம் இல்லாத காரணத்தினால் அவரது பெற்றோரை விடுதலை செய்து அலகாபாத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது

ஆருஷி கொலை வழக்கில், போதிய ஆதாரம் இல்லாத காரணத்தினால் அவரது பெற்றோரை விடுதலை செய்து அலகாபாத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கவுதம புத்தநகர் மாவட்டம் நொய்டா பகுதியைச் சேர்ந்த டாக்டர் தம்பதியினர் ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் ஆகியோரது 14- வயது மகள் ஆருஷி, கடந்த 2008-ஆம் ஆண்டு வீட்டில் உள்ள தனது அறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்த வீட்டின் வேலைக்காரர் ஹேமராஜ்(45) தான் இக்கொலையை செய்திருக்கக் கூடும் என போலீசார் சந்தேகித்தனர்.

ஆனால், திடீர் திருப்பமாக மறுதினமே வீட்டின் மொட்டை மாடியில் ஹேமராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர்களிடையே முறையற்ற உறவு இருப்பதாக சந்தேகித்து ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வர், நுபுர் தல்வார் ஆகியோர் கூட்டாக சேர்ந்து இருவரையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

நாட்டையே உலுக்கிய இந்த இரட்டை கொலை வழக்கினை சி.பி.ஐ. விசாரணை செய்தது. இதில் கொலையை திட்டமிட்டு செய்ததாக ஆருஷியின் தந்தையான பல் டாக்டர் ராஜேஷ் தல்வார், தாயார் நுபுர் தல்வார் ஆகியோருக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் 2013-ம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. இருவரும் காசியாபாத் நகரில் உள்ள தஸானா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தண்டனையை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் அப்பீல் வழக்கின் விசாரணையில் அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு இன்று வெளியாகிறது. கடந்த செப்., 7-ஆம் தேதி வெளியாகவிருந்த தீர்ப்பை, நீதிபதிகள் நாராயணா மற்றும் ஏகே மிஷ்ரா அடங்கிய பென்ச் இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி, இன்று ஆருஷியின் பெற்றோரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இதுகுறித்த அப்டேட்ஸ் இங்கே,

மதியம் 3:00 – ஆருஷியின் கொலை வழக்கில் இருந்து அவரது பெற்றோரை விடுதலை செய்து அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆருஷியை யார் கொலை செய்தது என்பதில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அதை பெற்றோருக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்துள்ளது நீதிமன்றம். இதனால், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, அலகாபாத் நீதிமன்றம் திருத்தி எழுதியுள்ளது. இதனால், ஆருஷியை கொலை செய்தது யார் என்ற மர்மம் இன்னும் நீடிக்கிறது.

மதியம் 2:40 – நீதிமன்ற அறைக்கு வந்தனர் நீதிபதிகள்.

மதியம் 1: 30 – ஆருஷி கழுத்தறுக்கப்பட்டு இந்த மெத்தையில் தான் இறந்து கிடந்தார். தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 10:50 – 2013 நவம்பர் மாதம் 25-ஆம் தேதி, இரட்டை கொலைகளையும் செய்தது, ஆதாரங்களை அழித்தது ஆருஷியின் பெற்றோர்கள் தான் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷியாம் லால் தீர்ப்பளித்தார். மேலும் அவர் தனது தீர்ப்பில், “இயற்கை நியதியின்படி, பெற்றோர்கள் தான் தங்கள் குழந்தைக்கு மிகச் சிறந்த பாதுகாவலர்கள். ஆனால், இவர் அந்த இயற்கைக்கு முரணாக, தங்களின் சந்ததியை தாங்களே அழித்திருக்கின்றனர்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

காலை 10:40  மேலும் படிக்க – ஆருஷி மரணத்தின் விலகாத மர்மங்கள்

காலை 10:10 – முதல்வர் மாயாவதி இந்த வழக்கை, போலீஸிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றினார். சிபிஐ விசாரணையில், ஆருஷியின் பெற்றோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அதன்பின், 2010-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சிபிஐ சமர்பித்த அறிக்கையில், “மற்ற வேலைக்காரர்களுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை. அதற்கு போதிய ஆதாரங்களை சேகரிக்க முடியவில்லை. ஆனால், ஆருஷி தந்தை ராஜேஷ் தான் முக்கியமான குற்றவாளி” என்று தெரிவித்தது.

காலை 9:30 – ஆருஷி கொலை செய்யப்பட்டு ஆறு நாட்கள் கழித்து, ஆருஷியின் பெற்றோர் மீது போலீசார் சந்தேகப்பட்டனர். மகள் ஆருஷியும், வேலைக்காரர் ஹேமராஜும் ‘தகாத முறையில்’ இருந்ததை நேரில் பார்த்த தந்தை ராஜேஷ் மகளை அங்கேயே கொலை செய்தார் என போலீசார் குறிப்பிட்டுள்ளனர். எனினும், இதை நிரூபிக்கும் வகையில் எந்தவொரு தடயவியல் அல்லது பொருள் ஆதாரங்களை போலீஸ் வழங்கவில்லை.

 

×Close
×Close