Advertisment

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேரின் தூக்குதண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!

2002-ஆம் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேரின் தூக்குதண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!

கடந்த 2002-ஆம் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோத்ரா ரயில் நிலையம் அருகே, கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி சபர்மதி ரயிலின் எஸ்-6 பெட்டி தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு கடந்த 15 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின்னர் நடந்த குஜராத் கலவரம் தொடர்பான வழக்கும், தனியே பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில், ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. 31 பேர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 63 பேர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டனர். குற்றம் சுமத்தப்பட்ட 31 பேரில் 11 பேருக்கு மரணதண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டன.

இதில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பலரும் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீடு மீதான விசாரணை இன்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அதன் முடிவில், 11 பேரின் மரண தண்டனையையும் ஆயுள் தண்டனையாகக் குறைத்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 20 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி ரயில் எரிக்கப்பட்ட போது அதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குஜராத் மாநில அரசு தலா ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். மாநில அரசு சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறியதே இச்சம்பவம் நடக்க முக்கிய காரணம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது முக்கியத்துவம் பெறுகிறது. இத்தீர்ப்பின் பிரதிபலிப்பு குஜராத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றே கூறப்படுகிறது.

Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment