19 வயது இளம்பெண் தற்கொலை: இறப்புக்கு முன் வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்த சோக வரிகள்

தெலங்கானா மாநிலத்தில், தன் தாய் திட்டியதால் மனமுடைந்து 19 வயது இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில், தன் தாய் திட்டியதால் மனமுடைந்து 19 வயது இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்குமுன்பு, வாட்ஸ் ஆப்பில் தன்னுடைய வாழ்க்கை மிகவும் மோசமாக உள்ளது என நிலைத்தகவலை பதிவுசெய்திருக்கிறார்.

தெலங்கானா மாநிலம் துண்டிகலை சேர்ந்தவர் சாய் துர்கா (வயது 19). பொறியியல் கல்லூரியொன்றில் இறுதியாண்டு மாணவியான இவர், தன் தாய், சகோதரர் ஆகியோருடன் அவருடைய மாமா வீட்டில் வசித்து வருகிறார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக சாய்துர்காவின் தந்தை இவர்களை தனித்துவிட்டு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை சாய்துர்காவுக்கும் அவரது அம்மாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தங்க சங்கிலி மற்றும் மோதிரம் தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதால், அவருடைய அம்மா சாய்துர்காவை திட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அன்று மதியம் வீட்டில் யாருமில்லாதபோது சாய் துர்கா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதன்பின், உறவினர்கள் வீடு திரும்பியபோது சாய்துர்கா தூக்கில் தொங்கியபடி இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து துண்டிகல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பின், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குடும்ப பிரச்சனைகள் காரணமாகவே சாய்துர்கா தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சாய்துர்கா செல்ஃபோன் மற்றும் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழிப்பதாக அவருடைய தாய் அடிக்கடி கண்டித்து வந்ததாகவும், சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் ‘தற்கொலை செய்துகொள்வேன்”, என சாய்துர்கா சொல்லி வந்ததாகவும் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

போலீஸார் சாய்துர்காவின் செல்ஃபோனை கைப்பற்றி, அவருடைய சமூக வலைத்தள கணக்குகளை ஆராய்ந்து வருகின்றனர். அதில், சாய் துர்கா தான் இறப்பதற்கு முன்பாக வாட்ஸ் ஆப்பில் நிலைத்தகவலாக பதிவு செய்ததாவது, “சமீபகாலமாக நான் மகிழ்ச்சியாக இருக்க அஞ்சுகிறேன். நான் மகிழ்ச்சியாக இருப்பது ஏன் பலருக்கு பிடிப்பதில்லை என எனக்கு தெரியவில்லை. என் வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவமும் மிக மோசமானதாக உள்ளது” என குறிப்பிட்டிருக்கிறார்.

×Close
×Close