Advertisment

கதையின்றி தடுமாறும் புதிய தலைமுறை இயக்குனர்கள்

கதையும், திரைக்கதையும் இயக்கத்திலிருந்து மாறுபட்டது, கதை, திரைக்கதை என்று வேறு ஒருவரின் பெயரைப் போட்டால் களங்கம் ஏதும் நேர்ந்துவிடாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil new directors

ஜான் பாபுராஜ்

Advertisment

பிரெஞ்சு சினிமாவில் பிரான்ஸ்வோ த்ரூபோ, கொடார்ட், சாப்ரில், எரிக் ரோமர், ஜாக்குவஸ் ரிவிட்டி ஆகிய இயக்குனர்கள் பிரெஞ்சு சினிமாவின் கதையில், கதை சொல்லும் முறையில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தினர். உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களை அது பாதித்தது. அதனை பிரெஞ்சு சினிமாவின் புதிய அலை என்று அடையாளப்படுத்தினர். மேலே உள்ள 5 இயக்குனர்களும் பிரெஞ்சு புதிய அலை சினிமாவை கட்டமைத்தவர்களாக நினைவுகூரப்படுகிறார்கள்.

அனைத்து மொழி சினிமாவிலும் இதுபோன்ற பாய்ச்சல் சின்ன அளவிலோ இல்லை பெரிய அளவிலோ நடைபெறும். தமிழில் 2010 க்குப் பிறகு அப்படியொரு சிறிய பாய்ச்சலை புதிய இளைஞர்கள் சிலர் நிகழ்த்தினர். அவர்கள் இயக்கிய ஆரண்ய காண்டம், பீட்சா, சூது கவ்வும், மூடர் கூடம், மௌனகுரு, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்கள் தமிழ் சினிமாவின் கதை சொல்லல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தின. அந்த இயக்குனர்களில் பெரும்பாலானவர்கள் இரண்டாவது மூன்றாவது படங்களை எடுக்கவே திணறிப்போயினர்.

100 க்கும் மேல் படங்கள் இயக்கிய ராம.நாராயணனைப் போன்றவர்களை தமிழ் சினிமா அனுபவப்பட்டிருக்கிறது. அவர் அளவுக்கு வேண்டாம். இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் தருவதற்குக்கூட இந்த புதிய இளைஞர்கள் திணறிப்போகின்றனர். கதைக்காக அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தமிழின் நியூ ஜெனரேஷன் இயக்குனர்களில் முக்கியமான ஐவர் குறித்து பார்ப்போம்.

தியாகராஜன் குமாரராஜா

நலன் குமாரசாமி போன்றவர்கள் இவரை ஆசான் என்றே அழைக்கிறார்கள். இவர் இயக்கத்தில் 2011 இல் வெளியான ஆரண்ய காண்டம் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஒரு லத்தீன் அமெரிக்க திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவத்தை ஆரண்ய காண்டம் தந்தது. ஆனால் முதல் படம் வெளியாகி 7 வருடங்கள் கழிந்த பிறகும் தியாகராஜன் குமாரராஜாவிடமிருந்து அடுத்தப் படம் வரவில்லை. இப்போதுதான் தனது இரண்டாவது படம், சூப்பர் டீலக்ஸை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

நலன் குமாரசாமி

ஆரண்ய காண்டம் போலன்றி வெகுஜனங்களையும், விமர்சகர்களையும் ஒருசேர கவர்ந்த படம், 2013 இல் வெளியான சூது கவ்வும். அடுத்து மை டியர் டெஸ்பரடோ என்ற தென்கொரிய படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்து, முறைப்படி அப்படத்தின் உரிமையை நலன் வாங்கினார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யாவை வைத்து மை டியர் டெஸ்பரடோ படத்தை எக்ஸிமோ காதல் என்ற பெயரில் எடுப்பதாக முடிவானது. எக்ஸிமோ காதலின் நாயகன் ஒரு கேங்ஸ்டர். பலமில்லாதவன். அடுத்தவர்களிடம் அடிக்கடி உதை வாங்குகிறவன். தனது ஹீரோ இமேஜுக்கு அந்த கதாபாத்திரம் சரிவராது என்று சூர்யா படத்திலிருந்து விலக, தனது நண்பர்களுடன் புதிய கதை எழுதுவதில் முனைந்தார் நலன். ஆனால், முயற்சி பலனளிக்கவில்லை. உள்ளூர் முதற்கொண்டு சிங்கப்பூர்வரை ரூம் போட்டு யோசித்தும் கதை திரளவில்லை. கடைசியாக மை டியர் டெஸ்பரடோ படத்தை எக்ஸிமோ காதல் என்ற பெயருக்கு பதில் காதலும் கடந்து போகும் என்ற பெயரில் எடுத்தார். இதற்குள் 3 வருடங்கள் ஓடிப்போயிருந்தன. இரண்டாவது படம் ரீமேக் என்பதால் மூன்றாவது படத்தையாவது சொந்த கதை, திரைக்கதையில் எடுப்பது என்ற முடிவில் கதை எழுதி வருகிறார். வருடம் இரண்டு தாண்டிவிட்டது. இன்னும் ஸ்கிரிப்ட் தயாராகவில்லை.

பாலாஜி தரணீதரன்

2012 இல் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிய வந்தவர் இயக்குனர் பாலாஜி தரணீதரன். அதன் பிறகு இரண்டு வருடங்கள் படம் எதுவும் இயக்காதவர், 2014 இறுதியில் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடிப்பில் ஒரு பக்க கதை என்ற படத்தை அறிவித்தார். படம் முடிந்துவிட்டதாக கூறுகிறார்கள். வருடம் 4 கடந்தும் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. நான்கு வருடங்கள் கழித்து இப்போது 2018 இல் மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து சீதக்காதி என்ற படத்தை எடுத்து வருகிறார்.

நவீன்

தமிழில் மிக அரிதான பிளாக் க்யூமர் ஜானரில் 2013 இல் மூடர் கூடம் வெளியானது. கொரிய திரைப்படமான அட்டாக் தி கேஸ் ஸ்டேஷனின் இன்ஸ்பிரேஷனாக இருப்பினும், நவீன் எடுத்துக் கொண்ட கதையும், அதை சொன்னவிதமும் நம்பிக்கையை ஏற்படுத்தின. மூடர் கூடம் வெளியாகி 5 வருடங்கள் நிறைவடையப் போகிறது. இன்னும் அடுத்தப் படம் வரவில்லை. நவீன் சத்தமில்லாமல் ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளார் என்கிறார்கள். எனினும் ஐந்து வருட இடைவெளி என்பது மிக அதிகம்.

சாந்தகுமார்

சாந்தகுமாரின் மௌனகுரு திரைப்படம் 2011 இல் வெளியானது. அப்போதே ஸ்டுடியோ கிரீன் அவருக்கு அட்வான்ஸ் தந்து பிடித்துப் போட்டது. மற்றவர்களிடம் சலனமாவது உள்ளது. சாந்தகுமார் கடந்த 7 வருடங்களாக அப்படியேதான் இருக்கிறார். பட அறிவிப்புகூட இதுவரை வரவில்லை. அவர் இன்றும் ஸ்டுடியோ கிரீனில்தான் இருக்கிறார் என்பதை அந்நிறுவனத்தின் நோட்டா படவிழா மேடையில் அவரை பார்க்கையில் உறுதியானது. இந்த வருடமில்லை, இனி வரும் வருடங்களிலாவது அவர் தனது இரண்டாவது படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா என்பது சந்தேகமே.

மேலே உள்ள அனைவரும் இளைஞர்கள். தங்களின் முதல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர்கள். அவர்களின் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். நெருங்கி விசாரித்தால் அனைவருக்கும் பிரச்சனையாக இருப்பது கதை. நல்ல கதைக்காக பல வருடங்கள் காத்திருக்கிறார்கள். கதையும், ஸ்கிரிப்டும் தனியான துறைகள், அதற்கும் இயக்கத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை தமிழின் புதிய தலைமுறையும் நம்ப மறுக்கிறது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று சேர்த்துப் போட்டால்தான் நாம் இயக்குனர்கள் என நினைக்கிறார்கள்.

பக்கத்து மாநிலமான கேரளாவில் அப்படி அல்ல. அவர்கள் இயக்கத்தையும், திரைக்கதையையும் தனித்தனியாகவே பார்க்கிறார்கள். அங்கும் 2010 க்குப் பிறகு ஒரு புதிய அலை வீசியது. ராஜேஷ் பிள்ளை, லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, ஆஷிக் அபு, அன்வர் ரஜீத், அஞ்சலி மேனன், சமீர் தஹிர், தில்லீஸ் போத்தன் என்ற அரைடஜனுக்கும் மேல் இளைஞர்கள் எழுந்து வந்தார்கள். இவர்களில் வினித் சீனிவாசன், அஞ்சலி மேனன் இருவரும் அடிப்படையில் திரைக்கதையாசிரியர்கள். இவர்கள் இருவரும் தங்கள் படங்களின் திரைக்கதையை தாங்களே எழுதுகிறார்கள். மற்ற அனைவரும் நல்ல கதாசிரியர்களிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்துவிடுகிறார்கள்.

தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூ இதுவரை 9 படங்கள் இயக்கியிருக்கிறார். ஒன்பது படங்களின் கதாசிரியரும் வேறு ஒருவரே. அதில் 7 படங்களுக்கு பாபி - சஞ்சய் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். தற்போது தயாராகிவரும் இரு படங்களுக்கும்கூட பாபி - சஞ்சய்யே திரைக்கதை.

ஆஷிக் அபுவின் சால்ட் அண்ட் பெப்பர், 22 பீமெயில் கோட்டயம், டா தடியா, இடுக்கி கோல்ட், ராணி பத்மினி, சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற மாயநதி என அனைத்துப் படங்களுக்கும் குறைந்தது இரண்டு பேர் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். அதிகமும் தில்லீஸ் நாயர் மற்றும் ஷியாம் புஷ்கரன்.

அங்கமாலி டைரிஸ் படத்தை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் ஆமென் படத்துக்கு திரைக்கதை ஆர்.எஸ்.ரபீக். அங்கமாலி டைரிஸுக்கு நடிகர் செம்பன் வினோத் ஜோஸ். புதிய படம் இ ம யோ வுக்கு பி.எஃப்.மேத்யூஸ்.

இதேபோல் சமீர் தஹிர், அன்வர் ரஷீத் என அனைவரும் திரைக்கதையின் பொறுப்பை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். இதன் காரணமாக வருடா வருடம் ஒரு நல்ல படத்தை இவர்கள் எடுத்துவிடுகிறார்கள். தமிழின் புதிய தலைமுறை இயக்குனர்களைப் போல இவர்கள் தடுமாறுவதில்லை.

கதையும், திரைக்கதையும் இயக்கத்திலிருந்து மாறுபட்டது, கதை, திரைக்கதை என்று வேறு ஒருவரின் பெயரைப் போட்டால் இயக்குனர்களின் பெயருக்கு களங்கம் ஏதும் நேர்ந்துவிடாது என்ற புரிதல் தமிழில் ஏற்படும்வரை தடுமாற்றங்கள் இருந்துகொண்டேதான் இருக்கும்.

Tamil Cinema Jhon Baburaj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment