“ரிலீஸாகாமல் தடுக்கப்பட்ட படங்களின் நிலை என்ன?” - விஷாலுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி

கேளிக்கை வரி பிரச்னையால் ரிலீஸாகாமல் நிறுத்தி வைக்கப்பட்ட படங்களுக்கு எப்போது தியேட்டர் கிடைக்கும்? எனக் கேள்வி எழுப்புகிறார் சுரேஷ் காமாட்சி.

தமிழ் சினிமாவின் தற்போதைய சூழ்நிலையில் ஒரு படத்தை எடுத்து, ரிலீஸ் செய்வது என்பது ஏழு கடல், மலை தாண்டி மலரைப் பறித்து வருவதற்கு சமமாக இருக்கிறது. அந்த அளவுக்கு எங்கிருந்து, என்ன சிக்கல் வரும் என்பது புரியாத புதிராக இருக்கிறது. எல்லாவற்றையும்விட மிகச் சிக்கலாக இருப்பது, வெளியிடுவதற்கு தியேட்டர்கள் கிடைக்காமல் இருப்பதுதான். இதனால், ரிலீஸுக்குத் தயாரான படங்கள் பல பெட்டியிலேயே முடங்கிக் கிடக்கின்றன.

‘வனமகன்’ ரிலீஸ் சமயம். மத்திய அரசின் ஜி.எஸ்.டி.க்கு எதிராகப் போராட வேண்டும் என்று சொல்லி, ‘வனமகன்’ ரிலீஸைத் தள்ளி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார் விஷால். அத்தனை நாட்களாக செய்த புரமோஷன் வீணானாலும் பரவாயில்லை, சினிமாவுக்கு நல்லது நடக்கட்டுமே என்று ‘வனமகன்’ தயாரிப்பாளரும் ஏ.எல்.அழகப்பனும், இயக்குநர் விஜய்யும் படத்தைத் தள்ளி வைத்தனர். ஆனால், குறிப்பிட்ட தேதியில் படம் ரிலீஸாகாததால், படம் பெரிதாகப் போகவில்லை. காரணம், மறுபடியும் புரமோஷனுக்கு தயாரிப்பாளரால் செலவு செய்ய முடியவில்லை.

“இதே நிலைதான் தற்போது 13 படங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ‘வனமகன்’ படத்தைப் போல இவர்களின் பாதிப்புக்கும் விஷால்தான் காரணம்” என்று குற்றம் சாட்டுகிறார் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான சுரேஷ் காமாட்சி.

“கடந்த 6ஆம் தேதி ‘விழித்திரு’ உள்ளிட்ட 6 படங்கள் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டு, புரமோஷனும் செய்யப்பட்டு வந்தது. அதற்கடுத்த வாரமும் 7 படங்கள் ரிலீஸாவதாக இருந்தன. ஆனால், திடீரென விஷால் சொன்னதால் புதுப்படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் தியேட்டர் ஓனர்கள் கூறிவிட்டனர். இதனால், அந்தப் படங்களுக்கு அத்தனை நாட்களாகச் செய்துவந்த புரமோஷன் வீணாகிவிட்டது. மறுபடியும் அவர்களால் அந்த அளவுக்கு புரமோஷன் செய்ய முடியுமா?

தியேட்டர் கிடைப்பதே குதிரைக் கொம்பாகிவிட்ட இந்தக் காலத்தில், ரிலீஸாகாமல் விஷாலால் தடுக்கப்பட்ட 13 படங்களுக்கும் இனிமேல் எப்போது தியேட்டர் கிடைக்கும்? அப்படியே கிடைத்தாலும், அதிக தியேட்டர்கள் கிடைக்குமா? அப்படி இந்தப் படங்கள் ரிலீஸாகும்போது பெரிய படங்கள் ரிலீஸானால், இந்தப் படங்களின் வசூல் பாதிக்கப்படும். இதற்கெல்லாம் விஷால் என்ன செய்யப் போகிறார்? தயாரிப்பாளர்களை வாழவைக்கிறேன் என்று சொல்லி பதவிக்கு வந்த விஷால், அவர்களைச் சாகும் நிலைக்குத் தள்ளுகிறார்” என்று கோபத்துடன் கூறினார் சுரேஷ் காமாட்சி.

×Close
×Close