சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் படுதோல்விற்குப் பிறகு, அவரது அடுத்த படம் குறித்த வதந்தி ஒன்று காட்டுத் தீயாய் இணையதளங்களில் பரவி வருகிறது. அந்த தீயிற்கு சிம்பு மட்டும் காரணமல்ல… அஜித் தான் முக்கிய காரணம். ஆம்! பில்லா- 3 என்ற பெயரில் சிம்பு ஒரு படத்தை தயாரித்து, இயக்கி, நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் என்பதே அந்த செய்தி.

மேலும், இந்தப் படத்தில் சிம்பு மிகவும் கொடூரமான பாத்திரத்தில் நடிக்கிறார். இதில் இரண்டு கதாபாத்திரங்கள் உள்ளது, அதில் ஒன்று சிம்பு நடிக்கிறார். மற்றொன்று முன்னணி பெண் கதாபாத்திரம் ஆகும். இந்த கேரக்டருக்கு ஸ்டைலான நடிகையை சிம்பு தேடி வருகிறார். ‘ஆரம்பம்’ படத்தில் நடித்த அக்‌ஷரா கவுடாவை நடிக்க வைக்க சிம்பு எண்ணியுள்ளார். இந்த படத்தின் சில ரிகர்சல் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் ஷூட் செய்யப்பட்டது. விரைவில் இதற்கான டீசர் வாய்ப்பு உள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங் முழுவதையும் அமெரிக்காவில் நடத்த சிம்பு திட்டமிட்டுள்ளார். அடுத்த மாதம் படத்திற்கான லொக்கேஷனை தேர்வு செய்வதற்காக சிம்பு அமெரிக்கா செல்ல இருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகியது.

இதுகுறித்து சிம்பு தனது ட்விட்டரில் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” ஊடகங்களுக்கு ஒரு பணிவான, தாழ்மையான வேண்டுகோள். எனது அடுத்த படம் குறித்து செய்திகள் வெளியிடுவதை நிறுத்துங்கள். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரையில் தயவு செய்து பொறுமை கொள்ளுங்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம், சமூக தளங்களில் வெளியான செய்திகள் வெறும் வதந்தி என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.