Advertisment

ரூபாய் : விமர்சனம்

சாட்டை பட இயக்குநர் அனழகனின் அடுத்தப்படம் ரூபாய். சின்னி ஜெயந்த், கயல் ஆனந்தி நடிப்பில், பணம் மனிதனை எப்படி மாற்றுகிறது என்பதை காட்டியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரூபாய் : விமர்சனம்

ஆதவன்

Advertisment

முறையற்ற வழியில் கிடைத்த பணத்துக்கு ஆசைப்பட்டால் அது நம்மை எப்படியெல்லாம் அலைக்கழிக்கும் என்பதைச் சொல்லும் படம். ‘சாட்டை’ என்னும் சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த படத்தைத் தந்த இயக்குநர் அன்பழகனின் படம் இது.

குங்கும ராஜாவும் (சின்னி ஜெயந்த்) அவர் மகள் ஆனந்தியும் சென்னையில் மிகவும் கஷ்ட ஜீவனம் நடத்துகிறார்கள். வறுமையால் குங்கும ராஜா அடிக்கடி வீடு மாற வேண்டியிருக்கிறது. இவர் காலி செய்து கொண்டு கிளம்பும்போது அந்தத் தெருவே அதைக் கொண்டாடும். அந்த அளவுக்கு ராசியில்லாதவர் எனப் பெயர் பெற்றவர் குங்கும ராஜா.

தேனியைச் சேர்ந்த பரணியும் பாபுவும் (சந்திரன், கிஷோர் ரவிச்சந்திரன்) சரக்கு லாரி ஓட்டிச் சம்பாதிக்கிறார்கள். லாரிக்காக வாங்கிய கடனுக்கான தவணையைக் கட்டவே சிரமப்படுகிறார்கள். சரக்கு ஏற்றிக்கொண்டு சென்னக்கு வரும்போது குங்கும ராஜாவைச் சந்திக்கிறார்கள். அவருடைய வீட்டைக் காலிசெய்துதரும் வேலை அவர்களுக்குக் கிடைக்கிறது. ஆனால், வீடு கொடுப்பதாகச் சொன்னவர் காலைவாரிவிட்டதால் குங்கும ராஜா தன் மகளுடன் நடுத்தெருவில் நிற்க வேண்டியதாகிறது. அவர் வீட்டின் சாமான்களைத் தங்கள் லாரியில் ஏற்றிக்கொண்ட பரணியும் பாபுவும் அவருடன் அலைகிறார்கள். ஆனந்தியின் மீது பரணிக்குக் காதல் ஏற்படுவதால் அந்தக் குடும்பத்துக்கு ஏதாவது உதவி செய்ய அவர் துடிக்கிறார்.

இதற்கிடையில் கொள்ளையடிக்கப்பட்ட பெரும் பணம் இவர்கள் லாரியில் இவர்களுக்கே தெரியாமல் வந்து மாட்டிக்கொள்கிறது. கொள்ளையடித்த ஹரீஷ் உத்தமன் போலீஸிடமிருந்து தப்ப அந்தப் பணத்தை இவர்கள் லாரியில் போட்டுவைக்கிறார். செக்போஸ்ட்டைத் தாண்டியதும் லாரியைத் துரத்திச் சென்று எடுத்துக்கொள்ளலாம் என்று அவர் லாரியைப் பின்தொடரும்போது லாரியைத் தவறவிடுகிறார். பணம் நண்பர்கள் கையில் சிக்குகிறது. அதை அவர்கள் என்ன செய்தார்கள், ஹரீஷ் அந்தப் பணத்தைப் பெற என்ன செய்தார், போலீஸின் தேடுதல் வேட்டை என்ன ஆனது, சம்பந்தப்பட்டவர்களைப் பணம் என்ன செய்தது என்பதுதான் ‘ரூபாய்’ படத்தின் கதை.

சின்னி ஜெயந்தின் வறுமையும் பணத்துக்கான நண்பர்களின் போராட்டமும் யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. வங்கிக் கொள்ளையும் புலனாய்வும் பண வேட்டையும் விறுவிறுப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. படத்தின் தொடக்கக் காட்சிகள் சற்றே மந்தமாக நகர்ந்தாலும் கொள்ளை நடந்த பிறகு படம் வேகம் எடுக்கிறது. பணம் மனிதர்களின் நடத்தையை எப்படி மாற்றுகிறது என்பதும் நன்றாகக் காட்டப்படுகிறது.

ஹரீஷ் உத்தமன் சகட்டுமேனிக்குக் கொலைகளைச் செய்துகொண்டே இருக்கிறார். தன்னுடைய முகம் போலீஸுக்குத் தெரிந்துவிட்டது என்பது தெரிந்தும் அவர் தன் முக அடையாளத்தை மாற்றிக்கொள்ள எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. தமிழ்நாடு முழுவதும் காரில் சுற்றும் அவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. பணம் கிடைத்ததும் சின்னி ஜெயந்தும் நண்பர்களும் நெருக்கடிக்காக அதைப் பயன்படுத்துவது இயல்புதான். ஆனால், அடுத்தடுத்து அவர்கள் அதைச் செலவுசெய்யும் விதம் அவர்கள் பாத்திரங்களுக்குப் பொருத்தமாக இல்லை. அடிப்படையில் நேர்மையானவர்களான இவர்கள், பணம் எங்கிருந்து வந்தது என்று யோசிக்காமல் இருப்பது பெரிதாக உறுத்துகிறது. ஊரெல்லாம் திமிலோகப்படும் வங்கிக் கொள்ளை விவகாரம் இவர்களுக்கு மட்டும் தெரியவே இல்லை. காதல் அத்தியாயம் படத்தில் ஒட்டவில்லை. ஆனந்தி கடும் நெருக்கடியில் இருக்கும்போது சந்திரன் அவரைக் காதல் பார்வை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இந்தக் குறைகளையும் மீறிப் படம் நம்மைக் கவர்வதற்குக் காரணம் வறுமையின் யதார்த்தச் சித்தரிப்பும் விறுவிறுப்பும்தான். மனித சுபாவம் குறித்த சித்தரிப்புகள் கூர்மையாக இருக்கின்றன. சந்திரன், புதுமுகம் கிஷோர் ஆனந்தி, சின்னி ஜெயந்த், ஹரீஷ் உத்தமன் ஆகியோர்ன் நடிப்பு படத்துக்குப் பெரிய பலம். இமானின் பின்னணி இசையும் பாடல்களும் பரவாயில்லை. வி. இளையராஜாவின் ஒளிப்பதிவு படத்தின் உணர்வுகளுக்குப் பொருத்தமான வடிவம் கொடுக்கிறது.

வறுமையும் பணத்தாசையும் மனிதர்களை எந்த அளவுக்கு மாற்றிவிடும் என்பதை அழுத்தமாகவும் ஓரளவு விறுவிறுப்பாகவும் சொன்ன விதத்தில் அன்பழகனின் ‘ரூபாய்’ கவர்கிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment