“கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டிய அவசியமில்லை” - விஷாலுக்கு அபிராமி ராமநாதன் பதில்

அதிக கட்டணம் வசூலித்தால் புகார் செய்யுங்கள் என்ற விஷாலின் கூற்றுக்கு, அப்படி வசூலிக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளார் அபிராமி ராமநாதன்.

தமிழக அரசால் விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத கேளிக்கை வரி, பேச்சுவார்த்தைக்குப் பிறகு 8 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதற்காக விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும், அபிராமி ராமநாதன் தலைமையிலான திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளும் இணைந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பின்னர், தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய விஷால், “நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட ஒரு ரூபாய் அதிகமாக வசூலித்தாலும் அந்த டிக்கெட்டை வாங்காதீர்கள். அப்படி அதிகமாக வசூலித்தால் அரசிடம் புகார் தெரிவிக்கலாம். தயாரிப்பாளர் சங்கத்திடமும் தெரிவிக்கலாம்” என்று கூறினார்.

“அரசு நிர்ணயித்ததைவிட அதிகமாக கட்டணம் வசூலிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். “எங்களுக்குத் தேவையான கட்டணத்தை அரசே நிர்ணயித்துக் கொடுத்துவிட்டது. அப்படியிருக்கும்போது, அதிக கட்டணம் வசூலிக்க வேண்டிய அவசியமில்லை. பெரிய நடிகர், சின்ன நடிகர் யார் படமாக இருந்தாலும் ஒரே கட்டணம்தான்” என அவர் தெரிவித்துள்ளார்.

கேண்டீனில் எம்.ஆர்.பி. விலைக்குத்தான் விற்க வேண்டும் என்ற விஷாலின் கட்டுப்பாடு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அபிராமி ராமநாதன், “விஷால் நேரடியாக தியேட்டர்களில் வந்து ஆய்வு செய்து கொள்ளட்டும். எங்களிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை” என்று தெரிவித்தார்.

என்னதான் அதிக கட்டணம் குறித்து பல ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும்போது அதிக விலைக்குத்தான் டிக்கெட் விற்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதிக கட்டணம் கொடுத்து வாங்க மக்கள் தயாராக இருக்கும்வரையில் இதற்குத் தீர்வுகாண முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

×Close
×Close