Advertisment

நமத்துப் போன ‘நட்சத்திரக் கலைவிழா 2018’ : ஒரு விழாவில் இத்தனைக் குளறுபடிகளா?

மலேசியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழாவில் ஏகப்பட்டக் குளறுபடிகள் நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
natchathira vizha 2018

natchathira vizha 2018

மலேசியாவில் கடந்த வாரம் நடைபெற்ற நட்சத்திரக் கலைவிழாவில் ஏகப்பட்டக் குளறுபடிகள் நடந்துள்ளது.

Advertisment

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக, கடந்த சனிக்கிழமை (ஜனவரி 6) மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ‘நட்சத்திரக் கலைவிழா 2018’ நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகளுக்கு முன்பாக நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளும் நடைபெற்றன. இந்த விழாவுக்கு ஜனவரி 5 மற்றும் 6ஆம் தேதிகளில் படப்பிடிப்புகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

நட்சத்திரக் கலைவிழாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நடிகர் – நடிகைககள் கலந்து கொண்டனர். ஆனால், அஜித், விஜய், த்ரிஷா, நயன்தாரா போன்ற முன்னணி நடிகர் - நடிகைகள் கலந்து கொள்ளவில்லை. குடும்பத்துடன் சுற்றுலாவுக்காக விஜய் சீனா சென்றுவிட, நயன்தாரா மற்றும் த்ரிஷா கலந்து கொள்ளாததன் காரணம் தெரியவில்லை.

எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத அஜித், வழக்கம்போல இதிலும் கலந்து கொள்ளவில்லை. “நட்சத்திரக் கலைவிழாவில் கலந்துகொள்ள அஜித்துக்கு அழைப்பு விடுத்தோம். மக்கள் காசு கொடுத்து வாங்கும் தியேட்டர் டிக்கெட்டில் இருந்துதான் நாம் சம்பாதிக்கிறோம். எனவே, நடிகர் சங்க கட்டிடத்தை, நாமே காசு போட்டு கட்டிக் கொள்ளலாம் என அஜித் கூறினார்” என்று தெரிவித்துள்ளார் எஸ்.வி.சேகர்.

அத்துடன், “நட்சத்திரக் கலைவிழாவில் பல மூத்த கலைஞர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள் என்று தெரிந்து கொண்டேன். இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், ஆர்.சுந்தர்ராஜன், பார்த்திபன், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் அவமரியாதை செய்யப்பட்டனர். இதற்குப் பெயர்தான் நிர்வாகக் கோளாறு. ரஜினி, கமலுக்கு மரியாதை கொடுப்பதில் தவறில்லை. அதே மரியாதையை மற்ற மூத்த கலைஞர்களுக்கும் கொடுக்க வேண்டும். மூத்த கலைஞர்களை எப்படி மதிப்பது என்பதை விஜயகாந்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், செபராங் பெராயின் மாமன்ற உறுப்பினரான சதீஷ் முனியாண்டியும் இந்த விழா குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். இந்த விழாவைக் காண 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள் என விழா ஏற்பாட்டாளர்கள் எண்ணி இருந்ததாகவும், ஆனால் 5 ஆயிரம் பேர் மட்டுமே வந்ததாகவும், அதிலும் ஆயிரம் பேர் இலவச டிக்கெட்டில் வந்ததாகவும் சதீஷ் முனியாண்டி கூறியுள்ளார்.

நடிகர்கள் கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் நிலையில், இன்னும் ரசிகர்களின் பணத்தைச் சுரண்ட நினைக்கிறார்கள் என மலேசியத் தமிழர்கள் நினைத்ததே இதற்கு காரணம் என சதீஷ் முனியாண்டி தெரிவித்துள்ளார். சினிமா நடிகர்களின் இந்த முயற்சி, மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது என்பதை மக்கள் உணர்ந்து விட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், மலேசியாவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மோசமான உள்கட்டமைப்புடன் இருப்பதாகவும், எனவே நட்சத்திரக் கலைவிழாவைப் புறக்கணியுங்கள் என்று சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமும் கூட்டம் குறைவுக்கு காரணம் எனவும் சதீஷ் முனியாண்டி தெரிவித்துள்ளார்.

இவற்றைத் தாண்டி, விமானப் பயணம், தங்கும் இடம், உணவு என எல்லாவற்றிலுமே பல குளறுபடிகள் நடந்துள்ளன. இந்தக் குளறுபடிகளுக்கு ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமே காரணம் என்கிறார்கள் விஷால் தரப்பினர்.

“இந்த நிகழ்ச்சி, ‘மை ஈவண்ட்ஸ்’ என்ற ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனிக்கு கொடுக்கப்பட்டது. பாஸ்போர்ட்டில் இருந்த நடிகர்களின் பெயரும், அவர்களின் உண்மையான பெயரும் பொருத்தமாக இல்லாததால், சிலர் மலேசியாவுக்குச் செல்ல முடியாமல் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். முன்கூட்டியே பாஸ்போர்ட் ஜெராக்ஸை அவர்கள் தராததால் நிகழ்ந்த விளைவு இது. ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமும் இதை சரிபார்க்கத் தவறிவிட்டது.

60 வயதுக்கு மேற்பட்ட ரஜினி போன்ற நடிகர்களுக்கு மட்டுமே பிசினஸ் கிளாஸில் டிக்கெட் போடப்பட்டது. மற்ற எல்லாருக்குமே எக்னாமிக் கிளாஸ் தான். ஆனால், நடிகை ஆன்ட்ரியா போன்ற சிலர் பிசினஸ் கிளாஸில் தான் டிக்கெட் வேண்டும் என்று அடம்பிடித்ததால், கடைசி நேரத்தில் டிக்கெட்டில் சில மாற்றங்கள் ஏற்பட்டதாலும் குளறுபடிகள் ஏற்பட்டன.

320 பேருக்கு ஃபிளைட் டிக்கெட் புக் செய்த ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம், அத்தனை பேரும் வருவார்கள் என எதிர்பார்க்கவில்லை. எனவே, தங்கும் இடம், உணவு போன்றவற்றை குறைவாகவே ஏற்பாடு செய்திருந்தார்கள். யாருடன் யாரைத் தங்கவைப்பது என்று எழுந்த சிக்கலும் குளறுபடிகளை அதிகப்படுத்திவிட்டது. இதற்கும், நடிகர் சங்கத்துக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமே எல்லாவற்றிற்கும் காரணம். ஏற்கெனவே இளையராஜாவின் இசை நிகழ்ச்சியையும் இந்த நிறுவனம் சொதப்பியிருக்கிறது” என ஒரேடியாக ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

ஆக, இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை சொதப்பியது கூடத் தெரியாமல், அந்த நிறுவனத்துக்கு ஈவெண்டைக் கொடுத்தது யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நட்சத்திரக் கலைவிழாவில் நடைபெற்ற இந்தக் குளறுபடிகளில் சிலவற்றை முன்கூட்டியே களைந்திருக்கலாம். அதற்கு, நடிகர் சங்கத் தலைவரான நாசரோ, செயலாளரான விஷாலோ, செயலாளரான கார்த்தியோ சில நாட்களுக்கு முன்பே அங்கு இருந்து ஏற்பாடுகளைப் பார்வையிட்டிருக்க வேண்டும். ஆனால், நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நடிகர்களைப் போல இவர்களும் விழா நடப்பதற்கு முதல் நாள் தான் அனைவருடனும் சேர்ந்து சென்றனர். அப்படியானால், நடைபெற்ற குளறுபடிகளுக்கு யார் பொறுப்பு ஏற்பது?

Tamil Cinema Vishal Nadigar Sangam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment