தமிழகத் திரையரங்குகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை அதிகபட்சமாக 120 ரூபாயும், குறைந்தபட்சமாக 10 ரூபாயும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆன்லைனில் புக் செய்தால், ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 30 ரூபாய் எக்ஸ்ட்ராவாகச் செலுத்த வேண்டும்.

நாடு முழுவதும் ஒரே வரி என மத்திய அரசு ஜி.எஸ்.டி.யை அறிமுகப்படுத்தியது. 100 ரூபாய்க்கும் அதிகமான டிக்கெட்டிற்கு 28 சதவீதமும், 100 ரூபாய்க்கும் குறைவான டிக்கெட்டிற்கு 18 சதவீதமும் வரியாக நிர்ணயிக்கப்பட்டது. எனவே, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் 30 ரூபாயாகவும், 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் 154 ரூபாயாகவும் உயர்ந்தது.

இந்நிலையில், தமிழக அரசு வேறு கேளிக்கை வரியாக 30 சதவீதத்தை அறிவித்தது. அரண்டுபோன சினிமாக்காரர்கள், கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரினர். ஆனால், இறங்கிவந்த அரசு, 30 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைத்தது. ‘இதுவும் அதிகம்’ என சினிமாக்காரர்கள் முறுக்கிக் கொள்ள, இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் 8 சதவீதமாகக் குறைத்த தமிழக அரசு, டிக்கெட் கட்டணத்தையும் உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கியது.

அதன்படி, மல்ட்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் அதிகபட்சமாக 150 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 50 ரூபாய்க்கும் டிக்கெட் விற்பனை செய்யலாம். ஏசி தியேட்டர்களில் அதிகபட்சமாக 100 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 40 ரூபாய்க்கும், ஏசி இல்லாத தியேட்டர்களில் அதிகபட்சமாக 80 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 30 ரூபாய்க்கும் விற்பனை செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட கட்டணத்தோடு ஜி.எஸ்.டி. மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரியைச் சேர்த்தால், மல்ட்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் அதிகபட்சமாக 204 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 63 ரூபாய்க்கும் ஒரு டிக்கெட்டை விற்பனை செய்யலாம். ஏசி தியேட்டர்களில் அதிகபட்சமாக 126 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 51 ரூபாய்க்கும், ஏசி இல்லாத தியேட்டர்களில் அதிகபட்சமாக 101  ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 38 ரூபாய்க்கும் விற்பனை செய்யலாம்.

இந்த விலை உயர்வுக்கான அரசு ஆவணங்கள் இன்று இரவுக்குள் கிடைத்துவிடும் எனவும், இரண்டொரு நாட்களில் விலை உயர்வு அமலுக்கு வந்துவிடும் எனவும் சினிமாத் துறையினர் தெரிவித்துள்ளனர்.