‘மெர்சல்’ தலைப்பு விவகாரம் : மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பும், ‘மெர்சல்’ என்ற தலைப்பும் ஒரே மாதிரியாக இருப்பதாகக் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார் ராஜேந்திரன்.

‘மெர்சல்’ தலைப்பு விவகாரம், மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தனி நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்தும், மேல் முறையீடு செய்துள்ளார் தயாரிப்பாளர். அந்த மனுவையும் தற்போது தள்ளுபடி செய்திருக்கிறது நீதிமன்றம்.

‘மெர்சல்’ படம், விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் தயாராகியுள்ளது. 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம். 3000க்கும் அதிகமான தியேட்டர்களில் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஏ.ஆர். ஃபிலிம் ஃபேக்டரி உரிமையாளர் ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘என் மகனை ‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பில் ஹீரோவாக அறிமுகப்படுத்த இருந்தேன். எனவே, இந்த தலைப்பை க்ரீன் ஆப்பிள் நிறுவனத்தைச் சேர்ந்த முகமது சாதிக்கிடம் இருந்து வாங்கி, 2014ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்தேன். 2015ஆம் ஆண்டு முதல் அதை புதுப்பித்தும் வருகிறேன்.

மேலும், 2016ஆம் ஆண்டு முதல் இந்த தலைப்பில் என் மகனை வைத்து படப்பிடிப்பும் நடத்தி வருகிறேன். ஆனால், விஜய் நடிப்பில் ‘மெர்சல்’ என்ற படத்தின் அறிவிப்பையும், டீஸரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ‘மெர்சலாயிட்டேன்’ என்பதன் அர்த்தமும், ‘மெர்சல்’ என்பதன் அர்த்தமும் ஒன்றுதான். ஒரே அர்த்தமுடைய தலைப்பில் இரண்டு படங்கள் வெளியானால், என் படத்துக்குப் பாதிப்பு ஏற்படும். எனவே, விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ படத்துக்குத் தடை விதிப்பதோடு, அந்த பெயரில் விளம்பரம் செய்யவோ, படத்தின் பணிகளை மேற்கொள்ளவோ கூடாது’ என கூறப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி அனிதா சுமந்த், “இரண்டு பெயருக்கும் வித்தியாசம் உள்ளது. அத்துடன், தயாரிப்பாளர் சங்கத்திலும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலும் மனுதாரர் தலைப்பைப் பதிவு செய்து வைத்ததற்கு சட்ட அங்கீகாரமும் கிடையாது. ஆனால், எதிர் மனுதாரர் படத்துக்கு ட்ரேட்மார்க் அங்கீகாரம் வாங்கியிருப்பதால், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்” எனத் தீர்ப்பளித்தார்.

ஆனாலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தார் ராஜேந்திரன். இந்த வழக்கு, நீதிபதிகள் ராஜிவ் சுக்தேர், சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. “மெர்சல் தலைப்பைப் பயன்படுத்தியதில் தவறு இல்லை. மேலும், தலைப்புக்கு ட்ரேட் மார்க் வாங்கியுள்ளனர். இதுதொடர்பாக, தனி நீதிபதியும் விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

×Close
×Close