‘மெர்சல்’ படத்துக்கு இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை : அதிர்ச்சியளிக்கும் தகவல்

‘மெர்சல்’ படத்துக்கு அதிகாரப்பூர்வமாக இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை என சென்சார் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என எல்லோரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக கடந்த 6ஆம் தேதி ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இயக்குநர் அட்லீ. யு/ஏ சான்றிதழ் பெற்றால், குழந்தைகள் தனியாக படத்தைப் பார்க்க முடியாது. பெற்றோர் அல்லது அவர்களின் அனுமதியுடன் மட்டுமே பார்க்க முடியும். அத்துடன், யு/ஏ சான்றிதழ் பெற்ற படத்தை அப்படியே நேரடியாக டிவியிலும் ஒளிபரப்ப முடியாது. சில காட்சிகளை நீக்கி யு சான்றிதழ் பெற்ற பிறகே டிவியில் ஒளிபரப்ப முடியும்.

‘மெர்சல்’ தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. படத்தில் புறா பறப்பது போன்ற காட்சி கிராஃபிக்ஸில் செய்யப்பட்டதுதான் என்பதற்கான ஆதாரத்தைப் படக்குழுவினர் சமர்ப்பிக்கவில்லையாம். அத்துடன், ராஜாநாகத்தைப் பயன்படுத்திவிட்டு, அதன் பெயரை நாகப்பாம்பு என்று சான்றிதழில் குறித்துக் கொடுத்துள்ளார்களாம். இதனால், விலங்குகள் நல வாரியம் அனுமதி தராமல் இருக்கிறது.

இந்நிலையில், ‘எங்களிடம் இருந்து அனுமதி சான்றிதழ் கிடைக்காமல் நீங்கள் எப்படி சென்சார் சான்றிதழ் வழங்கலாம்’ என சென்சார் போர்டு அதிகாரிகளிடம் விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதில் அளித்துள்ள சென்சார் போர்டு அதிகாரிகள், ‘வாய்மொழியாக மட்டுமே நாங்கள் யு/ஏ என்று சொல்லியிருக்கிறோம். இதுவரை அதிகாரப்பூர்வமாக சான்றிதழ் வழங்கவில்லை’ என்று தெரிவித்துள்ளனர்.

அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமலேயே ‘மெர்சல்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள விவரம் வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

×Close
×Close