‘மெர்சல்’ படத்துக்கு அடுத்த சிக்கல்... ‘புஸ்’வாணமாகும் தீபாவளி ரிலீஸ்?

விலங்குகள் நல வாரியத்தில் இருந்து அனுமதி பெறுவதில் ‘மெர்சல்’ படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், தீபாவளி ரிலீஸ் மீதான சந்தேகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

‘மெர்சல்’ படம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. அதென்னவோ தெரியவில்லை, விஜய் படம் என்றால் மட்டும் எங்கிருந்துதான் பிரச்னைகள் கிளம்பும் எனத் தெரியவில்லை. ‘இதை நான் யோசிக்கவே இல்லயேடா…’ என்கிற ரீதியில், யாருமே எதிர்பார்க்காத பிரச்னை ஒன்று பூதாகரமாகக் கிளம்பிவிடும். அப்படிப்பட்ட ஒரு சிக்கலில் தற்போது மாட்டியிருக்கிறது விஜய் படம்.

‘மெர்சல்’ படத்துக்காக விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து க்ரீன் சிக்னக் கிடைக்கவில்லை என்கிறார்கள். படத்தில் புறா பறப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது. இந்தக் காட்சி, கிராஃபிக்ஸ் செய்யப்பட்டது என விலங்குகள் நல வாரியத்திடம் முறையான கடிதம் அளிக்கவில்லையாம்.

அத்துடன், படத்தில் ராஜநாகம் ஒன்றைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், கடிதத்தில் அது நாகப்பாம்பு என குறிப்பிடப்பட்டுள்ளதாம். இந்த இரண்டு பிரச்னைகளும் தீர்க்கப்பட்டால்தான், விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து முறையான அனுமதி கடிதம் கிடைக்கும். அதன்பிறகே படத்தை ரிலீஸ் செய்ய முடியும்.

ஏற்கெனவே தமிழக அரசின் கேளிக்கை வரியால் கடந்த 6ஆம் தேதி முதல் புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் இருக்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள். அந்தப் பிரச்னை தீபாவளிக்குள் தீர்ந்து படங்கள் ரிலீஸாகுமா என்ற கேள்வியே மிகப்பெரும் சந்தேகத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்க, எக்ஸ்ட்ரா பிரச்னையாக ‘மெர்சல்’ படத்துக்கு இதுவும் வந்து சேர்ந்திருக்கிறது.

விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தை, அட்லீ இயக்கியுள்ளார். நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ‘ஸ்பைடர்’ படத்தைத் தொடர்ந்து ‘மெர்சல்’ படத்திலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது. யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படத்தை, மூவாயிரம் தியேட்டர்களுக்கு மேல் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

×Close
×Close