Advertisment

மன்னர் வகையறா - சினிமா விமர்சனம்

நாயகி ஆனந்தியின் காமெடி ரசிக்கும் படியாக இருக்கிறது. விமலின் போனை உடைத்துவிட்டு, அதை சமாளிக்க அவர் சொல்லும் பொய்கள் அழகு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mannarvagaiyara

மூன்று குடும்பங்களுக்கு இடையே நடக்கும் பாசம், மோதலை காமெடியாக சொல்ல முயன்ற படம்.

Advertisment

பிரபுவுக்கு கார்த்திக், விமல் என இரண்டு மகன்கள். இருவரும் ஜெயப்பிரகாஷ் - சரண்யா தம்பதிகளின் இரு மகள்களையும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் காதலிக்கின்றனர்.

பிரபுவின் ஊரில் இறால் பண்ணை நடத்தி வந்த, சரண்யாவின் அண்ணன் மகனை விமல் அடித்துவிடுகிறார். அவரை பார்க்க வரும் சரண்யா குடும்பத்தினர் மூத்த மகளை, தனது அண்ணனின் 2வது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.

காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் என்பதை தாங்கிக் கொள்ளாமல், பிரபுவின் மூத்த மகன் கார்த்திக் மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயல்கிறார். அண்ணனுக்காக மணமகளை கடத்தி வந்து திருமணம் செய்து வைக்கிறார், விமல். இதனால், விமலின் காதலிக்கு அதே மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். விமல் என்ன செய்தார்? அவர் காதல் கைகூடியதா என்பதுதான் கதை.

விமலுக்கு ஆக்‌ஷன் ஹீரோ அறிமுகம் ஈர்க்கவில்லை. வக்கீலுக்கு தேர்வு எழுதும் விமலுக்கு கொடுக்கப்படும் பில்டப் தாங்க முடியவில்லை. ரோபோ சங்கர் காமெடி என்ற பெயரில் செய்யும் லூட்டி சகிக்கவில்லை. மகளின் வளைகாப்புக்கு செல்ல முயலும் சரண்யா குடும்பம் போடும் டிராமா, ‘எம்டன் மகன்’ படத்தை பார்த்ததைப் போன்ற உணர்வைத் தருகிறது.

ஆனால் நாயகி ஆனந்தியின் காமெடி ரசிக்கும்படியாக இருக்கிறது. அவரின் அழகு படத்துக்கு ப்ளஸ் பாயிண்ட். விமலின் போனை உடைத்துவிட்டு, அதை சமாளிக்க அவர் சொல்லும் பொய்கள் அழகு. தன்னை கலாய்க்க முயலும் விமலை, கயல் ‘அண்ணே’ என்று கலாய்க்கும் இடம் சிரிக்க வைக்கிறது. ‘அக்காவை அழைத்துச் செல்லும் போது இன்னொரு கையில் என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம்’ என்று சொல்லும் இடத்தில் ஆனந்தி உருக வைக்கிறார்.

அண்ணன் காதலை சேர்க்கும் இடத்திலும், இரண்டு குடும்பத்தை சேர்க்கும் இடத்திலும் விமல் மனதில் நிற்கிறார். ஆனால் சண்டை காட்சிகளின் இன்னும் அவர் மெனக்கட வேண்டும்.

வில்லனின் ஆட்கள் துரத்தும்போது பஸ்சில் ஏறும் விமலை, பஸ்சில் மடக்குகிறார்கள். விமலை வெட்ட வில்லன் ஆட்கள் அரிவாளை எடுக்கும் போது, பஸ்சில் இருந்த அனைவரும் அரிவாளை எடுக்கும் இடம் மனதில் நிற்கிறது. படத்தில் ஆங்காங்கே இதுபோன்ற காட்சிகள் இருக்கத்தான் செய்கிறது.

க்ளைமாக்ஸில் பிக் பாஸ் புகழ் ஜூலி வந்து போகிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் விமலும், ஆனந்தியும் பேசுவது, வடிவேலு - கோவை சரளா காமெடியை நினைவுபடுத்துகிறது.

பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ஒளிப்பதிவு அசத்தல். தெளிவான திரைக்கதையாக இருந்தாலும், டிவி சீரியல் பார்த்தது போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம்.

‘மன்னர் வகையறா’ சிரிக்க வைக்க முயல்கிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment