Advertisment

லட்சங்களில் முதலீடு, கோடிகளில் லாபம் - தயாரிப்பாளர் சஜித் நடியட்வாலாவின் மேஜிக்

'கண்ணாடியை வைரமாக்கும்' வித்தைக்கு காரணமாக அந்தப் படங்களின் இயக்குனர்கள் இருந்தாலும், சஜித்தின் தயாரிப்பிலேயே அவர்கள் அந்த வெற்றியை எட்டுகிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Baaghi-2

பாபு

Advertisment

'பத்து கோடி போட்டேன், பத்தாயிரம்கூட வரலை' என்ற புலம்பல்தான் திரைத்துறையில் பெரும்பாலும் கேட்கிறது. வடக்கே ஒருவர் லட்சங்களில் முதலீடு செய்து கோடிகளில் வாரிக் குவிக்கிறார். அவரும் தயாரிப்பாளர்தான். சஜித் நடியட்வாலா.

இந்தி திரையுலகின் முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவர் சஜித். போன வாரம் வெளியாகி கண்டமேனிக்கு ஓடிக்கொண்டிருக்கும் பாகி 2 படத்தின் தயாரிப்பாளர். போன வருடம் ஜுட்வா 2 என்று ஒரு படம் வந்ததே... அதுவும் இவர் தயாரிப்புதான். எத்தனையோ தயாரிப்பாளர்கள் இருக்க சஜித் ஏன் ஸ்பெஷல்?

Sajid-Nadiadwala தயாரிப்பாளர் சஜித் நடியட்வாலா

இப்போது ஓடிக்கொண்டிருக்கும் பாகி 2 படத்தையே எடுத்துக் கொள்வோம். ஹீரோ டைகர் ஷெராஃப். நம்ம ஜாக்கி ஷெராஃபின் மகன். பெரிய பிசினஸ் எல்லாம் இல்லை. ஆனால், படம் 7 நாளில் இந்தியாவில் மட்டும் 112.85 கோடிகளை வசூலித்திருக்கிறது. எப்படி? அங்குதான் சஜித் வருகிறார்.

பிறமொழிகளில் வெளிவந்த படங்களில் எது இந்திக்கு சரியாக வருமோ அதை கண்டுபிடிப்பதில் மனிதர் சூரர். அந்தப் படங்களின் ரீமேக் உரிமையை சில லட்சங்கள் கொடுத்து வாங்கி இந்தியில் பிரமாதப்படுத்திவிடுவார்.

பாகி 2 படம் தெலுங்கில் வெளிவந்த க்ஷனம் படத்தின் ரீமேக். இந்த தெலுங்குப் படத்தைதான் சிபி நடிப்பில் சத்யா என்ற பெயரில் தமிழில் எடுத்தனர். சத்யா சுமாராகவே போனது. சரி, இப்போது சத்யா படத்தின் போஸ்டரையும், பாகி 2 படத்தின் போஸ்டரையும் ஒப்பிட்டுப் பாருங்கள். சத்யா உள்ளூர் தயிர்வடை போல் சவசவவென்றிருக்கும். பாகி 2...? சில்வஸ்டர் ஸ்டாலோனின் ராம்போ படத்தின் ரீமேக் போல் சிக்ஸ்பேக், ஹெலிகாப்டர் என்று போட்டுத் தாக்கியிருப்பார்கள். படம் உலகம் முழுவதும் பம்பர் ஹிட். பாகி 2 காக்கை உட்கார பனம்பழம் விழுந்த வெற்றி அல்ல. அதுக்கொரு வரலாறு இருக்கிறது.

பாகி 2 படத்தின் முதல்பாகம் பாகி. 2016 இல் வெளியானது. இதே டைகர் ஷெராஃப் ஹீரோ. அந்தப் படம் 2004 இல் தெலுங்கில் வெளியான வர்ஷம் படத்தின் ரீமேக். இதே வர்ஷம் தமிழில் ஜெயம் ரவி, ஸ்ரேயா நடிப்பில் மழை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த வர்ஷம் படத்தை வெளிநாட்டில் முக்கிய காட்சிகளை படமாக்கி வேற லெவலில் வெளியிட்டார் சஜித். சுமார் 37 கோடிகளில் தயாரான படம், 127 கோடிகளை வசூலித்தது. வர்ஷம், மழை இரண்டின் வசூல் இதில் கால்வாசி வந்தால் ஆச்சரியம்.

சென்ற வருடம் சஜித் ஜுட்வா 2 படத்தை தயாரித்தார். இந்தமுறை அவர் வெளியே எங்கும் போகவில்லை. 1997 இல் தனது தயாரிப்பில் சல்மான் கான் நடிப்பில் வெளியான ஜுட்வா கதையையே இன்னும் மாடர்னாக எடுத்தார். வருண் தவான் ஹீரோ. படம் 200 கோடிகளுக்கு மேல் வசூலித்தது.

சஜித்தின் மாஸ்டர் பீஸ் இவை அல்ல. ஹவுஸ்ஃபுல் சீரிஸ்தான் அவரை உஸ்தாத் ஆக்கியது.

sathya சத்யா பட போஸ்டர்

ஹவுஸ்ஃபுல் படம் 2010 இல் வெளியானது. தமிழில் கமல், பிரபுதேவா நடிப்பில் வெளியான காதலா காதலா படத்தின் ரீமேக்தான் இப்படம். காதலா காதலா வெற்றிக்கோட்டை எட்டவே மூச்சுத் திணறியது. சஜித் அந்தக் கதையை சற்று மாற்றி லண்டன், இத்தாலி பின்னணியில் தயாரித்தார். படம் 100 கோடியைத் தாண்டி வசூலித்தது.

ஹவுஸ்ஃபுல் 2 படம் இன்னும் விசேஷம். காதலா காதலா வெளியான அதே 1998 இல் மலையாளத்தில் மாட்டுப்பட்டி மச்சான் என்ற படம் வெளியானது. முகேஷ், ஜெகதி ஸ்ரீகுமார் நடித்த அந்தப் படத்துக்கு அதிகபட்சம் 15 லட்சம் செலவளித்திருப்பார்களா சந்தேகம். அப்படியொரு மினிமம் பட்ஜெட் படம் அது. தமிழில் பிரபு, ரம்பா நடிப்பில் பந்தா பரமசிவம் என்ற பெயரில் மாட்டுப்பட்டி மச்சானை ரீமேக் செய்தனர். அந்தப் படத்தை வழக்கம்போல் தனது வர்ணப் பெயின்டுகளால் ஹவுஸ்ஃபுல் 2 ஆக்கினார் சஜித். லண்டன், பீட்டர்ஸ்பெர்க்கில் படம் தயாரானது. படம் அதிரிபுதிரி ஹிட்.

காதலா காதலா, மாட்டுப்பட்டி மச்சான் இரண்டும் சாதாரண கதைகள். பல கோடிகளை வசூலிக்கும் வலுவில்லாதவை. ஆனால், அந்தக் கதைகளை வெளிநாட்டுப் பின்னணியில், கதாபாத்திரங்களை மாடர்னாக்கி பம்பர்ஹிட்டை பெற்றார் சஜித். நிச்சயம் இந்தப் படங்களின் ரீமேக் உரிமைக்கு சில லட்சங்களே அவர் செலவளித்திருப்பார்.

சஜித்தின் இந்த 'கண்ணாடியை வைரமாக்கும்' வித்தைக்கு முக்கிய காரணமாக அந்தப் படங்களின் இயக்குனர்கள் இருந்தாலும், சஜித்தின் தயாரிப்பிலேயே அவர்கள் அந்த வெற்றியை எட்டுகிறார்கள். தபாங் போன்ற இந்தியில் வெற்றி பெற்ற படங்கள் தமிழில் ஒஸ்தியாக ஊதித்தள்ளப்படும் போது, சாதாரண லோக்கல் கதைகளை இன்டர்நேஷனல் லெவலுக்கு சஜித் கொண்டு போகிறார், கல்லா கட்டுகிறார்.

சஜித் இதனை எப்படி சாதிக்கிறார், ஒரு படத்தை ரீமேக் செய்யும்போது என்னென்ன மாற்றங்களை கதையில் செய்கிறார் என்பதை ஆராய்ந்தால், 'பத்து கோடி செலவளித்து பத்தாயிரம் திரும்ப வரலை' என்ற புலம்பல்களுக்கு விடை கிடைக்கலாம்.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment